Home » , » அரபா நோன்பு பற்றிய சில தெளிவுகள்

அரபா நோன்பு பற்றிய சில தெளிவுகள்

Written By STR Rahasiyam on Wednesday, October 24, 2012 | 1:55 AM


அரபா நாளில் ஹஜ் கடமையை நிறைவேற்றாத மற்றவர்கள் தான் நோன்பு வைக்க வேண்டுமா? ஹாஜிகள் அரபா மைதானத்தில் கூடியிருக்கும் நாளில் தான் அரபா நோன்பு உள்ளதா? அல்லது பிறை ஒன்பது அன்று அரபா நோன்பு உள்ளதா? போன்ற கேள்விகளுக்குப் பதிலாக சில விளக்கங்களை காலத்தின் தேவை கருதி வெளியிடுகிறோம்.
அரஃபாவில் தங்கும் ஹாஜிகள் அரஃபா நாளன்று நோன்பு நோற்பது கூடாது என்பதற்கு பின்வரும் செய்தியை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.
2084 حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا حَوْشَبُ بْنُ عُقَيْلٍ عَنْ مَهْدِيٍّ الْهَجَرِيِّ حَدَّثَنَا عِكْرِمَةُ قَالَ كُنَّا عِنْدَ أَبِي هُرَيْرَةَ فِي بَيْتِهِ فَحَدَّثَنَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ صَوْمِ يَوْمِ عَرَفَةَ بِعَرَفَةَ رواه أبو داود
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
அரஃபாவில் உள்ளவர்கள் அரஃபா நாளில் நோன்பு நோற்பதை விட்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.
அபூதாவூத் (2084)
இதில் இடம்பெறும் மஹ்தீ பின் ஹரிப் என்ற அறிவிப்பாளரின் நம்பகத் தன்மை உறுதி செய்யப்படவில்லை. எனவே இது பலவீனமான செய்தி.
ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜ் செய்த போது அரஃபா நாளில் நோன்பு நோற்கவில்லை. எனவே ஹஜ் செய்பவர்கள் அன்று நோன்பு நோற்பது கூடாது என்று இந்த ஹதீஸை அடிப்படையாக வைத்து கூறப்படுகின்றது.
1989حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ أَوْ قُرِئَ عَلَيْهِ قَالَ أَخْبَرَنِي عَمْرٌو عَنْ بُكَيْرٍ عَنْ كُرَيْبٍ عَنْ مَيْمُونَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ النَّاسَ شَكُّوا فِي صِيَامِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ عَرَفَةَ فَأَرْسَلَتْ إِلَيْهِ بِحِلَابٍ وَهُوَ وَاقِفٌ فِي الْمَوْقِفِ فَشَرِبَ مِنْهُ وَالنَّاسُ يَنْظُرُونَ رواه البخاري
மைமூனா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
அரஃபா நாளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கிறார்களா என்பதில் மக்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. நான் அரஃபாவில் தங்கியிருந்த நபி (ஸல்) அவர்களிடம் பால் பாத்திரத்தைக் கொடுத்தனுப்பினேன். மக்களெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க அதை நபி (ஸல்) அவர்கள் குடித்தார்கள்.
புகாரி (1989)
அரஃபா நாளில் ஹாஜிகள் நோன்பு நோற்பது நபிவழி அல்ல என்பதற்கு மேற்கண்ட ஹதீஸை ஆதாரமாகக் கொள்ளலாம். ஹாஜிகள் அல்லாத மற்றவர்கள் அரஃபா நாளில் நோன்பு வைப்பதற்கு பின்வரும் செய்தியே ஆதாரமாக அமைந்துள்ளது.
1976 قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثٌ مِنْ كُلِّ شَهْرٍ وَرَمَضَانُ إِلَى رَمَضَانَ فَهَذَا صِيَامُ الدَّهْرِ كُلِّهِ صِيَامُ يَوْمِ عَرَفَةَ أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ وَالسَّنَةَ الَّتِي بَعْدَهُ وَصِيَامُ يَوْمِ عَاشُورَاءَ أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ رواه مسلم
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
அரஃபா நாள் நோன்பு அதற்கு முந்தைய ஆண்டு மற்றும் அதற்குப் பிந்தைய ஆண்டு பாவங்களுக்குப் பரிகாரமாகும்.
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி),
நூல் : முஸ்லிம் 1976
மேற்கண்ட ஹதீஸில் அரஃபா நாளில் நோன்பு வைத்தால் பாவங்கள் மன்னிக்கப்படும் என்றே கூறப்படுகின்றது.
ஹாஜிகள் என்று மக்காவில் கூடுகின்றார்களோ அதே நாளில் மற்றவர்கள் நோன்பு நோற்க வேண்டும் என்று நீங்கள் கூறுவது போல் எந்த ஹதீஸிலும் வாசகம் இடம் பெறவில்லை.
துல் ஹஜ் மாதம் பிறை ஒன்பதாவது நாளே அரஃபாவுடைய நாள். அவரவர் பகுதியில் பிறை பார்க்கப்பட்டு எப்போது துல்ஹஜ் மாதம் பிறை 9 வருகின்றதோ அந்த நாளே அவருக்கு அரஃபாவுடைய நாள் என்பதே சரியான கருத்தாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் பதிமூன்று வருட காலங்கள் வாழ்ந்துள்ளார்கள். இக்கால கட்டத்தில் அரஃபாவுடைய நாளை நிச்சயம் அவர்கள் அடைந்திருப்பார்கள்.
மக்காவில் ஹாஜிகள் எப்போது கூடுகிறார்கள் என்று பார்த்து அன்றைய நாளில் தான் மற்ற பகுதியில் உள்ளவர்களும் நோன்பு நோற்க வேண்டும் என்று சட்டம் இருக்குமேயானால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவிலிருந்து ஒருவரை மக்காவிற்கு அனுப்பி ஹாஜிகள் எப்போது கூடுகிறார்கள் என்பதைப் பார்த்து விட்டு வருமாறு கூறியிருப்பார்கள். அவர் வந்த பிறகு அந்த நாளில் நோன்பு நோற்றிருப்பார்கள்.
ஆனால் ஹதீஸ்களில் இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்ததாக எந்த ஒரு சம்பவமும் இடம் பெறவில்லை. எனவே மதீனாவில் பிறை பார்த்ததின் அடிப்படையில் அவர்களுக்கு பிறை ஒன்பது எப்போது வந்ததோ அந்த நாளில் தான் நபிகள் நாயகம்  (ஸல்) அவர்கள் அரஃபா நாள் நோன்பை நோற்றார்கள் என்பது தெளிவாகின்றது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வஹீ மூலம் ஹாஜிகள் அரஃபாவில் கூடும் நாளை அல்லாஹ் அறிவித்துக் கொடுத்திருப்பான் என்று சிலர் கூறுவது ஏற்க முடியாததாகும். அல்லாஹ் வஹீ மூலம் அறிவித்துக் கொடுத்தால் அது பற்றி அல்லாஹ்வின் தூதர் சொல்லி இருப்பார்கள்.
மேலும் மதீனாவில் மட்டும் முஸ்லிம்கள் வாழவில்லை. மதீனாவுக்கு வெளியில் ஏராளமான முஸ்லிம்கள் வாழ்ந்தனர். அவர்களுக்கு ஹாஜிகள் அரஃபாவில் கூடும் தினம் தெரிய வழி இல்லை. அந்த ஊர்வாசிகள் தமது ஊர்களில் பிறை பார்த்த அடிப்படையில் தான் அரஃபா தினத்தை முடிவு செய்திருப்பார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் காலத்து மக்கள் தங்கள் பகுதியில் பிறை பார்த்த அடிப்படையில் தான் அரஃபா நாளை முடிவு செய்திருப்பார்களே தவிர மக்காவில் கூடுவதை அறிந்து முடிவு செய்திருக்கவே முடியாது.
ஹாஜிகள் அரபாவில் கூடும் நாள் தால் உலகம் முழுமைக்கும் அரபா நாள் என்று ஒருவர் கூறினால் இந்த விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் தவறிழைத்து விட்டார்கள் என்று பழி சுமத்துகிறார்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் எப்படி அரஃபா நாளை முடிவு செய்தார்களோ அப்படி முடிவு செய்வதை தவறு என்று சொல்லும் எந்தக் கருத்தும் நச்சுக் கருத்தாகும் என்பதை விளங்கிக் கொண்டால் இது போன்ற கேள்விகளுக்கு இடமில்லை.
Share this article :

0 comments:

Post a Comment


உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை இலவசமக உங்கள் கைத்தொலைபேசி மூலம் பெற்றுக் கொள்ளுங்கள். Follow <இடைவெளி> strfn என டைப் செய்து 40404க்கு SMS அனுப்புங்கள்

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. www.strfn.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger