Rasmin m.i.sc
நபியவர்களை கேவலப்படுத்தி அமெரிக்கர்களினால் தயாரிக்கப்பட்ட வீடியோ காட்சியின் புகைப்படங்களை தினக்குரல் பத்திரிக்கை கடந்த 22.09.2012 சனிக்கிழமை வெளியிட்டது.
இது தொடர்பில் நேற்று (25.09.2012) மாலை தினக்குரல் அலுவலகத்திற்கு சென்ற ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தலைவர் உள்ளிட்ட நிர்வாகத்தினர் ஜமாத்தின் கண்டன அறிக்கையை பத்திரிக்கை நிர்வாகத்திற்கு கையளித்ததுடன் இது தொடர்பில் பகிரங்க மண்ணிப்பு கேட்காவிடில் ஜனநாயக மற்றும் சட்ட ரீதியில் ஜமாத் கடும் நடவடிக்கை எடுக்கும் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து இன்று (26.09.2012) காலை 11 மணிக்கு தினக்குரல் பத்திரிக்கையின் ஆசிரியர் பீடம் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகளை சந்திப்பதற்கு விரும்புவதாக வேண்டுகோள் விடுத்ததைத் தொடர்ந்து ஜமாத்தின் தேசிய தலைவர் ஆர்.எம். ரியால் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் மற்றும் நிர்வாகிகளான ரிஸா, ரஸ்மின் உள்ளிட்ட குழுவினர் தினக்குரல் ஆசிரியர் பீடத்தை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையின் போது உருவப்படங்கள் தொடர்பில் இஸ்லாத்தின் நிலைபாட்டையும், அனைவரையும் படைத்த அல்லாஹ்வுக்கோ அல்லது நபியவர்களுக்கோ இஸ்லாம் ஏன் உருவப்படத்தை ஏற்படுத்தவில்லை என்பது தொடர்பிலும் ஜமாத்தின் செயலாளர் சகோ. அப்துர் ராசிக் தெளிவுபடுத்தினார்.
இஸ்லாமியர்களின் மனம் வேதனை அடையும் விதமாக தாம் வெளியிட்ட செய்தி தொடர்பில் ஆழ்ந்த கவலை தெரிவித்துக் கொள்வதாகவும், நாளைய (27.09.2012) தினக்குரல் பத்திரிக்கையில் இது தொடர்பில் கவலை தெரிவிக்கும் ஆக்கத்தை வெளியிடுவதாக பத்திரிக்கையின் பிரதம ஆசிரியர் ஜமாத் நிர்வாகத்திடம் உறுதியளித்தார்.
சந்திப்பின் இறுதியில் திருமறைக் குர்ஆன் மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம், இஸ்லாமியக் கொள்கை விளக்கம் போன்ற புத்தகங்களும் பத்திரிக்கையின் பிரதம ஆசிரியருக்கு வழங்கப்பட்டது.
0 comments:
Post a Comment