சவுதியிலிருந்து அழைப்பு
இலங்கையைச் சேர்ந்த சிலர்> அறிஞர் பீஜே பற்றி சவுதி முப்திகளுக்கு எழுதிய கடிதத்தின் நகலைத் முன்னைய தொடரில் தந்திருந்தோம்.
அதன் தமிழாக்கத்தையும் அதன் விளைவுகளையும் இத்தொடரில் நோக்குவோம்.
இக்கடிதத்தில் இவர்கள் குறிப்பிடும் விஷயம் இது தான்.
தமிழகத்தில் ஜைனுல் ஆபிதீன் என்று ஒருவர் இருக்கிறார். இவர் இலங்கையிலும் இந்தியாவிலும் பிரபலமானவர். முஸ்லிம்களிடமும் முஸ்லிம் அல்லாதவரிடமும் பிரபலமானவர்.
குர்ஆன் சுன்னாவின் பால் அழைப்பதிலும் பித்அத்தை ஒழிப்பதிலும் இவருக்குப் பெரும் பங்கு உண்டு.
எழுத்து, பேச்சு, விவாதம், கருத்தரங்கம் என்று பல் துறைகளில் இவருக்கு ஆற்றல் உண்டு. கப்ர் வணங்கிகளுடனும் காதியானிகளுடனும் கிறித்தவர்களிடமும் இவர் விவாதங்கள் பல நடத்தியுள்ளார்.
இவரது பேச்சுக்கள் குறுந்தகடுகளாகவும் ஒளிப்பேழைகளாகவும் தயாரிக்கப்பட்டுள்ளன. பாமர மக்கள் மத்தியில் இவருக்குப் பெரிய வரவேற்பு உள்ளது.
இவர் திருக்குர்ஆனைத் தமிழாக்கம் செய்துள்ளார். சில வசனங்களுக்கு விளக்கக் குறிப்புகளும் கொடுத்துள்ளார். இது இரண்டு முறை பதிப்பிக்கப்பட்டுள்ளது.
இதில் சில தவறுகளை நாங்கள் காண்கிறோம்.
அவற்றுள் சில
1. அல்லாஹ் மேகத்தில் வருவான் என்பதற்கு அல்லாஹ்வின் தண்டனை வரும் என்று விளக்கம் கொடுத்துள்ளார்.
2. ஹாரூத் மாரூத் மலக்குகள் அல்ல. ஷைத்தான்கள் என்று எழுதியுள்ளார்.
3. ஸாத் அத்தியாயத்தில் 34 வது வசனத்தில் அவரது சிம்மாசனத்தில் ஒரு முண்டத்தைப் போட்டோம் என்று மொழிபெயர்க்காமல் அவரை ஒரு சடலமாகப் போட்டோம் என்று எழுதியுள்ளார். சுலைமான் நபி ஒரு இரவில் நூறு மனைவியருடன் உடலுறவு கொண்டதாக வரும் ஹதீஸ்களை மறுத்துள்ளார்.
4. ரசூல் நபி என்பதற்கிடையே எந்த வேறுபாடும் இல்லை என்று எழுதியுள்ளார்.
5. ஆதம்(அலை) அவர்கள் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்கள் என்று எழுதாமல் ஒரு தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்கள் என்று எழுதியுள்ளார்.
6. சிஹ்ர் - சூனியம் என்பது கற்பனை என்கிறார்.
7. நபிகள் நாயகத்துக்கு சூனியம் செய்யப்பட்டதாக புகாரியில் இடம் பெற்ற ஹதீஸை மறுக்கிறார்.
8. நம்பகமானவர்கள் வழியாக அறிவிக்கப்படும் ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரணாக இருந்தால் அதை மறுக்க வேண்டும் என்கிறார். இத்தகைய ஹதீஸ்கள் சுமார் 50 உள்ளன எனக் கூறுகிறார்.
9. பத்து தடவை பாலூட்டினால் தான் தாய் பிள்ளை உறவு ஏற்படும் என்று நபிகள் நாயகம் மரணிக்கும் வரை குர்ஆனில் ஒரு வசனம் இருந்தது என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கும் ஹதீஸையும் இவர் மறுக்கிறார்.
10. ஸாலிம் என்ற இளைஞருக்கு பாலூட்டு அவர் உன் பிள்ளையாகி விடுவார் என்று ஹுதைபா (ரலி) அவர்களின் மனைவியிடம் நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக வரும் ஹதீஸையும் இவர் மறுக்கிறார்.
11. முடிச்சுக்களில் ஊதும் பெண்கள் என்பது சூனியக்காரர்களைக் குறிக்காது. ஷைத்தானையே குறிக்கும் என்று எழுதியுள்ளார்.
12. பெண்கள் முகத்தை மறைக்க எந்த ஆதாரமும் இல்லை என்கிறார். இதனால் ஒழுக்கக் கேடுகள் தான் ஏற்படும் என்கிறார்.
13. குர்ஆனை எடுத்து எழுதிய நபித் தோழர்கள் சில எழுத்துப் பிழைகளை விட்டுள்ளனர். அது அப்படியே உள்ளது எனக் கூறி சில ஆதாரங்களையும் கூறுகிறார்.
14. குர்ஆனின் ஓரத்தில் ஸஜ்தா என்றும் மற்றும் சில வார்த்தைகளும் பின்னால் எழுதப்பட்ட பித்அத் என்று கூறி இவ்வாறு செய்தவர்களைக் கண்டிக்கிறார்.
15. நிச்சயமாக என்பதை அறவே தவிர்த்து விட்டார்.
இவரது திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் நாங்கள் கண்ட தவறுகள் இவை. இவை தவிர அவரது உரைகளிலும் நூல்களிலும் இன்னும் பல தவறுகளைச் செய்துள்ளார். உதாரணத்துக்காக சில. இவை மட்டுமல்லாமல் இன்னும் உள்ளன.
1. இறைவன் முதல் வானத்திற்கு இறங்குகிறான் என்பதற்கு நேரடிப் பொருள் செய்யவில்லை.
2. இஜ்மாவையும் கியாஸையும் அறவே மறுக்கிறார்.
3. சலபிக் கொள்கையை மறுத்து கிண்டல் செய்கிறார். அவர்கள் தக்லீது செய்பவர்கள் என்கிறார்.
4. மனித உடலுக்குள் ஜின்கள் நுழைவதையும் இவர் மறுக்கிறார்.
5. நபிகள் நாயகம் (ஸல்) மரணித்த பின் அவர்களை யாரும் கனவில் காண முடியாது என்கிறார்.
6. பலவீனமான ஹதீஸ்கள் துணைச் சான்றுகள் மூலம் சரியான ஹதீஸ் என்ற நிலைக்கு உயரும் என்பதையும் மறுக்கிறார்.
7. தாடியைக் கத்தரிக்க எந்த அளவும் நிர்ணயிக்கப்படவில்லை என்கிறார்.
8. ஆடைகளைத் தரையில் இழுபடும்படி தொங்க விடுவதால் தவறல்ல என்கிறார்.
9. ஒரு பொருளுக்கு ஒரு தடவை தான் ஜகாத் என்கிறார். ஒரு தடவை ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் ஜகாத் இல்லை என்கிறார்.
10. ஜும்ஆவுக்கு முன் சுன்னத் உண்டு என்கிறார்.
11. குழந்தையாக இருந்த போது நபிகள் நாயகத்தின் இதயம் பிளக்கப்பட்டதை மறுக்கிறார். அது குர்ஆனுக்கு முரண் என்கிறார்.
இவரது இத்தகைய தவறுகளை நேருக்கு நேராகவும் எழுத்து வடிவிலும் சகோதர தாயிகள் அவருக்குச் சுட்டிக் காட்டிய பின்னரும் தன் நிலையில் நீடிக்கிறார். எதிர் கருத்துச் சொல்பவர்களை விவாதத்துக்கு, அல்லது முபாஹலாவுக்கு அழைக்கிறார்.
இவருக்கு இருக்கும் பேச்சாற்றல் காரணமாக இவர் கூறுவதை பாமர மக்கள் நம்புகின்றனர்.
அதனடிப்படையில் தங்களிடம் இது குறித்து சில விளக்கங்களை எதிர் பார்க்கிறோம்.
1. இவருடன் நாங்கள் எப்படி நடந்து கொள்வது?
2. குர்ஆன் ஹதீஸ் பக்கம் மக்களை அழைப்பதற்காக இவர் பாடுபடுவதாலும் பித்அத்களை ஒழிக்கப் பாடுபடுவதாலும் இவரைப் பற்றி மக்கள் மத்தியில் பேசக் கூடாது. அது தான் சமுதாயத்துக்கு நன்மை என்று சலபி உலமாக்கள் சிலர் கூறுகின்றனர். இது சரியா?
3. எவ்விதத் தவறும் இல்லாமல் மன்னர் பஹத் செலவில் ஒரு தமிழாக்கம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இவரது தமிழாக்கத்தை விற்பதும் வாங்குவதும் கூடுமா? அவரது தமிழாக்கம் ரகசியமாக சவூதி அரேபியாவில் விற்கப்படுகிறது.
இது பற்றி தங்களின் மேலான விளக்கத்தை எதிர்பார்க்கிறோம்.
இது தான் மேற்படி மதனிமார்கள் எழுதிய புகார் பட்டியல்.
கடிதத்தில் பட்டும் படாமலும் தொட்டும் தொடாமலும் கொஞ்சம் வஞ்சப் புகழ்ச்சியுடன் எழுதப்பட்டதைக் கண்டு இவர்களை நாகரிகமாக விமர்சித்தவர்கள் என்று யாரும் எண்ணிவிடக் கூடாது. மக்களிடம் இவர்கள் செய்யும் விமர்சனம் எவ்வளவு தரம் கெட்டதாக இருந்தது என்பதை நாம் அறிவோம்.
நமது கொள்கைச் சகோதரர்கள் பற்றி உளவுத் துறையில் போட்டுக் கொடுத்து இழி செயல் புரிந்தனர் என்பதும் தம்மாமில் பிரசித்தம்.
தவ்ஹீத் பிரச்சாரம் தான் தமுமுகவின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை எனக் கூறி தர்கா விழாக்களுக்கு வாழ்த்து வழங்கிய தமுமுகவின் கொள்கை இவர்களுக்குத் தடையாக இல்லை.
சில அறியாத சகோதரர்கள் தமுமுக தேவை என்று நினைக்கிறார்கள்.சமுதாயத்துக்குக் குரல் கொடுப்பார்கள் என்று அவர்கள் நம்புவதால் இப்படி நினைக்கிறார்கள். அந்தக் காரணமும் இவர்களுக்கு இல்லை.இவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள். இலங்கையில் தமுமுக இவர்களுக்கு உதவாது. தம்மாமிலும் உதவ முடியாது. அப்படி இருந்தும் தம்மாம் தமுமுகவுடன் இவர்கள் கை கோர்க்க முடிகிறது.தமுமுக நடத்தும் தொலைக் காட்சி நிகழ்ச்சியில் முகம் காட்ட முடிகிறது. சவூதியில் ஹிஸ்ப் எனப்படும் அரசியல் அமைப்புகளுக்குத் தடை என்ற போதும் இவர்களுடன் கூடிக் குலாவ முடிகிறது..
ஜமாஅதே இஸ்லாமி, தப்லீக், விடியல் ஆகிய இயக்கங்களின் கொள்கைகளும் சவூதியின் கொள்கைக்கும் இவர்கள் ஏற்றுக் கொண்ட கொள்கைக்கும் முரணானவை. இவர்களும் இரகசியமாகச் செயல்பட்டுக் கொண்டு தான் உள்ளனர். ஆனால், இவர்களுக்கு எதிராக எந்தப் புகாரையும் இவர்கள் அளித்ததில்லை.
சவூதியில் எதையும் தீர விசாரிப்பார்கள் என்பதால் தான் தரக் குறைவாக எதையாவது எழுதினால் மாட்டிக் கொள்வோம் என்று இப்படி ஒரு புகார் அனுப்பினார்கள்.
இவர்கள் அனுப்பிய புகாருக்குப் பின்னர் சவூதி அரசு எடுத்த நடவடிக்கை என்ன? இவர்கள் ஆசைப்பட்டது போல் எந்தத் தடையும் போடவில்லை.
மாறாக புகார் அனுப்பியவர்கள் வழியாக எனக்கு இரண்டு மடல்களை அனுப்பி என்னிடம் சேர்ப்பிக்கும் படியும் இந்தப் புகார் கடிதத்தையும் பீ.ஜே.வுக்கு அனுப்ப வேண்டும் என்றும் புகார் எழுதியவர்களுக்கு சவூதி அரசு உத்தரவிட்டது.
இதன் பின்னர் புகார் அனுப்பியவர்களில் ஒருவரான முபாரக் மதனி என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சவூதி அரசு உங்களுக்கு சில தகவல்களைத் தெரிவிக்க பணித்துள்ளது. உங்கள் பேக்ஸ் நம்பர் வேண்டும் என்று கேட்டார். யாருக்கும் தெரியாமல் அவர் எழுதிய புகார் கடிதத்தை அவர் வழியாகவே எனக்கு அல்லாஹ் கிடைக்கச் செய்தான்.
இவர்கள் கொள்கைவாதிகள் என்றால் நாங்கள் தடை செய்ய வேண்டும் புகார் கொடுத்தவருக்கு அரசு மரியாதையா? என்று கேட்டு வேலையை உதறி இருக்க வேன்டும்.
(முபாரக் மதனிக் கூட்டம் எழுதிய புகார் கடிதத்தை சவூதி அரசு அவரிடமே பீஜேவுக்கு அனுப்பச் சொன்னதால் ஆத்திரமடைந்த முபாரக் மதனி அதை அனுப்பிவிட்டு, ஒட்டக மூளையுள்ள மோட்டு முப்தி இதை பீஜேவுக்குத் தெரியப்படுத்திவிட்டார் என்று புலம்பினார்.)
இத்துடன் சவூதி அரசின் சார்பில் என்னிடம் சேர்ப்பிக்கச் சொன்ன கடிதங்கள் இவைதான்.
Add caption |
தலைமை முப்தீ அப்துல் அஸீஸ் பின் அப்துல்லாஹ் தம்மாம் ஜாலியாத் முதீருக்கு எழுதுவது அஸ்ஸலாமு அலைக்கும்.
ஜைனுல் ஆபிதீன் என்பவர் செய்த திருக்குர்ஆன் தமிழாக்கம் பற்றி உங்கள் ஜாலியாத் தாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். அதில் பல தவறுகள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இது குறித்து அழகிய முறையில் ஜைனுல் ஆபிதீனுடன் கலந்துரையாடல் நடத்த ஆர்வம் கொண்டுள்ளோம். இவ்வாண்டு (ஹிஜ்ரி1426) ராபிதா அல் ஆலமுல் இஸ்லாமி மூலம் ஹஜ் கடமையை நிறைவேற்ற அழைப்பு விடுக்கிறோம். துல்ஹஜ் பிறை 1 முதல் ஹஜ் முடியும் வரை நமது விருந்தினராக அவரை அழைக்கும் அழைப்பிதழையும் இணைத்துள்ளோம். எனவே, இந்த அழைப்பிதழை அந்தப் பெரியவரிடம் விரைந்து சேர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
என்பது முதல் கடிதம்.
அடுத்த கடிதம் எனக்கு எழுதப்பட்டதாகும்.
பெறுநர்: பேராசிரியர் ஜைனுல் ஆபிதீன்
இந்தியாவின் பிரச்சார தாயி.
உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். இவ்வாண்டு ஹஜ்ஜுக்கு உங்களை அழைக்கிறோம். அதற்கான அனுமதி எண் ......
உங்களை உபசரிக்கும் செலவு எங்களுடையது. பயணச் செலவு உங்களுடையது.
ஜனவரி 1 2006 முதல் ஜனவரி 16 2006 வரை விருந்தினராக இருப்பீர்கள்.
இஹ்ராம் நிய்யத்துடன் பிரவேசிக்க வேண்டும்.
சவூதி வருகை பற்றி ஒரு வாரம் முன்பு பேக்ஸ் மூலம் தெரிவிக்கவும்.
நீங்கள் ஒருவர் மட்டுமே வரலாம்.
இப்படி இரண்டாம் கடிதம் கூறுகிறது-
ஹஜ் அழைப்பில் ஹஜ் கிரியை முடியும் வரை இஹ்ராமுடன் தங்கவே அழைப்பு இருந்தது. விவாதித்தல் பற்றி எந்த விபரமும் காணப்படவில்லை. முப்தி அவர்களின் கட்டளையை சரியாகப் புரிந்து கொள்ளவில்லையா என்பது தெரியவில்லை.
ஹஜ் முடிந்த பின் எங்கே விவாதிப்பது அதற்கான கால அளவு எதுவுமே இதில் காணப்படவில்லை.
சாதாரண நட்பு முறையில் பேசவே அவர்கள் விரும்பியுள்ளனர் என்பது இதிலிருந்து தெரிகிறது. இந்த மதனிகள் சுட்டிக் காட்டிய விஷயங்கள் புதுமையானது அல்ல என்பதால் கண்ணியப்படுத்துவது தான் இதன் நோக்கமாக இருந்தது.
இல்லாவிட்டால் ஹஜ் இல்லாத காலங்களில் இதற்காக வரச் சொல்லி அழைப்பு அனுப்பி இருப்பார்கள். ஹஜ் பரபரப்பில் இதற்காக அழைப்பு அனுப்ப மாட்டார்கள்.
இந்த அழைப்புக்கு நாம் பதில் அளித்து கடிதம் அனுப்பினோம். அதன் கடிதம் இதோ.
அதன் கடிதம் இதோ.
தமிழக முஸ்லிம்கள் ஒடுக்கப்படுவதற்கு எதிராக கும்பகோணத்தில் ஜனவரி 29 அன்று மாநாடு பேரணி நடத்துகிறோம்.
நானே அமைப்பில் தலைவராக இருப்பதால் இந்தக் கட்டத்தில் என்னால் எங்கும் செல்ல முடியாத நிலை உள்ளது என்று பேரணியின் நோக்கம் செயல்பாடு அனைத்தும் விளக்கப்பட்டது.
எனவே, ஜனவரிக்குப் பின் இரண்டு மாத அவகாசத்தில் தாங்கள் வசதிப்படும் எந்த நாளில் என்னை அழைத்தாலும் எனது சொந்தச் செலவில் வந்து மதனிமார்கள் கூறிய புகார்கள் குறித்து நட்பு முறையில் கலந்துரையாடல் நடத்தத் தயாராக இருக்கிறேன் என்று பதில் போட்டேன்.
அந்தப் பதிலை முபாரக் மதனி அக்கடிதத்தில் குறிப்பிட்ட அத்தனை பேக்ஸ் எண்ணுக்கும் அனுப்பினேன்.
ஜித்தாவின் ஷிப்லி அவர்கள் மூலம் நேரடியாகவே ஜித்தாவில் உள்ள தலைமை அலுவலகத்திலும் சேர்ப்பித்தேன்.
ஆண்டுகள் பலவாகியும் அவர்களிடமிருந்து எந்த அழைப்பும் வரவில்லை.
இதிலிருந்து ஹஜ்ஜுக்கு விருந்தாளியாக அழைத்து கௌரவப்படுத்தவே விரும்பியுள்ளார்; விவாதிப்பதற்கு அல்ல என்பது உறுதியானது.
இவர்களின் புகார் பைஸா பெறுமானமில்லாதது என்பது சவூதி அரசின் நடவடிக்கையில் இருந்து தெரிகிறது.
ரகசியமாக குர்ஆன் தமிழாக்கம் விற்பனை செய்யப்படுகிறது என்று இவர்கள் போட்டுக் கொடுத்தும் எந்த ரெய்டும் நடத்தப்படவில்லை. பொதுவாக பிரசாரம் தொடர்பாக எத்தகைய கடும் நடவடிக்கையை சவூதி எடுக்குமோ அவற்றில் ஒன்றைக் கூட எடுக்கவில்லை.
இது தான் நடந்த உண்மை. இது மட்டுமல்லாமல் என்னைப் பற்றி இவர்கள் எழுதிய புகார்களில் எதை இவர்கள் குறையாக சுட்டிக் காட்டினார்களோ, அவை அனைத்தும் அவர்களிடம் என்னைப் பற்றி உயர்வான அபிப்பிராயத்தை ஏற்படுத்தியது.
இதனால் நூலை இலவசமாக ஜாலியாத்கள் வெளியிட்டன.
இன்னும் சில கடிதங்கள் தவறி விட்டன.
சவூதியில் படித்தவர்களாக இவர்கள் இருந்தும் எனக்கெதிராக எல்லா வகையான கேடுகளையும் சவூதியில் செய்து முடிக்க எல்லா வாய்ப்புகளையும் இவர்கள் பெற்றிருந்தும் இவர்களின் எந்தத் திட்டமும் பலிக்கவில்லை.
துபை, கத்தர் போன்ற நாடுகளில் எனக்கு எதிராக செயல்பட்டவரும் இவர்களைப் போன்ற ஒரு மதனி தான். அவர் செய்த தில்லுமுல்லுகள் திருகு தாளங்கள் என்னென்ன? என்பதை அடுத்த தொடரில் இன்ஷா அல்லாஹ் விளக்குகிறேன்.
பீ.ஜே. கோடி கோடியாக பணம் சேர்த்து விட்டார் என்று புளுகுபவர்களுக்கும் பதிலளிக்க நண்பர்கள் வற்புறுத்துகின்றனர். பொது வாழ்வில் எனது நேர்மை குறித்து எழுப்பப்படும் அனைத்துக் கேள்விகளும் அபத்தமானவை உண்மைக்கு புறம்பானவை என்பதையும் அடுத்தடுத்து விளக்குவேன் இன்ஷா அல்லாஹ்.
மதனிகளாக இருந்தும் இவர்களின் தில்லுமுல்லுகளைக் கண்டு கொதித்துப் போன நல்ல மதனிகளும் உள்ளனர். நம்மால் செய்ய முடியாததை இந்தச் சாமானியர்களாவது செய்கிறார்களே என்று மகிழ்ச்சியடையும் மதனிகளை எனது இந்த விமர்சனம் கட்டுப்படுத்தாது.(பார்க்க: www.onlinepj.com)
வரலாறு இன்னும் வளரும் இன்ஷா அல்லாஹ்
Thanks sltj km
0 comments:
Post a Comment