Home » » இன்றைய முஸ்லிம் பெண்களின் ஆடைக் கலாச்சாரத்தின் ஆட்டம்

இன்றைய முஸ்லிம் பெண்களின் ஆடைக் கலாச்சாரத்தின் ஆட்டம்

Written By STR Rahasiyam on Thursday, September 13, 2012 | 9:30 AM


மானத்தை மறைப்பதற்காகவும், குளிர், வெப்பம், மற்றும் பல காரணங்களில் இருந்து பாதுகாப்பதற்காகவும் அல்லாஹ்வால் மனித இனத்திற்கு வழங்கப்பட்ட பாதுகாப்புக் கவசமே இந்த ஆடை ஆகும்
ஆதமுடைய மக்களே! உங்கள் வெட்கத் தலங்களை மறைக்கும் ஆடையையும், அலங்காரத்தையும் உங்களுக்கு அருளியுள்ளோம். (இறை) அச்சம் எனும் ஆடையே சிறந்தது. அவர்கள் சிந்திப்பதற்காக இது அல்லாஹ்வின் சான்றுகளில் உள்ளது.
(அல்குர்ஆன் 7:26)
ஆனால் இன்று ஆடை வழங்கப்பட்ட நோக்கத்தையே மறந்தவர்களாக, தம் அழகைப் பிறருக்குக் காண்பிப்பதற்காகவே நம் பெண்கள் ஆடைகளை அணிவதைக் கண்கூடாகக் காணலாம். வேறு எந்த மதத்திலும் சொல்லாத அளவிற்கு பெண்களின் ஆடைக்கான எல்லையை இஸ்லாம் மார்க்கம் தான் வகுத்துத் தந்துள்ளது.
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக்கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமதுஅலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள் தமது தந்தையர் தமது கணவர்களுடைய தந்தையர் தமது புதல்வர்கள் தமது கணவர்களின் புதல்வர்கள் தமது சகோதரர்கள் தமது சகோதரர்களின் புதல்வர்கள் தமது சகோதரிகளின் புதல்வர்கள் பெண்கள் தங்களுக்குச் சொந்தமான அடிமைகள் ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள் பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.    
(அல்குர்ஆன்  24 : 31)

