இங்கிலாந்தில் நாலரை மாத குழந்தைக்கு பாதி இதயம்தான் இருக்கிறது என்பது தெரியவந்துள்ளது. சிக்கலான ஆபரேஷன் மூலம் குழந்தையை டாக்டர்கள் உயிர்பிழைக்க வைத்துள்ளனர். இங்கிலாந்தின் கிளாஸ்கோ நகரை சேர்ந்தவர் பீட்டர் (30). இவரது மனைவி நிகோலா (28). பள்ளி ஆசிரியை. இவர்களுக்கு 2 குழந்தைகள். மூத்தவன் நதானியல் (2). இரண்டாவதாக பெண் குழந்தை ஸ்கார்லட் டாகன் பிறந்து நான்கரை மாதங்கள் ஆகின்றன.மகள் ஸ்கார்லட் மிகவும் சுட்டி. அண்ணன் நதானியலுடன் சேர்ந்து துறுதுறுவென விளையாடுவாள். இந்நிலையில், அவளுக்கு திடீர் திடீரென மூச்சு வாங்க ஆரம்பித்தது. குப்பென்று வியர்த்துக் கொட்டும். இடைவிடாமல் அழுவாள்.
இரவு முழுவதும் கொட்டக் கொட்ட விழித்திருப்பாள். நரக வேதனையில் அவள் துடிப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நிகோலா மகளை யார்க்ஹில் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். குழந்தை ஸ்கார்லட்டை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவளது இதயம் அரைகுறையாக வளர்ந்திருப்பதை கண்டுபிடித்தனர்.ஸ்கார்லட்டுக்கு ஹைப்போபிளாஸ்டிக் ரைட் ஹார்ட் சிண்ட்ரோம் என்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவளது இதயத்தின் வலது பக்கம் முழுமையாக வளர்ச்சி அடையவில்லை. அரிதாக இதுபோன்ற குழந்தைகள் பிறப்பதுண்டு. பாதி இதயம் மட்டுமே இருப்பதால், நுரையீரலுக்கு போதுமான ரத்தத்தை பம்ப் செய்து அனுப்ப முடியாது.
இதனால், அத்தகைய குழந்தைகள் சில நாட்களிலேயே இறந்துவிடும். நாலரை மாதமாக ஸ்கார்லட் பிழைத்திருப்பது ஆச்சரியம். கர்ப்ப காலத்தின் 22-வது வாரத்தில் ஸ்கேன் செய்யும்போது இந்த குறைபாடு தெரிந்துவிடும். நிகோலாவை பரிசோதித்த டாக்டர் எப்படி கவனிக்காமல் விட்டார் என்பது தெரியவில்லை என டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, குழந்தை ஸ்கார்லட்டுக்கு 2 ஆபரேஷன்கள் செய்யப்பட்டன. நுரையீரலுடன் ரத்தக் குழாய்களை நேரடியாக இணைத்தனர். தற்போது இதயம் பம்ப் செய்யாமலேயே நுரையீரலுக்கு ரத்தம் ஓட்டம் கிடைத்து வருகிறது.
அதனால், திணறல் இல்லாமல் அவள் மூச்சு விடுகிறாள். தற்போது ஸ்கார்லட் நலமுடன் இருக்கிறாள். அண்ணன் நதானியல் உள்பட அனைவருடன் உற்சாகமாக விளையாடுகிறாள். ஆனால், கடுமையான விளையாட்டுகள், மூச்சு வாங்கும் பயிற்சிகள் போன்றவற்றில் அவள் ஈடுபடவே கூடாது என்று டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். டீன்ஏஜ் அடையும்போது, இதய மாற்று ஆபரேஷன் செய்துகொள்ள வேண்டியது அவசியம் என்றும் கூறியுள்ளனர்.
0 comments:
Post a Comment