Home » , » விட்ட நோன்பை கர்ப்பிணிகள் நிறைவேற்றுவது அவசியமா?

விட்ட நோன்பை கர்ப்பிணிகள் நிறைவேற்றுவது அவசியமா?

Written By STR Rahasiyam on Saturday, July 7, 2012 | 4:28 AM




கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டும் அன்னையருக்கும் நோன்பிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சலுகை அளித்தார்கள்’ என்ற ஹதீஸில் சலுகை என்பதற்கு, நோன்பை மீட்ட வேண்டும் என்று தான் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறி வருகிறீர்கள். அதற்கான நேரடியான எந்த ஆதாரத்தையும் முன் வைக்கவில்லை. ஆனால் நோன்பை விட்டு விடலாம்; மீட்டத் தேவையில்லை’ என்ற கருத்தில் நபித்தோழர்கள் கூறிய செய்தி தாரகுத்னீ, தப்ரானீ போன்ற நூற்களில் உள்ளது. இந்த விளக்கம் இல்லையென்றால் தங்களின் விளக்கத்தை ஏற்பதில் ஆட்சேபணை இல்லை. ஆனால் மேற்கண்ட ஹதீஸைத் தாங்கள் புரிந்து கொண்டு விளக்கியதை விட நபித்தோழர்களின் கூற்று பொருத்தமான விளக்கமாகத் தோன்றுகிறது. இது குறித்து விளக்கவும்.
ஏ.எம்.எஸ். ஹமீது கல்முனை, இலங்கை
மார்க்கத்தின் அடிப்படையைச் சரியாகப் புரிந்து கொள்ளாததால் இது போன்ற கேள்விகள் எழுகின்றன.
பொதுவாக ஒரு வணக்கத்தை இறைவன் கடமையாக்கினால் அது அனைவருக்கும் கடமை என்பது தான் பொருள். யாருக்காவது கடமை இல்லை என்று கூறுவதாக இருந்தால் அவ்வாறு கூறுவோர் தான் தெளிவான ஆதாரத்தை எடுத்துக் காட்ட வேண்டும்.
இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். அல்லாஹ் உங்களுக்கு எளிதானதையே நாடுகிறான். சிரமமானதை உங்களுக்கு நாட மாட்டான். எண்ணிக்கையை நீங்கள் முழுமையாக்குவதற்காகவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக நீங்கள் அல்லாஹ்வைப் பெருமைப் படுத்திடவும், நன்றி செலுத்திடவும் (வேறு நாட்களில் நோற்கும் சலுகை வழங்கப்பட்டது)
அல்குர்ஆன் 2:186
மேற்கண்ட வசனத்தில் ரமலானை அடைவோர் மீது நோன்பு கடமை என்று அல்லாஹ் கூறுகிறான்.
மாதவிடாயுள்ளவர்களும்,பாலூட்டுபவர்களும் நோன்பை விட்டு விட்டு மீண்டும் நோற்கத் தேவை இல்லை என்று கூறினால் அவர்களுக்கு நோன்பு கடமை இல்லை என்று ஆகிவிடும்.
இந்தப் பொதுவான சட்டத்திலிருந்து விதிவிலக்கு இருக்கின்றது என்று ஒருவர் கூறினால் குர்ஆன், ஹதீஸிலிருந்து அதற்குத் தெளிவான ஆதாரம் காட்ட வேண்டும். அதாவது ஒருவருக்கு நோன்பு கடமையில்லை என்றால் அதை அல்லாஹ்வோ, அவனது தூதர் (ஸல்) அவர்களோ தெளிவாகக் கூறியிருக்க வேண்டும்.
நோயாளிகள், பயணிகள் ஆகியோருக்கு இந்த வசனத்தில் அல்லாஹ் சலுகையளித்துள்ளான். அந்தச் சலுகை என்பது, இப்போதே நிறைவேற்றாமல் வேறு நாட்களில் நிறைவேற்றலாம் என்பது தான். இந்த வசனமே இதை விளக்கி விடுகின்றது
எனவே அல்லாஹ் சலுகை அளித்துள்ளான் என்பதற்கு அவர்கள் அறவே நோன்பு நோற்கத் தேவை இல்லை என்று பொருள் கொள்வது ஏற்கத்தக்கது அல்ல.
இது தவிர நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிலருக்கு நோன்பில் சலுகை அளித்தார்கள் என்றால் அந்தச் சலுகையும் வேறு நாட்களில் அதை நிறைவேற்றலாம் என்ற சலுகை என்றே விளங்க வேண்டும்.
கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் நோன்பு கடமையில்லை என்றால் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாகக் கூறியிருப்பார்கள்.
இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், நோன்பு கடமையா? இல்லையா? என்பது தான்.
பாலூட்டும் தாய்மார்களுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும் நோன்பு கடமையே இல்லை என்றால் கண்டிப்பாக அது மார்க்கத்தில் தெளிவாக்கப்பட்டிருக்கும்.
கர்ப்பிணிகளும், பாலூட்டும் தாய்மார்களும் விடுபட்ட நோன்பை வேறு நாட்களில் நோற்றாக வேண்டும் என்பதைப் பின்வரும் ஹதீஸைச் சிந்தித்தால் விளங்கிக் கொள்ளலாம்.
பயணிகள் பாதியாகத் தொழுவதற்கு அல்லாஹ் சலுகையளித்துள்ளான். பயணிகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் நோன்பில் சலுகையளித்துள்ளான்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்கள்: அபூதாவூத் 2056, இப்னுமாஜா 1657
கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் நோன்பில் வழங்கப்பட்டுள்ள சலுகையானது பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகையைப் போன்றது தான் என்று இந்த ஹதீஸில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்குகின்றார்கள்.
பயணிகளுக்கு நோன்பே கடமையில்லை என்று யாரும் கூற மாட்டார்கள். ஏனெனில் பயணிகளும், நோயாளிகளும் நோன்பை வேறு நாட்களில் நோற்க வேண்டும் என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.
கர்ப்பிணிகளையும், பாலூட்டும் தாய்மார்களையும் பயணிகளுடன் இணைத்து இந்த ஹதீஸில் கூறப்பட்டிருப்பதால் அவர்களும் நோன்பை வேறு நாட்களில் நோற்றாக வேண்டும் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

Share this article :

0 comments:

Post a Comment


உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை இலவசமக உங்கள் கைத்தொலைபேசி மூலம் பெற்றுக் கொள்ளுங்கள். Follow <இடைவெளி> strfn என டைப் செய்து 40404க்கு SMS அனுப்புங்கள்

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. www.strfn.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger