சவூதி அரேபியாவில் ஷியா பிரிவு தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டதற்கு எதிராக இடம்பெற்ற மக்கள் ஆர்ப்பாட்டத்தின் போது பாதுகாப்பு பிரிவினருடன் ஏற்பட்ட மோதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
அரச அதிருப்தி கருத்துக்களை பிரசாரம் செய்த ஷெயிக் நிமிர் அல் நிமிர் என்ற முன்னணி ஷியா பிரிவு தலைவர் சவூதி பாதுகாப்பு படையினரால் நேற்று முன்தினம் துப்பாக்கிச்சூடு நடத்தி துரத்தி பிடித்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து கிழக்கு சவூதி அரேபியாவில் ஆயிரக்கணக்கான ஷியாகள் இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். எனினும் பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சண்டைக்கு பின்னரே நிமிர் கைது செய்யப்பட்டதாக சவூதி செய்திச்சேவை குறிப்பிட்டுள்ளது.
சவூதி மன்னர் குடும்பத்திற்கு எதிராகக் கருத்துக்களை வெளியிட்டுவரும் நிமிர் அல் நிமிர் நீண்டகாலமாக தேடப்பட்டு வந்தவராவார். கடந்த ஆண்டு சவூதி அரசுக்கு எதிராக ஷியா பிரிவு முஸ்லிம்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை இவரே முன்னின்று நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவில் குறைந்தது 2 மில்லியன் ஷியா பிரிவு முஸ்லிம்கள் வசிப்பதாக நம்பப்படுகிறது. இவர்கள் தமக்கான உரிமைகளை கோரி அரசுக்கு எதிராக அடிக்கடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். TN
0 comments:
Post a Comment