TN,JM
முஹம்மத் நபியை இழிவுபடுத்தும் சர்ச்சைக்குரிய திரைப்படத்தை தயாரித்த சாம் பசில் என்று கூறப்படும் நகவ்லா பஸ்ஸலி நகவ்லாவின் புகைப்படத்தை அந்த திரைப்படத்தில் நடித்த அன்னா குர்ஜி என்ற பெண் அம்பலப்படுத்தியுள்ளார்.
திரைப்படத் தயாரிப்பின் போது தன்னுடன் அமர்ந்திருக்கும் நகவ்லாவின் படத்தை அந்த பெண் ஊடகங்களுக்கு வழங்கியுள்ளார்.
இந்த படத்தில் நடித்ததால் தான் தற்போது பயத்தில் வாழ்வதாக குர்ஜி என்ற 21 வயது நடிகை குறிப்பிட்டுள்ளார். இந்த திரைப்படத்தில் குர்ஜி, முஹம்மத் என்ற கதாபாத்திரத்தின் பருவமடையாத மணப் பெண்ணாக நடித்துள்ளார். இவர் ஊடகங்களுக்கு நேற்று முன்தினம் பேட்டி அளித்துள்ளார்.
அதில், “நான் ஜோர்ஜ் என்ற கதாபாத்திரத்தின் பருவம் அடையாத மனப் பெண்ணாக நடித்தேன். ஜோர்ஜ் என்ற கதாபாத்திரத்தின் பெயர் முஹம்மத் என மாற்றப்பட்டது பற்றி எனக்கு தெரியாது. நான் இப்போது எனது வீட்டுக் கதவுகளை மூடிக்கொண்டு இருக்கிறேன். மத்திய கிழக்கில் இருப்பவர்கள் என்னை தாக்குவார்கள் என்ற பயத்தில் இருக்கிறேன்.
நான் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவள். அதனால் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டதாக நம்பிவிடக்கூடும். தூக்க மாத்திரை அருந்திக் கொண்டே படுக்கைக்கு செல்கிறேன். நாள் முழுதும் அழுதேன். எனது முகம் அந்த படத்தில் வந்திருக்கிறது. அந்த மோசமான படத்தை பார்ப்பவர்கள் எனது முகத்தையும் அதில் பார்ப்பார்கள். நான் தாக்கப்படுவேன் என்ற பயத்தில் இருக்கிறேன்” என்றார்.
குர்ஜி மற்றும் இந்த படத்தில் நடித்த ஏனையோர் தாம் பாலைவன வீரர் ஒருவரின் சாகசப் படம் ஒன்றிலேயே நடிப்பதாக நம்பி வந்ததாக கூறியுள்ளனர். தயாரிப்பாளர் நகவ்லா அல்லது சாம் படப்பிடிப்பின்போது மதம் தொடர்பான எந்த கருத்தையும் வெளியிடவில்லை என்று இந்த படத்தில் பணியாற்றியோர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த திரைப்படம் மிகக் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட படம் என்றும் அதில் தமக்கு நாள் சம்பளமாக 75 டொலர் கிடைத்ததாகவும் குர்ஜி குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment