நவமணி 22-06-2012
தம்புள்ள பள்ளிவாசல் தொடர்பில் சட்டரீதியான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டுவரும் நிலையில் முஸ்லிம் தலைவர்கள் மௌனம் காப்பது குறித்து பிரதேச முஸ்லிம்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்
.
நில அளவைத் திணைக்கள அதிகாரிகளால் பள்ளிக் காணிகளும், அருகிலுள்ள காணிகளும் அளவீடு செய்யப்பட்டுள்ளன. பொலிஸ், பிரதேச செயலகம் மற்றும் அரச ஸ்த்தாபனங்கள் இது தொடர்பில் நிர்வாகமட்ட செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றன. இந்த முயற்சிகளை உற்றநோக்குகையில் பள்ளியை அங்கிருந்து அகற்றுவதற்கு தீவிர மன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றதா என்ற சந்தேகம் தோன்றியுள்ளது.
எனவே உடனடியாக பள்ளியை அகற்றுவதற்கான இந்த முயற்சிகளை தடுத்து நிறுத்துவதற்கு அனைத்து தரப்பினரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் பெயர் குறிப்பிட விரும்பாத அந்த பள்ளி நிர்வாகி தெரிவித்தார்.
சட்டத்தரணி எம். அமானுல்லா இதுபற்றிக் குறிப்பிடுகையில், 1992 இல் பள்ளிவாசல் மற்றும் அருகிலுள்ள காணிகளைச் சுவீகரிக்கும் நோக்கில் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது. தேவைப்படுமிடத்து பொது நோக்கம் கருதி சுவீகரிக்கும் வகையிலான ஏற்பாடுகள் இவ்வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கடந்த காலங்களில் இச்சுவீகரிப்பு மேற்கொள்ளப்படாத போதிலும் இப்போது அதன் ஆட்சியுடைமையை பொறுவதற்கான பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. பள்ளிவாசல் காணியும் அருகிலுள்ள காணிகளும் நில அளவை செய்யப்பட்டுள்ளன. அரச அதிகாரியென்ற வகையில் தம்புள்ள பிரதேச செயலாளருக்கு இந்த கசெட் அறிவித்தலின் பிரகாரம் இவற்றின் ஆட்சியுடைமையை பெறுவதற்காக நீதிமன்றத்தின் ஆணையைப்பெற முடியும். நீதிமன்ற ஆணையின் பிரகாரம் இக்காணியையும், சட்டவிரோத கட்டிடங்களையும் அகற்றமுடியும் என்றார்.
அதேவேளை தம்புள்ள பள்ளி 1962 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், 1992 ஆம் ஆண்டிலேயே பொது நோக்கத்துக்காக காணி சுவீகரிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தம்புள்ள பள்ளியை சட்டவிரோத கட்டிடமாக இனம் காட்டமுடியாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தம்புள்ள பள்ளிவாசல் தொடர்பில் வக்ப் சபை, முஸ்லிம் சமய திணைக்களம், ஜம்மியத்துல் உலமா சபை உள்ளிட்ட முஸ்லிம் தலைவர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டிருப்பதாகவும் அவர்கள் பள்ளிக்கு எதுவும் நடக்காது என உறுதியளித்திருந்த போதிலும் எதுவும் நடக்கலாமென்ற கவலை காணப்படுவதாகவும் சட்டத்தரணி அமானுல்லா மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment