குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை எஸ்எம்எஸ் இல் அனுப்ப க்கூடாது என்று சௌதி அரசு பத்வா கொடுத்துள்ளதாக பரவலாக இப்போது எஸ்எம்எஸ் இல் செய்தி பரவி வருகிறது .ஏனென்றால் படித்த பிறகு அதை அழிக்க வேண்டிய நிலை உருவாகிறது. குர்ஆன் ஆயத்துகளை ஒரு முஸ்லிம் தன் கரத்தினாலே அழிப்பான் என்று கியாமத்து நாளின் அடையாளமாக கூறப்பட்டுள்ளது .இது உன்மையா? உங்கள் ஜாமத்தும் மொபைல் மூலமாக குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை எஸ்எம்எஸ் இல் அனுப்பி வருகிறது.
சப்ரோஸ்
பதில்
முஸ்லிம் தன் கரத்தாலே குர்ஆனை அழிக்கும் போது கியாமத் நாள் வரும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக ஆதாரப்பூர்வமான எந்தச் செய்தியையும் நம்மால் ஹதீஸ் நூற்களில் காண முடியவில்லை.
இப்படி ஒரு செய்தி ஹதீஸ் நூற்களில் இருந்தால் கூட இது ஆதாரப்பூர்வமான செய்தியாக இருக்க முடியாது. ஏனென்றால் இதன் கருத்து குர்ஆனுக்கு முரண்படுகின்றது.
இந்தக் குர்ஆனை கல்வியாளர்களின் உள்ளங்களில் தான் இறைவன் முழுமையாகப் பாதுகாத்துள்ளான். ஏட்டில் பதியப்பட்ட குர்ஆனை கையால் அழிப்பதால் குர்ஆனை இந்த உலகத்திலிருந்து அகற்றிவிட முடியாது.
بَلْ هُوَ آيَاتٌ بَيِّنَاتٌ فِي صُدُورِ الَّذِينَ أُوتُوا الْعِلْمَ وَمَا يَجْحَدُ بِآيَاتِنَا إِلَّا الظَّالِمُونَ (49)29
மாறாக, இவை தெளிவான வசனங்கள். கல்வி வழங்கப்பட்டோரின் உள்ளங்களில் இருக்கின்றன. அநீதி இழைத்தோரைத் தவிர வேறு எவரும் நமது வசனங்களை மறுக்க மாட்டார்கள்.
அல்குர்ஆன் (29 : 49)
மேலும் இந்தக் குர்ஆனை பாதுகாப்பதாக இறைவன் பொறுப்பேற்றுக் கொண்டான். இறைவனுடைய பாதுகாப்பை மீறி யாரும் குர்ஆனை அழிக்க முடியாது.
إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ (9)15
நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம்.
அல்குர்ஆன் (15 : 9)
குர்ஆனுடைய புனிதம் பற்றி சரியான தெளிவு இல்லாதவர்களே இவ்வாறு தவறான தீர்ப்புகளை வழங்குகின்றனர். குர்ஆன் என்றால் எது? அதை எவ்வாறு மதிப்பது? ஆகிய விபரங்களை அறிந்து கொண்டால் தான் இது பற்றி சரியான முடிவை எடுக்க முடியும்.
அல்லாஹ்வின் வார்த்தை என்பதால் தான் குர்ஆன் மகத்துவமடைகின்றது. இந்தக் குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து நபியவர்களுக்கு எழுத்து வடிவில் புத்தகமாக வரவில்லை. மாறாக ஓசை வடிவில் அருளப்பட்டது.
குர்ஆனை ஓசை வடிவில் கொண்டு வருவதற்கு எழுத்து உதவியாக இருக்கின்ற காரணத்தால் நமது வசதிக்காக அதை எழுத்து வடிவில் ஆக்கிக் கொண்டோம்.
இன்றைக்கு நவீன காலத்தில் குறுந்தகடுகளிலும் கணிணியிலும் செல்ஃபோன்களிலும் குர்ஆன் பதியப்படுகின்றது. குர்ஆன் பதியப்பட்டு விட்டதால் இந்த நவீன சாதனங்களுக்கு மகத்துவம் வந்துவிடுகிறது என்று யாரும் கருத மாட்டோம்.
குர்ஆன் என்பது மக்களுக்குப் பயன்படுகின்ற நல்லுபதேசமாகும். நல்லுபதேசத்தை மதிப்பதாக இருந்தால் அதை வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும். பிறருக்கு அதைப் பரப்ப வேண்டும். நல்லுபதேசங்களை மதிப்பதற்கு இதைத் தவிர்த்து வேறு வழி இல்லை.
ஒருவர் குர்ஆனை செல்ஃபோனில் பதியவைத்து அதை அழிக்காமல் வைத்திருந்தால் அவர் குர்ஆனை பதிய வைத்துக் கொண்டார் என்று கூறலாமே தவிர இதனால் அவர் குர்ஆனை மதித்தவராகிவிட மாட்டார். இதே போன்று தன்னுடைய தேவைக்காக குர்ஆன் பதியப்பட்ட ஃபைலை ஒருவர் சாதனத்திலிருந்து அகற்றினால் அவர் குர்ஆனை இழிவுபடுத்தியவராக மாட்டார்.
நவீன சாதனங்களில் குர்ஆனைப் பதிய வைப்பதும் பதியப்பட்ட ஃபைலை அழிப்பதும் நம்முடைய சொந்த வசதிக்காகவே செய்கிறோம். குர்ஆனுக்கு மரியாதை செலுத்துதல் என்றோ அவமதித்தல் என்றோ இதை யாரும் செய்வதில்லை.
ஒரு பொருள் நமக்குத் தேவைப்பட்டால் வைத்துக் கொள்வோம். தேவைப்படாவிட்டால் அழித்து விடுவோம். குர்ஆனில் தேவையானது தேவையற்றது என்று பிரிக்க்க் கூடாது. ஆனால் குர்ஆன் பதியப்பட்ட பொருள் நமக்குத் தேவைப்படலாம். தேவைப்படாமலும் போகலாம். உஸ்மான் (ரலி) அவர்கள் தேவையற்ற குர்ஆன் பிரதிகளை எரித்ததும் இந்த அடிப்படையில் தான்.
அச்சடிக்கப்பட்ட எத்தனையோ குர்ஆன் பிரதிகள் கிழிந்து பயன்படுத்த முடியாத நிலையை அடைந்திருக்கின்றது. இந்தப் பிரதிகளை அழிக்கக்கூடாது. பாதுகாக்க வேண்டும் என்று சவூதி அறிஞர்கள் கூறுவதில்லை. அப்படிக் கூறினாலும் அது நடைமுறைக்கு சாதியமில்லாத கூற்றாகவே இருக்கும்.
எனவே மெஸ்ஸேஜ்கள் மூலம் குர்ஆன் வசனங்களை டைப் செய்து மக்களுக்குப் பரப்புவது தவறில்லை. இவ்வாறு அனுப்பப்பட்ட மெஸ்ஸேஜ்களைப் படித்துவிட்டு அதை நீக்குவதும் தவறில்லை.
பதில்வழங்கியவா்-PJ
இந்த செய்தியை இங்கே Facebook , Twitter மூலம் பகிர்ந் மார்க்க பணிக்கு உதவுங்கள்.
0 comments:
Post a Comment