ஓஸ்லோ:நோர்வே நாட்டின் கலாச்சாரத்துறை அமைச்சராக முஸ்லிம் பெண்மணியொருவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்கேண்டநேவியன் நாடுகளின் (சுவீடன், நார்வே, டென்மார்க், ஐஸ்லாந்து, பின்லாந்து மற்றும் பல தீவுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய பிரதேசம்) வரலாற்றிலேயே முதன் முதலாக ஒரு முஸ்லிம் பெண் அமைச்சராக தேர்வுச் செய்யப்படுவது இதுவே முதன் முறையாகும்.
இதுக்குறித்து நார்வே பிரதமர் ஜென்ஸ் ஸ்டால்டன்பெர்க் செய்தியாளர்களிடம் கூறுகையில், “புதிய சக்தி, புதிய விழுமியங்கள், புதிய சிந்தனைகளை உருவாக்கும் களமாக நாங்கள் ஏற்படுத்திய இந்த மாற்றம் அமையும். இது புதுப்பித்தல் மற்றும் தொடர்ச்சியின் ஒரு கலவையாகும்.” என்று தெரிவித்தார்.
ஏற்கனவே கலாச்சாரத்துறை அமைச்சராக பதவி வகித்த Anniken Huitfeldt தொழிலாளர்கள் மற்றும் சமூக விவகாரத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
புதிய முஸ்லிம் பெண் அமைச்சரான ஹாதியா தாஜிக்கிற்கு 29 வயதாகிறது. இவர் பாகிஸ்தான் வம்சாவழியைச் சார்ந்தவர். இவர் லேபர் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆவார். தாஜிக் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2009 வரை நீதித்துறை அமைச்சர் க்னட் ஸ்டோர்பெர்கெட்டின் அரசியல் ஆலோசகராக பணியாற்றியவர். அவ்வேளையில் பெண்கள் போலீஸ் பணியில் ஈடுபடும்பொழுது ஹிஜாப் அணிய அனுமதி வழங்க காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சராக தேர்வுச் செய்யப்பட்டுள்ள ஹாதியா தாஜிக் கூறுகையில், “வருங்காலத்தில் கலாச்சார பன்முகத் தன்மையே தனது அமைச்சக திட்டத்தின் முதன்மையாக இடம்பெறும்” என்று தெரிவித்தார்.
நார்வேயில் 1,50,000 முஸ்லிம்கள் வாழ்கின்றார்கள். அந்நாட்டின் மொத்த மக்கள் தொகை 45 லட்சம் ஆகும். முஸ்லிம்களில் பெரும்பாலோர் பாகிஸ்தான், சோமாலியா, ஈராக் மற்றும் மொரோக்கோ நாடுகளின் பின்னணியைக் கொண்டவர்கள் ஆவர். நார்வேயில் 90 முஸ்லிம் அமைப்புகள் மற்றும் மையங்கள் இயங்குகின்றன.
0 comments:
Post a Comment