ஏனென்றால் பெண்களின் உடலமைப்பானது ஆண்களின் உடலமைப்பை விட சற்று வித்தியாசமானது. ஆண்களை இலகுவில் கவர்ந்து ஈர்க்கக் கூடிய தன்மை உடையது. ஆனால் ஆண்களின் உடலமைப்பானது அவ்வாறன்று. ஆண்கள் அரைகுறை ஆடையுடன் இருந்தால் கூட அதனைப் பெண்கள் அவ்வளவு அலட்டிக் கொள்ள மாட்டார்கள். ஆனால் பெண்களின் நிலை அவ்வாறன்று. அதனால் தான் அல்லாஹ் ஆடையான வேலியை பெண்கள் மீது அதிகப்படியாக விதித்துள்ளான்.
ஆனால் நம் பெண்களோ மாற்று மதத்தவர்களுக்கு ஒப்பாகவே இன்று தமது ஆடைக்கலாச்சாரத்தை மாற்றியமைத்துள்ளனர். இறையச்சத்தை விட, தனது மானத்தை விட இவ்வுலக அலங்காரத்தையும் அந்நிய மதத்தவரின் திருப்தியுமே இவர்களுக்கு மிகவும் மேலானதாகவும், விருப்பமானதாகவும் உள்ளது. நமது பெண்கள் “தொழுகிறோம், நோன்பு பிடிக்கிறோம், ஸகாத் ஸதகா கொடுக்கிறோம், பிறருக்கு உதவி செய்கின்றோம். இது தான் முஸ்லிம்களாகிய நாம் செய்ய வேண்டியது” என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆம் இவை அல்லாஹ்வின் கட்டளை என்பதால் செய்கிறோம். ஆனாலும் அல்லாஹ் தன் வேதத்தின் மூலமும் தன் தூதர் மூலமும் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டிய முறைகள், பேண வேண்டிய விடயங்கள், வரையறைகளையும் சேர்த்தே நம் மீது விதித்துள்ளான். அதனடிப்படையில் எமது ஆடை உள்ளதா என்று சற்றேனும் சிந்தித்துப் பார்த்ததுண்டா? அந்நிய ஆண்களின் முன் நிலையில் முகம், முன் கையைத் தவிர மற்ற பகுதிகளை மறைக்க வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது. ஆனால் ஆடை விடயத்தில் தலைகீழாக இருக்கின்றது நம் பெண்களின் நிலைமை. இன்று நம் பெண்களை வீதிகளில் காணும் போது முஸ்லிம் பெண்களாகவே கருத முடியாத அளவுக்கு அந்நிய மதக் கலாச்சாரத்தில் மூழ்கிப் போனவர்களாக அவர்களது ஆடை அவர்களைக் காட்டிக் கொடுக்கின்றது. இஸ்லாம் மார்க்கம் மட்டும் தான் குற்றங்களைத் தடுப்பதற்கான சட்டங்களை போட்டுள்ளது, அதற்கான வரையறைகளை இட்டுள்ளது. நாமோ அதனைப் புறக்கணித்து நம் இஷ்டப்படி மனம் போன போக்கிலேயே ஆடைகளை அணிகின்றோம்.
ஆண்கள் குற்றம் புரிவதற்குக் கூட பெண்களின் இந்த முறையற்ற ஆடைக் கலாச்சாரமும் ஒரு காரணியாக அமைந்துள்ளது. பெண்கள் தமக்குத் தாமே அழிவையும், இழிவையும் தேடிக்கொள்பவர்காக இருப்பது வேடிக்கைக்குரியது. பாதுகாப்புக் கவசத்தையே துளையிட்டு உபயோகிப்பதாகவே இன்றைய முஸ்லிம் பெண்களின் நிலைமையும் உள்ளது. அதாவது சல்வார் என்பது கூட ஒரு ஒழுக்கமான ஆடை தான் அதையே மிகவும் இறுக்கமாக இடுப்பு வரை பிளந்து காற்றில் பறக்க அணிகின்றனர். ஹபாயா என்பது கூட நவீன பெஷனாக மாறியுள்ளது. அதனையும் மிக இறுக்கமாக அணிந்து தலையை மட்டும் மெல்லிய துணியால் காயத்துக்கு போட்ட பெண்டேஜ் (bandage) மாதிரி சுற்றி மூடிவிடுகின்றனர். மற்ற மறைக்க வேண்டிய பகுதிகளை மறைக்க மறந்து விடுகின்றனர். அல்லாஹ் இட்ட கட்டளையையும்  சேர்த்தே மறந்து விடுகின்றனர் என்பதை அறிய வேண்டாமா?
ஏன் இந்த ஆடைகளை ஒழுக்கமான முறையில், உடலமைப்பைக் காட்டாத முறையில், அலங்காரத்தை வெளிப்படுத்தாமல், தளர்த்தியாக அணிய முடியாது? இவ்வுலக அலங்காரமும், மோகமும், மற்றவர்களின் திருப்தியுமே எமக்கு அழகாக தோற்றமளிக்கின்றது. ஆனால் ஈருலகிலும் நன்மையைப் பெற்றுத் தருகின்ற அல்லாஹ்வின் திருப்தி மட்டும் எம்மை மறக்கடிக்கச் செய்கின்றது?
ஆடைக்குறைப்பினாலும், முறையாக அணிந்தும் இறுக்கமாக அணிவதாலும் ஏற்படும் விபரீதங்களை பெண்களாகிய நீங்கள் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். அதனால் தான் படைத்தவனாகிய அல்லாஹ் அதற்காக பாதுகாக்கும் கவசமாக ஆடையை வழங்கி அதற்கான வரையறைகளையும் வகுத்து நமக்கு அருள் புரிந்துள்ளான். கவர்ச்சி காட்டுவதை அறியாமைக்கால (ஜாஹிலியாக்கால) பண்பாக பின்வரும் அல்குர்ஆன் வசனத்தில் அல்லாஹ் விவரிக்கின்றான்.
உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள்! முந்தைய அறியாமைக் காலத்தில் வெளிப்படுத்தித் திரிந்தது போல் திரியாதீர்கள்! தொழுகையை நிலைநாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! இவ்வீட்டினராகிய உங்களை விட்டு அசுத்தத்தை நீக்கவும், உங்களை முழுமையாகப் பரிசுத்தப்படுத்தவுமே அல்லாஹ் நாடுகிறான்.
(அல்குர்ஆன் 33:33)
sltjweb.com
Share this article :

0 comments:

Post a Comment


உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை இலவசமக உங்கள் கைத்தொலைபேசி மூலம் பெற்றுக் கொள்ளுங்கள். Follow <இடைவெளி> strfn என டைப் செய்து 40404க்கு SMS அனுப்புங்கள்

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. www.strfn.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger