இவ்வாண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணம் இன்று மாலை 6.16 முதல் இரவு 9.48 மணிவரையான காலப்பகுதியில் நிகழவுள்ளது.
இருப்பினும் இந்த சந்திர கிரகணம் இன்று இரவு 11 மணிக்கே முழுமையாக நிறைவடையும்.
இன்றைய சந்திர கிரகணத்தை இலங்கையில் முழுமையாக காணக்கூடியதாக இருக்கும் என ஆத்தர் சி.கிளார்க் மத்திய நிலையம் குறிப்பிட்டது.
சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி குறுக்கிடுவதால் சந்திர கிரகணம் ஏற்படுகின்றது. இதன்போது சூரியனின் நிழல் பூமியை ஊடறுத்து சந்திரனில் படியும் போது சந்திரனின் நிறத்தில் மாற்றம் ஏற்படும் என வானியல் ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன.
இதன்படி பூமியின் நிழல் சந்திரனை முழுமையாக மறைத்து 51 நிமிடங்கள் நீடிக்கவுள்ளது. இவ்வாறு இலங்கை நேரப்படி இன்று இரவு 7.36 மணி முதல் 8.27 மணிவரை முழு சந்திர கிரகணம் தென்படவுள்ளது. மொத்தமாக இந்த சந்திர கிரகணம் 3 மணி 52 நிமிடம் 17 வினாடிகள் நீடிக்கவுள்ளதாக ஆத்தர் சி. கிளார்க் மத்திய நிலையம் தெரிவித்தது.
நன்றி : தமிழ் மிரர்
இனி கிரகணங்கள் குறித்து இஸ்லாம் கூறும் தகவல்களை அறிந்து கொள்வோம்.
இறைவன் விடுக்கும் எச்சரிக்கை
சூரிய கிரகணம் ஏற்பட்டபோது நபி (ஸல்) அவர்கள் உலக முடிவு நாள் வந்து விட்டதோ என்று அஞ்சித் திடுக்குற்றவர்களாக எழுந்து பள்க்குச் சென்றார்கள்.
நிலை, ருகூஉ, சஜ்தா ஆகியவற்றை நீண்ட நெடிய நேரம் செய்து தொழுதார்கள். நான் ஒருபோதும் அவர்கள் அவ்வாறு செய்யக் கண்டதில்லை. (தொழுகை முடிந்ததும்), அல்லாஹ் அனுப்பிவைக்கும் இந்த அடையாளங்கள் எவரது இறப்புக்காகவும் எவரது பிறப்புக்காகவும் ஏற்படுபவை அல்ல. எனினும் அல்லாஹ் தன் அடியார்களை இவற்றின் மூலம் எச்சரிக்கவே செய்கிறான். இவற்றில் ஏதேனும் ஒன்றை நீங்கள் கண்டால் அவனை நினைவு கூர்வதிலும் அவனிடம் பிரார்த்திப்பதிலும் அவனிடம் பாவமன்னிப்புக் கோருவதிலும் நீங்கள் கவனம் செலுத்துங்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமூசா அல்அஷ்அரீ (ரலி),
நூல்: புகாரி 1059
உண்மையில் நபி (ஸல்) அவர்கள் அஞ்சியது போல் கிரகணம் என்பது ஒரு குட்டி கியாமத் நாளாகத் தான் அமைகின்றது. கொம்புள்ள இரண்டு ஆடுகள் கால் முட்டிகளைத் தூக்கிக் கொண்டு முட்டுவதற்கு ஆயத்தமாகி நிற்பது போல் மூன்று கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் நிற்கின்றன.
வானம் பிளக்கும் போது எண்ணையைப் போல் சிவந்ததாக ஆகும்.
அல்குர்ஆன் 55:37
சந்திர கிரகணத்தின் போது வெண்ணிலவு சிவந்து எரிவது போன்று வானம் எங்கும் சிவப்பு வண்ணம் தெளிக்கப்பட்டது போல் காட்சியளிக்கின்றது. இது கியாமத் நாளை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துவது போன்றுள்ளது.
கங்கண சூரிய கிரகணத்தின் போது, சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் நெருப்பு பற்றி எரிவது போல் தோன்றுகின்றது. ஏதோ மறு நொடியில் மறுமை துவக்கம் அமைந்து விடுமோ என்பது போன்ற ஒரு கோர பயம் நம்மை ஆட்கொள்கின்றது.
கியாமத் நாள் வரை இரவை உங்களுக்கு அல்லாஹ் நிரந்தரமாக்கி விட்டால் அல்லாஹ்வையன்றி உங்களுக்கு ஒளியைக் கொண்டு வரும் இறைவன் யார் என்பதற்குப் பதில் சொல்லுங்கள்! செவியுற மாட்டீர்களா?” என்று கேட்பீராக! (அல்குர்ஆன் 28:71)
இந்த வசனத்தில் அல்லாஹ் நம்மை அச்சுறுத்துவது போன்று, பூமியில் விழும் நிழலைத் தொடரச் செய்து விட்டால் அவனைத் தவிர வேறு யார் வெளிச்சத்தைத் தர முடியும்?
கிரகணம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களிடம் இருந்து கொண்டிருந்தோம். அப்போது சூரியகிரகணம் ஏற்பட்டது. உடனே நபி (ஸல்) அவர்கள் எழுந்து தமது மேலாடையை இழுத்துக் கொண்டே பள்ளிவாசலுக்குள் சென்றார்கள். நாங் களும் சென்றோம். (கிரகணம் விலகி) வெளிச்சம் வரும் வரை எங்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள். பிறகு, சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரு சான்றுகளாகும். எவருடைய இறப்புக்காகவும் சூரிய சந்திர கிரகணங்கள் ஏற்படுவதில்லை. எனவே, அவற்றை நீங்கள் கண்டால் உங்களுக்கு ஏற்பட்ட (கிரகண மான)து அகற்றப்படும் வரை நீங்கள் தொழுங்கள்; பிரார்த்தியுங்கள் என்று கூறினார்கள்.
ஆதாரம்: புகாரி 1040
அபூபக்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
கிரகணம் ஏற்படும் போது அஸ்ஸலாத்து ஜாமிஆ (தொழுகை வாருங்கள்) என்று மக்களுக்கு அழைப்புக் கொடுக்க வேண்டும்.
பள்ளியில் தொழ வேண்டும்
இரண்டு ரக்அத்கள் ஜமாஅத்தாகத் தொழ வேண்டும்.
இமாம் சப்தமிட்டு ஓத வேண்டும்
ஒவ்வொரு ரக்அத்திலும் இரண்டிரண்டு ருகூவுகள் செய்ய வேண்டும்
நிலை, ருகூவு, ஸஜ்தா ஆகியவை மற்றத் தொழுகைகளை விட மிக நீண்டதாக இருக்க வேண்டும்
கிரகணம் ஏற்படும் போது தக்பீர் அதிகம் கூற வேண்டும். மேலும் திக்ர் செய்தல், பாவமன்னிப்புத் தேடல், தர்மம் செய்தல் ஆகியவற்றிலும் ஈடுபட வேண்டும்.
இவற்றுக்கான ஆதாரங்கள் வருமாறு:
‘நீங்கள் கிரகணத்தைக் காணும் போது தொழுகைக்கு விரையுங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: புகாரீ 1046, முஸ்லிம் 1500
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்ட போது ’அஸ்ஸலாத்து ஜாமிஆ’ என்று அழைப்புக் கொடுக்கப்பட்டது.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்கள்: புகாரீ 1051, முஸ்லிம் 1515
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே அவர்கள் பள்ளிக்குச் சென்றார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னால் அணி வகுத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் தக்பீர் கூறினார்கள். நீண்ட நேரம் ஓதினார்கள்…
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: புகாரீ 1046, முஸ்லிம் )1500
நபி (ஸல்) அவர்கள் கிரகணத் தொழுகையில் சப்தமிட்டு ஓதினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: புகாரீ 1065, முஸ்லிம் 1502
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே அவர்கள் பள்ளிக்குச் சென்றார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னால் அணி வகுத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் தக்பீர் கூறினார்கள். நீண்ட நேரம் ஓதினார்கள். பின்னர் தக்பீர் கூறி நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். பின்னர் ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று கூறி நிமிர்ந்தார்கள். ஸஜ்தாவுக்குச் செல்லாமல் நீண்ட நேரம் – முதலில் ஓதியதை விடக் குறைந்த நேரம் – ஓதினார்கள். பின்னர் தக்பீர் கூறி முதல் ருகூவை விடக் குறைந்த அளவு ருகூவுச் செய்தார்கள். பிறகு ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா ரப்பனா வ லகல் ஹம்து என்று கூறிவிட்டு ஸஜ்தாச் செய்தார்கள். இது போன்றே மற்றொரு ரக்அத்திலும் செய்தார்கள். (இரண்டு ரக்அத்களில்) நான்கு ருகூவுகளும் நான்கு ஸஜ்தாக்களும் செய்தார்கள். (தொழுகை) முடிவதற்கு முன் கிரணகம் விலகியது. பிறகு எழுந்து அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்ப புகழந்தார்கள். பின்னர் ’இவ்விரண்டும் (சூரியன், சந்திரன்) அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவையாகும். எவரது மரணத்திற்கோ, வாழ்விற்கோ கிரகணம் பிடிப்பதில்லை. நீங்கள் கிரகணத்தைக் காணும் போது தொழுகைக்கு விரையுங்கள்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: புகாரீ 1046, முஸ்லிம் 1500
‘நபி (ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்ட போது அஸ்ஸலாத்து ஜாமிஆ’ என்று அழைப்பு கொடுக்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் ஒரு ரக்அத்தில் இரண்டு ருகூவுகள் செய்தார்கள். பின்னர் எழுந்து மற்றொரு ரக்அத்திலும் இரண்டு ருகூவுகள் செய்தார்கள். பின்னர் கிரகணம் விலகியது. அன்று செய்த ருகூவுவைப் போல் நீண்ட ருகூவை நான் செய்ததில்லை. அன்று செய்த நீண்ட ஸஜ்தாவைப் போல் நீண்ட ஸஜ்தாவை நான் செய்ததில்லை’என்று ஆயிஷா (ரலி) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்: முஸ்லிம் 1515
கிரகணத்தின் போது துஆ, தக்பீர், தொழுகை, தர்மம்
‘கிரகணத்தை நீங்கள் காணும் போது அல்லாஹ்விடம் துஆச் செய்யுங்கள்; அவனைப் பெருமைப்படுத்துங்கள்;தொழுங்கள்; தர்மம் செய்யுங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: புகாரீ 1044, முஸ்லிம் 1499
சூரிய கிரகணம் ஏற்பட்ட போது நபி (ஸல்) அவர்கள் கியாமத் நாள் வந்து விட்டதோ என்று அஞ்சித் திடுக்குற்று எழுந்தார்கள். உடனே பள்ளிக்கு வந்து தொழுதார்கள். நிற்பது, ருகூவு செய்வது ஸஜ்தாச் செய்வது ஆகியவற்றை நான் அது வரை பார்த்திராத அளவுக்கு நீட்டினார்கள். (பின்னர் மக்களை நோக்கி) ’இந்த அத்தாட்சிகள் எவரது மரணத்திற்காகவோ, வாழ்விற்காகவோ ஏற்படுவதில்லை. எனினும் தனது அடியார்களை எச்சரிப்பதற்காக அல்லாஹ் அனுப்புகிறான். இவற்றில் எதையேனும் நீங்கள் கண்டால் இறைவனை நினைவு கூரவும், பிரார்த்திக்கவும்,பாவமன்னிப்புத் தேடவும் விரையுங்கள்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ மூஸா (ரலி)
நூல்கள்: புகாரீ 1059, முஸ்லிம் 1518
0 comments:
Post a Comment