உலகில் ஒருவர் எங்கிருந்தாலும் அவருடன் சுலமாக பேசும் வசதி இணையதளத்தில் உள்ளது. இதைப் பலர் முறைகேடாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
அந்நியப் பெண்களுடன் ஆபாசமாகவும் குழைந்தும் பேசுகின்றனர். பொழுது போக்கிற்காக தேவையற்ற பேச்சுக்களை மணிக்கணக்கில் பேசுபவர்களும் உண்டு. இதற்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை.
நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள்.
(அல்குர்ஆன் 33:32,33)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
விபசாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். (மர்ம உறுப்பின் விபச்சாரம் மட்டுமல்ல; கண்ணும் நாவும் கூட விபச்சாரம் செய்கின்றன.) கண் செய்யும் விபச்சாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது; இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகிறது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : புகாரி (6612)
அந்நியப் பெண்ணுடன் தனிமையில் பேசுவது தவறு என்பதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த விஷயத்தில் தன் மீது சந்தேகம் வராத அளவிற்கு கவனமாக நடந்து கொண்டார்கள்.
ஸஃபிய்யா பின்த்து ஹுயை (ரலி) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளிவாசலில் தங்கி) இஃதிகாஃப் இருந்தார்கள். ஓர் இரவில் அவர்களைச் சந்திப்பதற்காக அவர்களிடம் நான் சென்றேன். நான் அவர்களிடம் (சிறிது நேரம்) பேசிவிட்டு திரும்பிச் செல்ல எழுந்தேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் என்னைத் திருப்பியனுப்புவதற்காக என்னுடன் வந்தார்கள். - உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களின் வீடே அவர்களின் இருப்பிடமாக இருந்தது- (என அறிவிப்பாளர் கூறுகிறார்.) அப்போது அன்சாரிகளில் இருவர் அந்த வழியாகச் சென்றார்கள். அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கண்டவுடன் விரைந்து நடக்கலானார்கள். உடனே, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "நிதானமாகச் செல்லுங்கள். இவர் (என் மனைவி) ஸஃபிய்யா பின்த்து ஹுயை தான்'' என்று சொன்னார்கள். இதைக் கேட்ட அவ்விருவரும், "அல்லாஹ் தூயவன். அல்லாஹ்வின் தூதரே! (தங்களையா நாங்கள் சந்தேகிப்போம்?)'' என்று சொன்னார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "ஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்களில் (கூட) ஓடுகிறான். உங்கள் உள்ளங்களில் அவன் தீய எண்ணம் எதையேனும் போட்டு விடுவான் ...அல்லது உங்கள் உள்ளங்களில் (சந்தேகம்) எதையாவது அவன் போட்டு விடுவான்... என்று நான் அஞ்சினேன்'' என்று சொன்னார்கள்.
புகாரி (3281)
மேலும் அந்நியப் பெண்ணுடன் தனித்திருப்பதும் கூடாது. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே மட்டும் உரையாடல் நடந்தால் அதுவும் தனிமை தான்.
ஒரு பெண்ணுடன் எந்த (அந்நிய) ஆடவனும் தனிமையில் இருக்க வேண்டாம். (மண முடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினருடன் அவள் இருக்கும் போதே தவிர. ஒரு பெண் மணமுடிக்கத் தகாத நெருங்கிய ஆணுடன் தவிர பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நூல்: முஸ்லிம் 2611)
உங்களில் எவரும் (அந்நியப்) பெண்ணுடன் தனித்து இருக்க வேண்டாம்! ஏனெனில் ஷைத்தான் உங்களில் இருவரில் மூன்றாம் நபராக இருப்பான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நூல்: அஹ்மத் 109)
பதில் வழங்கியவா்-PJ
இந்த செய்தியை இங்கே Facebook , Twitter மூலம் பகிர்ந் மார்க்க பணிக்கு உதவுங்கள்.
0 comments:
Post a Comment