Home » » வுழுஃ செயல்முறை – விளக்கப் படங்களுடன்.

வுழுஃ செயல்முறை – விளக்கப் படங்களுடன்.

Written By STR Rahasiyam on Tuesday, November 20, 2012 | 5:11 AM

Rasmin MISc


நிய்யத் எனும் எண்ணம்.
ஒருவர் எந்த அமலைச் செய்தாலும் அந்த அமலைச் செய்கிறோம் என்ற எண்ணம் அவருக்கு இருக்க வேண்டும். அந்த எண்ணமில்லாமல் வணக்கத்தின் அனைத்துக் காரியங்களையும் ஒருவர் செய்தாலும் அது வணக்கமாக அமையாது.
ஒருவர் சுப்ஹ் முதல் சூரியன் மறையும் வரை உண்ணாமலும் பருகாமலும் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடாமலும் இருக்கின்றார்; ஆனால் நோன்பு நோற்கும் எண்ணம் அவருக்கு இல்லை; நேரமின்மையின் காரணமாகவோ, மருத்துவர்களின் ஆலோசனைப்படியோ இவ்வாறு இருக்கின்றார் என்றால், நோன்பாளி கடைப்பிடிக்கும் அனைத்தையும் அவர் கடைப்பிடித்த போதும் நோன்பு நோற்கும் எண்ணம் இல்லாததால் அவர் நோன்பு நோற்றவராக மாட்டார்.
உடற்பயிற்சி என்பதற்காகவோ, அல்லது வேறு ஏதோ ஒரு காரணத்துக்காகவோ தொழுகையில் கடைப்பிடிக்கும் அனைத்துக் காரியங்களையும் ஒருவர் செய்கின்றார்; ஆனால் தொழுகின்றோம் என்ற எண்ணம் அவருக்கு இல்லை என்றால் இவர் தொழுகையை நிறைவேற்றியவராக மாட்டார். அது போல் தூக்கக் கலக்கத்தில் எழுந்து தொழுகையில் செய்யும் அனைத்தையும் ஒருவர் செய்கின்றார். ஆனால் தொழுவதாக அவருக்கு உணர்வு இல்லை என்றால் அவரும் தொழுதவராக மாட்டார்.
இது போலத் தான் ஒருவர் உளூவின் போது செய்ய வேண்டிய அனைத்துக் காரியங்களையும் செய்கின்றார். ஆனால் உளூச் செய்யும் எண்ணம் அவருக்கு இல்லை என்று வைத்துக் கொள்வோம். இவர் உளூச் செய்தவராக மாட்டார்.
உதாரணமாக ஒருவர் வெளியே சென்று கொண்டிருக்கும் போது மழை பெய்கின்றது. உடல் முழுவதும் நனைந்து விடுகின்றது. உளூவின் போது கழுவ வேண்டிய அனைத்து உறுப்புக்களும் கழுவப்பட்டு விடுகின்றன என்று வைத்துக் கொள்வோம். அல்லது ஆற்றிலோ, அல்லது குளத்திலோ தவறி விழுந்து விட்டார். அல்லது இறங்கிக் குளிக்கின்றார் என்று வைத்துக் கொள்வோம். இவருக்கு உளூச் செய்யும் எண்ணம் இல்லாததால் இவர் உளூச் செய்தவராக மாட்டார்.
எல்லா வணக்கங்களுக்கும் நிய்யத் எனும் எண்ணம் அவசியம் என்பதற்குப் பின்வரும் ஹதீஸ் சான்றாக அமைந்துள்ளது.
அமல்கள் யாவும் எண்ணங்களைப் பொறுத்தே‘ என்று நபி (ஸல்அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உமர் பின் கத்தாப் (ரலி), நூல்கள்: புகாரீ 1, முஸ்லிம் 3530
 நிய்யத் என்பதை முஸ்லிம்களில் சிலர் தவறாக விளங்கி வைத்துள்ளனர். உளூ, தொழுகை, நோன்பு போன்ற கடமைகளை நிறைவேற்றும் போது சில அரபிச் சொற்களைக் கூறுவது தான் நிய்யத் என்று கருதுகின்றனர்.
நிய்யத் என்ற சொல்லுக்கு வாயால் மொழிதல் என்று பொருள் இல்லை. மனதால் நினைத்தல் என்பதே அதன் பொருளாகும்.
மேலும் உளூச் செய்யும் போதோ, தொழும் போதோ, நோன்பு நோற்கும் போதோ நபி (ஸல்) அவர்கள் எதனையும் வாயால் மொழிந்து விட்டுச் செய்ததில்லை.
ஹஜ் கடமையை நிறைவேற்றும் போது மட்டுமே வாயால் மொழிந்துள்ளனர். மற்ற எந்த வணக்கத்திற்கும் வாயால் மொழிந்ததில்லை.
நான் இப்போது உளூச் செய்யப் போகின்றேன்’ என்ற எண்ணம் உள்ளத்தில் இருக்குமானால் அதுவே நிய்யத் ஆகும். வாயால் எந்தச் சொல்லையும் மொழியக் கூடாது. அவ்வாறு மொழிவது பித்அத் ஆகும். இது அவசியம் என்றால் நபி (ஸல்) அவர்கள் வாயால் மொழிந்து நமக்கு வழி காட்டியிருப்பார்கள்.
பல் துலக்குதல்.
உளூச் செய்யத் துவங்கும் முன் பற்களைத் துலக்கிக் கொள்வது நபிவழியாகும். பல் துலக்குதல் உளூவின் ஓர் அங்கம் அல்ல! உளூச் செய்வதற்கு முன் செய்ய வேண்டிய தனியான வணக்கமாகும்.
நபி (ஸல்) அவர்கள் பல் துலக்கினார்கள். உளூச் செய்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: முஸ்லிம் 1233
பல் துலக்குதல் உளூவுக்குள் அடங்கி விடும் என்றால் ’உளூச் செய்தார்கள்’ என்று மட்டும் தான் கூறப்பட்டிருக்கும். உளூச் செய்தார்கள் என்பதைக் கூறுவதற்கு முன் ’பல் துலக்கினார்கள்’ என்று கூறப்படுவதால் இது உளூவில் சேராத தனியான ஒரு வணக்கம் என்பது தெரிகின்றது.
மேலும் பல் துலக்குதல் நபி (ஸல்) அவர்களால் அதிகமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.  
பல் துலக்குவது பற்றி அதிகமாக நான் உங்களை வலியுறுத்தியுள்ளேன்‘ என்று நபி (ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரீ 888
பல் துலக்குதல் வாயைச் சுத்தப்படுத்தும்இறைவனின் திருப்தியைப் பெற்றுத் தரும்‘ எனவும் நபி(ஸல்அவர்கள் கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்கள்: நஸயீ 5, அஹ்மத் 23072
என் சமுதாயத்திற்குச் சிரமமாகி விடும் என்றில்லாவிட்டால் ஒவ்வொரு உளூவின் போதும் பல்துலக்குவதைக் கட்டாயமாக்கியிருப்பேன்‘ என்று நபி (ஸல்அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: அஹ்மத் 9548
அல்லாஹ்வின் பெயர் கூறுதல். 
உளூச் செய்ய ஆரம்பிக்கும் போது முதல் பிஸ்மில்லாஹ்’ (அல்லாஹ்வின் திருப்பெயரால்) என்று கூறிக் கொள்ள வேண்டும். 
நபித்தோழர்கள் உளூச் செய்வதற்கான தண்ணீரைத் தேடினார்கள்அப்போது நபி (ஸல்அவர்கள், ‘உங்களில் எவரிடமேனும் தண்ணீர் இருக்கின்றதா?’ என்று கேட்டார்கள். (தண்ணீர் கொண்டுவரப்பட்டவுடன்அந்தத் தண்ணீரில் தமது கையை வைத்து, ‘அல்லாஹ்வின் பெயரால் உளூச்செய்யுங்கள்‘ என்று கூறினார்கள்அவர்களின் விரல்களுக்கு இடையிருந்து தண்ணீர்வெளியேறியதை நான் பார்த்தேன்கடைசி நபர் வரை அதில் உளூச் செய்தார்கள்
இவ்வாறு அனஸ் (ரலி) கூறினார்கள். ’மொத்தம் எத்தனை பேர் இருந்தீர்கள்?’ என்று அனஸ் (ரலி)யிடம் கேட்டேன். அதற்கவர்கள், ‘சுமார் எழுபது நபர்கள்’ என்று விடையளித்தார்கள். 
அறிவிப்பவர்: கதாதா, நூல்: நஸயீ 77 
முன் கைகளைக் கழுவுதல். 
உளூச் செய்யும் போது முதல் செய்ய வேண்டிய செயல் இரு கைகளையும் மணிக்கட்டு வரை கழுவுவதாகும். 
… ‘நீ உளூச் செய்யும் போது இரு முன் கைகளையும் கழுவி தூய்மையாக்கினால் உனது சிறுபாவங்கள் விரல் நுனியிருந்து வெளியேறுகின்றன‘ என்று நபி (ஸல்அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அம்ர் பின் அபஸா (ரலி), நூல்: நஸயீ 147 


வாயையும், மூக்கையும் சுத்தம் செய்தல். 
இரு கைகளையும் மணிக்கட்டு வரை கழுவிய பின் வாயையும், மூக்கையும் சுத்தம் செய்ய வேண்டும்.
நபி (ஸல்அவர்கள் எவ்வாறு உளூச் செய்தார்கள் என்பதற்கு உஸ்மான் (ரலிஅவர்கள் செயல்விளக்கம் அளித்த போது, ‘தமது இரு கைகளையும் மூன்று தடவை கழுவி விட்டு, (தண்ணீர்எடுத்துவாய் கொப்புளித்துமூக்கையும் சுத்தம் செய்தார்கள்‘ என்று கூறப்பட்டுள்ளது.
நூல்: புகாரீ 160, 164 
வாய் கொப்புளிப்பதற்கும், மூக்கைச் சுத்தம் செய்வதற்கும் தனித்தனியாக இரண்டு தடவை தண்ணீர் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு கையளவு தண்ணீர் எடுத்து அதில் ஒரு பகுதியை வாயிலும், மற்றொரு பகுதியை மூக்கிலும் செலுத்திச் சுத்தம் செய்யலாம். 
இப்னு அப்பாஸ் (ரலிஅவர்கள் உளூச் செய்தார்கள்அப்போது ஒரு கையில் தண்ணீர் எடுத்துஅதன் மூலமே வாய்கொப்புளித்து மூக்கிற்கும் தண்ணீர் செலுத்தினார்கள்… (பின்னர்) ’இப்படித்தான் நபி (ஸல்அவர்கள் உளூச் செய்ய நான் பார்த்தேன்‘ எனவும் இப்னு அப்பாஸ் (ரலி)கூறினார்கள்
அறிவிப்பவர்: அதா பின் யஸார், நூல்: புகாரீ 140 
ஒரு கைத் தண்ணீர் எடுக்கும் போது வலது கையால் எடுத்து இடது கையால் சுத்தம் செய்யவேண்டும்நபி (ஸல்அவர்கள் எவ்வாறு உளூச் செய்தார்கள் என்பதை உஸ்மான் (ரலிஅவர்கள்விளக்கும் போது, ‘தமது வலது கையைப் பாத்திரத்தில் விட்டு வாய் கொப்புளித்துமூக்கையும்சீந்தினார்கள்‘ என்று கூறப்பட்டுள்ளது.
நூல்: புகாரீ 160, 164 
அலீ (ரலிஅவர்கள் உளூச் செய்வதற்குரிய தண்ணீரை எடுத்து வரச்செய்துவாய்கொப்பளித்துமூக்கிற்குத் தண்ணீர் செலுத்திஇடது கையால் சுத்தம் செய்தார்கள்.பின்னர் ’இது தான் நபி (ஸல்அவர்கள் உளூச் செய்த முறையாகும்என்று கூறினார்கள்
அறிவிப்பவர்: அப்து கைர், நூல்கள்: நஸயீ 90, அஹ்மத் 1078, தாரமீ 696 

முகத்தைக் கழுவுதல். 
இதன் பின்னர் முகத்தைக் கழுவ வேண்டும். 
இரு கைகளால் கழுவுதல். 
நபி (ஸல்அவர்கள் உளூச் செய்த முறையை இப்னு அப்பாஸ் (ரலி)அவர்கள் விளக்கும் போதுஒரு கைத் தண்ணீரை அள்ளி அதனை மற்றொரு கையால் சேர்த்துக்கொண்டு அதன் மூலம் தமது முகத்தைக் கழுவினார்கள்.
அறிவிப்பவர்: அதா பின் யஸார், நூல்: புகாரீ 140 
ஒரு கையால் கழுவுதல். 
நபி (ஸல்அவர்கள் உளூச் செய்த முறையை அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலிஅவர்கள் விளக்கும்போதுதமது கையைப் பாத்திரத்தில் நுழைத்து மூன்று முறை முகத்தைக் கழுவினார்கள்
அறிவிப்பவர்: யஹ்யா
நூல்: புகாரீ 186 
தாடியைக் கோதிக் கழுவுதல். 
தாடி வைத்திருப்போர் முகத்தைக் கழுவும் போது தமது விரல்களால் தாடியைக் கோத வேண்டும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளனர். 
நபி (ஸல்அவர்கள் உளூச் செய்யும் போது தண்ணீரைக் கொண்டு தமதுதாடியைக் கோதிக் கழுவுவார்கள்
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: அஹ்மத் 24779 
இரு கைகளையும் முழங்கை வரை கழுவுதல். 
முகத்தைக் கழுவிய பின்னர் இரு கைகளையும் முழங்கை வரை கழுவ வேண்டும். 
நபி (ஸல்அவர்கள் உளூச் செய்த முறையை உஸ்மான் (ரலிஅவர்கள் விளக்கும்போதுமுகத்தையும்மூட்டு வரை இரு கைகளையும் மூன்று தடவை கழுவினார்கள்
அறிவிப்பவர்: ஹும்ரான், நூல்: புகாரீ 160 




முகத்தைக் கழுவும் போது முகத்தைக் கடந்து விரிவாகக் கழுவுவதும், கைகளைக் கழுவும் போது முழங்கை வரை நிறுத்திக் கொள்ளாமல் அதையும் தாண்டிக் கழுவுவதும் விரும்பத்தக்கதாகும். இது கட்டாயம் இல்லை. 
உளூச் செய்வதன் காரணமாக எனது சமுதாயத்தினர் முகம்கைகால்கள்வெண்மையானவர்கள்‘ என்று அழைக்கப்படுவார்கள்யார் தமது வெண்மையை அதிகப்படுத்தவிரும்புகின்றாரோ அவர் அவ்வாறு செய்து கொள்ளட்டும்‘ என்று நபி (ஸல்அவர்கள்கூறினார்கள்
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரீ 136, முஸ்லிம் 362
எனவே முகம், கை கால்களைக் கழுவும் போது விரிவாகக் கழுவுவது சிறந்ததாகும். 
தலைக்கு மஸஹ் செய்தல். 
இரு கைகளையும் கழுவிய பின்னர் ஈரக் கையால் தலையைத் தடவ வேண்டும். இது மஸஹ் எனப்படும். 
நபி (ஸல்அவர்கள் உளூச் செய்த முறையை அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலிஅவர்கள் விளக்கும்போதுதம் இரண்டு கைகளையும் தலையின் முன்பகுதியில் வைத்து பிடரி வரை கொண்டுசென்று பிறகு அப்படியே எந்த இடத்திலிருந்து தடவ ஆரம்பித்தார்களோ அந்த இடத்திற்குத்திரும்பக் கொண்டு வந்தார்கள்
அறிவிப்பவர்: யஹ்யா, நூல்கள்: புகாரீ 185, முஸ்லிம் 346 
இது தான் நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த மஸஹ் செய்யும் முறையாகும். பெண்களும் ஆண்களைப் போலவே பிடரி வரை மஸஹ் செய்ய வேண்டும். 
 
தலையில் ஒரேயொரு முடியில் சிறிதளவை மட்டும் ஒரு விரலால் தொட்டால் போதும் என்று ஷாஃபி மத்ஹபைச் சார்ந்தவர்களும், தலையில் நான்கில் ஒரு பங்கு அளவுக்கு மஸஹ் செய்தால் போதும் என்று ஹனஃபி மத்ஹபைச் சார்ந்தவர்களும் கூறுகின்றனர். இதற்கு நபிவழியில் எந்தச் சான்றும் இல்லை. 
 
எத்தனை தடவை மஸஹ் செய்ய வேண்டும்?
தலைக்கு ஒரு தடவையோ அல்லது இரண்டு தடவையோ மஸஹ் செய்யலாம். 
நபி (ஸல்அவர்கள் உளூச் செய்த முறையைஅப்துல்லாஹ் பின் ஸைத் (ரலிஅவர்கள் விளக்கும் போதுகையை (பாத்திரத்தில்நுழைத்து இருகைகளையும் தலையில் வைத்து முன் பக்கத்திலிருந்து பின் பக்கம் கொண்டு வந்து பின்னர்பின்பக்கமிருந்து முன் பக்கம் கொண்டு வந்தார்கள்இவ்வாறு ஒரு தடவை செய்தார்கள்
அறிவிப்பவர்: யஹ்யா, நூல்: புகாரீ 186 
நபி (ஸல்அவர்கள் தலைக்கு இரண்டு தடவை மஸஹ் செய்தார்கள்
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி), நூல்: நஸயீ 98 
காதுகளுக்கு மஸஹ் செய்தல். 
தலைக்கு மஸஹ் செய்யும் போது இரண்டு காதுகளுக்கும் மஸஹ் செய்வது நபிவழியாகும். 
நபி (ஸல்அவர்கள் உளூச் செய்த போது தலைக்கும்தமது ஆட்காட்டி விரல்களைக் காதுகளின்உட்பகுதியிலும்,கட்டை விரலை காதுகளின் வெளிப்பகுதியிலும் வைத்து காதுகளுக்கும் மஸஹ்செய்தார்கள்
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி), நூல்: நஸயீ 101 
 
பிடரியில் மஸஹ் செய்ய வேண்டுமா? 
தலைக்கு மஸஹ் செய்வது போல் சிலர் பிடரியில் மஸஹ் செய்கின்றனர். இதற்கு ஆதாரப்பூர்வமான எந்தச் செய்தியும் கிடையாது.  
இரண்டு கால்களையும் கழுவுதல். 
இதன் பின்னர் இரு கால்களையும் கழுவ வேண்டும். முதல் வலது காலையும், பின்னர் இடது காலையும் கழுவ வேண்டும்.
நபி (ஸல்அவர்கள் உளூச் செய்த முறையை இப்னு அப்பாஸ் (ரலிஅவர்கள் விளக்கும்போதுஒரு கைத் தண்ணீர் அள்ளி அதனை தமது வலது காலில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றிஅதனைக் கழுவினார்கள்பின்னர் இன்னொரு கைத் தண்ணீர் அள்ளித் தமது இடது காலில்ஊற்றிக் கழுவினார்கள்
அறிவிப்பவர்: அதா பின் யஸார், நூல்: புகாரீ 140 
 
கால்களைக் கரண்டை வரைகவனமாகக்கழுவுதல்.
கால்களைக் கரண்டை வரை கவனமாகக்கழுவுவது அவசியமாகும்நபி (ஸல்அவர்கள்உளூச் செய்த முறையை உஸ்மான் (ரலி)அவர்கள் விளக்கும் போதுஇருகால்களையும் கரண்டை வரை மூன்று தடவைகழுவினார்கள்.  
அறிவிப்பவர்: ஹும்ரான், நூல்: புகாரீ 160
உளூச் செய்யும் தொட்டியிலிருந்து மக்கள் உளூச் செய்து கொண்டிருந்த போது அவ்வழியேசென்ற அபூஹுரைரா (ரலிஅவர்கள் (எங்களைப் பார்த்து) ’உளூவை முழுமையாகச் செய்யுங்கள்.குதிகால்களைச் சரியாகக் கழுவாதவர்களுக்குக் கேடு தான்‘ என்று நிச்சயமாக முஹம்மத் (ஸல்)அவர்கள் கூறினார்கள்‘ என்றார்கள்.
அறிவிப்பவர்: முஹம்மத் பின் ஸியாத், நூல்: புகாரீ 165
 
எத்தனை தடவை கழுவ வேண்டும்?
தலைக்கு மஸஹ் செய்வதைத் தவிர மற்ற காரியங்கள் அனைத்தையும் ஒவ்வொரு தடவையோ, அல்லது இரண்டிரண்டு தடவையோ, அல்லது மும்மூன்று தடவையோ செய்யலாம். நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தடவை கழுவி உளூச் செய்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரீ 157
நபி (ஸல்அவர்கள் இரண்டிரண்டு தடவைகள் கழுவி உளூச் செய்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி), நூல்: புகாரீ 158
நபி (ஸல்அவர்கள் உளூச் செய்த முறையை உஸ்மான் (ரலிஅவர்கள் விளக்கும் போதுதமதுகைகளில் மணிக்கட்டு வரை மூன்று தடவை ஊற்றிக் கழுவினார்கள்பின்னர் தமது வலதுகையை விட்டு (தண்ணீர் எடுத்துவாய் கொப்பளித்து மூக்கையும் சுத்தம் செய்தனர்பின்னர்முகத்தையும்மூட்டு வரை இரு கைகளையும் மூன்று தடவை கழுவினார்கள்பின்னர் தலைக்குமஸஹ் செய்தார்கள்பின்னர் இரு கால்களையும் கரண்டை வரை மூன்று தடவைகழுவினார்கள்.
அறிவிப்பவர்: ஹும்ரான், நூல்: புகாரீ 160
எனவே ஒவ்வொரு உறுப்பையும் ஒரு தடவை கழுவுவதும், இரண்டு தடவை கழுவுவதும், மூன்று தடவை கழுவுவதும் நபி வழி தான். நம் வசதிக்கும், விருப்பத்திற்கும் ஏற்ப எதை வேண்டுமானாலும் நடைமுறைப் படுத்தலாம்.
ஒரு உளூவிலேயே கூட நாம் விரும்பியவாறு செய்யலாம். முகத்தை இரு தடவை கழுவி விட்டு, கைகளை மூன்று தடவையும், கால்களை ஒரு தடவையும் கழுவலாம்.
 நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த முறையை அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் விளக்கும் போது, தமது இரு முன் கைகளிலும் தண்ணீரை ஊற்றி இரு முறை கழுவினார்கள். பின்னர் மூன்று முறை வாய்கொப்பளித்து மூக்கிற்குத் தண்ணீர் செலுத்திச் சீந்தினார்கள். பின்னர் தமது முகத்தை மூன்று முறை கழுவினார்கள். பின்னர் தமது இரு கைகளையும் மூட்டு வரை இரண்டு இரண்டு முறை கழுவினார்கள். அறிவிப்பவர்: யஹ்யா
நூல்கள்: புகாரீ 185, முஸ்லிம் 346
மூன்று தடவைக்கு மேல் கழுவக் கூடாது.
உளூவின் போது ஒவ்வோர் உறுப்பையும் அதிகப்பட்சமாக மூன்று முறை கழுவலாம் என்பதைக் கண்டோம். மூன்று தடவைக்கு மேல் கழுவுவதற்குத் தடை உள்ளது.
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து உளூச் செய்யும் முறை பற்றிக் கேட்டார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் மும்மூன்று தடவைகள் கழுவி உளூச் செய்து காட்டி விட்டு, ‘இது தான் உளூச் செய்யும் முறையாகும். யார் இதை விட அதிகப்படுத்துகிறாரோ அவர் தீங்கிழைத்து விட்டார்; வரம்பு மீறி விட்டார்; அநியாயம் செய்து விட்டார்’ எனக் கூறினார்கள். (ஹதீஸின் சுருக்கம்)
அறிவிப்பவர்: அம்ர் பின் ஷுஐப் (ரலி)
நூல்கள்: நஸயீ 140, அஹ்மத் 6397
வரிசையாகச் செய்தல்.
மேற்கூறப்பட்ட காரியங்களை மேற்கூறப்பட்ட வரிசைப்படி செய்வது தான் நபிவழியாகும். இந்த வரிசைப்படி தான் நபி (ஸல்) அவர்கள் செய்து காட்டியுள்ளனர். இதை மேலே நாம் எடுத்துக் காட்டிய ஹதீஸ்களிலிருந்து அறியலாம்.
காலுறைகள் மீது மஸஹ் செய்தல்.
 உளூச் செய்யும் போது கடைசியாக இரு கால்களையும் கரண்டை வரை கழுவ வேண்டும் என்பதை உரிய ஆதாரங்களுடன் முன்னர் கண்டோம்.
காலுறை அணிந்திருப்பவர்கள் கால்களைக் கழுவாமல் காலுறையின் மேற்பகுதியில் ஈரக் கையால் தடவிக் கொள்ளலாம் என்பது இந்தச் சட்டத்தில் உள்ள விதி விலக்காகும்.
நான் ஒரு பிரயாணத்தில் நபி (ஸல்) அவர்களோடு இருந்தேன். நபி (ஸல்) அவர்கள் (இயற்கைத்) தேவைக்காகச் சென்றார்கள். நான் நபி (ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றினேன். அதில் நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்தார்கள். அப்போது முகத்தையும், இரு கைகளையும் கழுவினார்கள். தலைக்கு மஸஹ் செய்தார்கள். இரு காலுறைகள் மீதும் மஸஹ் செய்தார்கள். 
அறிவிப்பவர்: முகீரா (ரலி), நூல்கள்: புகாரீ 182, முஸ்லிம் 404 
பெண்கள் காலுறைகள் மீது மஸஹ் செய்யலாமா? 
பெண்கள் காலுறைகள் மீது மஸஹ் செய்வது கூடாது என்று சிலர் கூறுகின்றனர். இது தவறாகும். நபி (ஸல்) அவர்கள் செய்து காட்டிய எந்த வணக்கமும் இரு பாலருக்கும் உரியது தான். பெண்களுக்கு இல்லை என்றால் அதை நபி (ஸல்) அவர்கள் சொல்யிருக்க வேண்டும். அவ்வாறு ஹதீஸ்களில் கூறப்படாததே இச்சலுகை பெண்களுக்கும் பொருந்தும் என்பதற்குப் போதிய ஆதாரமாகும். 
மேலும் காலுறைகள் மீது மஸஹ் செய்ய அனுமதிக்கப்பட்டிருப்பது அதைக் கழற்றுவதால் ஏற்படும் சிரமத்துக்காகவே! அச்சிரமம் இரு பாலருக்கும் பொதுவானது என்பதால் இச்சலுகையும் பொதுவானது தான். 
காலுறைகள் மீது மஸஹ் செய்யவதற்குரிய நிபந்தனைகள்.
ஆண்களும் பெண்களும் கால்களைக் கழுவாமல் காலுறைகள் மீது மஸஹ் செய்யலாம் என்ற இச்சலுகைக்கு சில நிபந்தனைகள் உள்ளன.
காலுறைகளை அணிவதற்கு முன் கால்களைக் கழுவியிருக்க வேண்டும் என்பது முதல் நிபந்தனையாகும்.
நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்வதற்காக நான் தண்ணீர் ஊற்றிய போது அவர்களின் காலுறைகளை நான் கழற்ற முயன்றேன். அப்போது அவர்கள், ‘அவற்றை விட்டு விடு! ஏனெனில் கால்கள் தூய்மையாக இருந்த நிலையில் தான் அவற்றை நான் அணிந்திருக்கிறேன்’ என்று கூறி அவற்றின் மீது மஸஹ் செய்தார்கள். 
அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஃபா (ரலி), நூல்கள்: புகாரீ 206, முஸ்லிம் 408 
காலுறைகள் அணிவதற்கு முன் கால்கள் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதை இந்த ஹதீஸிருந்து அறியலாம். 
கால்களில் வெளிப்படையாகத் தெரியும் அசுத்தங்கள் ஏதும் ஒட்டியிருந்து அதன் மேல் காலுறை அணிந்து கொண்டால் மஸஹ் செய்ய முடியாது. காலுறையை அணியும் போது உளூவுடன் இருக்க வேண்டும். 
தூய்மையாக இருக்க வேண்டும் என்பது இவ்விரண்டையும் குறிக்கும். 
ஒருவர் உளூச் செய்து கால்களைக் கழுவுகின்றார். உடனே காலுறைகளை அணிந்து கொள்கின்றார் என்றால் அதன் பின்னர் அவர் உளூச் செய்யும் போது கால்களைக் கழுவாமல் காலுறைகள் மீது மஸஹ் செய்து கொள்ளலாம். அதன் பின்னர் அவர் மலஜலம் கழித்தாலும் கால்களைக் கழுவாமல் காலுறைகள் மீது மஸஹ் செய்து கொள்ளலாம். 
ஒருவர் லுஹர் நேரத்தில் உளூச் செய்கின்றார். அப்போது கால்களையும் கழுவுகின்றார். இதன் பின்னர் அஸர் வரை அவரிடமிருந்து உளூவை நீக்கும் காரியங்கள் ஏதும் நிகழவில்லை. இந்த நிலையில் அஸர் நேரத்தில் காலுறைகளை அணிகின்றார் என்றால் இவரும் இதன் பின்னர் காலுறைகள் மீது மஸஹ் செய்யலாம். காலுறை அணிவதற்குச் சற்று முன்னர் தான் கால்களைக் கழுவ வேண்டும் என்று கட்டாயம் இல்லை. காலுறை அணியக் கூடிய நேரத்தில் அவருக்கு உளூ இருக்க வேண்டும் என்பது தான் கட்டாயம்.  
சலுகையின் கால அளவு.
உளூவுடனும், கால் அசுத்தம் இல்லாத நிலையிலும் காலுறை அணிந்தவர், காலமெல்லாம் காலுறைகள் மீது மஸஹ் செய்ய முடியாது.  
தினமும் ஒரு தடவையாவது காலுறைகளைக் கழற்றி கால்களைக் கழுவிக் கொள்ள வேண்டும். இன்று காலை 10மணிக்கு உளூச் செய்த நிலையில் ஒருவர் காலுறை அணிந்தால் நாளை காலை 10 மணி வரை அவர் எத்தனை தடவை உளூச் செய்தாலும் கால்களைக் கழுவத் தேவையில்லை. காலுறைகள் மீது மஸஹ் செய்வதே போதும். 24மணி நேரம் கடந்து விட்டால் கால்களைக் கழுவி விட்டு உளூவுடன் காலுறையை அணிந்து கொள்ள வேண்டும். 
பயணிகளாக இருப்பவர்களுக்கு இதில் கூடுதல் சலுகை உள்ளது. அவர்கள் உளூவுடன் காலுறை அணிந்தால் காலுறை அணிந்த நேரத்தில் இருந்து மூன்று நாட்கள் (72 மணி நேரம்) காலுறையைக் கழற்றாமல் காலுறைகள் மீது மஸஹ் செய்யலாம். பயணத்தில் இருப்பவர்கள் மூன்று நாட்களுக்குப் பின் உளூச் செய்யும் போது கால்களைக் கழுவிவிட்டு உளூவுடன் காலுறையை அணிய வேண்டும். 
காலுறைகள் மீது மஸஹ் செய்வது பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேள்வி கேட்கச் சென்றேன். அதற்கவர்கள், ‘அலீ பின் அபீதாபிடம் சென்று கேள். அவர் தான் நபி (ஸல்) அவர்களுடன் பயணம் செய்பவராக இருந்தார்’ என்று கூறினார்கள். நாங்கள் அலீ (ரலி) அவர்களிடம் இது பற்றிக் கேட்டோம். ’பயணிகளுக்கு மூன்று பகல் மூன்று இரவு எனவும், உள்ளூரில் இருப்பவர்களுக்கு ஒரு பகல் ஓர் இரவு எனவும் நபி (ஸல்) அவர்கள் ஏற்படுத்தினார்கள்’ என்று அலீ (ரலி) விடையளித்தார்கள். 
அறிவிப்பவர்: ஷுரைஹ், நூல்: முஸ்லிம் 414 
குளிப்பு கடமையானால் இச்சலுகை இல்லை.
குளிப்பு கடமையாகி விட்டால் குளிக்கும் போது காலுறைகளைக் கழற்ற வேண்டும். கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது உடல் முழுவதும் கழுவி விட்டு காலை மட்டும் கழுவாமல் காலுறைகள் மீது மஸஹ் செய்தால் கடமையான குளிப்பு நிறைவேறாது. 
நாங்கள் பயணத்தில் இருந்தால் மூன்று நாட்களும், உள்ளூரில் இருந்தால் ஒரு நாளும், மலம், ஜலம், தூக்கம் போன்ற காரணங்களால் காலுறைகளைக் கழற்றத் தேவையில்லை எனவும், கடமையான குளிப்புக்காகக் காலுறைகளைக் கழற்ற வேண்டும் எனவும் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். 
அறிவிப்பவர்: ஸஃப்வான் பின் அஸ்ஸால் (ரலி)
நூல்கள்: திர்மிதீ 89, நஸயீ 127, இப்னுமாஜா 471, அஹ்மத் 17396 
மேற்புறத்தில் மஸஹ் செய்தல். 
நபி (ஸல்) அவர்கள் தமது காலுறைகளின் மேற்புறத்தில் மஸஹ் செய்ததை நான் பார்த்துள்ளேன். 
அறிவிப்பவர்: அலீ (ரலி), நூல்கள்: அபூதாவூத் 140, அஹ்மத் 699 
எவ்வாறு மஸஹ் செய்வது? 
நபி (ஸல்) அவர்கள் தலைக்கு மஸஹ் செய்தது பற்றி அவர்கள் வழியாக விரிவான செயல் விளக்கம் நமக்குக் கிடைக்கின்றது. ஆனால் காலுறையின் மேற்பரப்பில் மஸஹ் செய்தார்கள் என்று மட்டுமே கூறப்படுகின்றது. எவ்வாறு என்று விளக்கமாகக் கூறப்படவில்லை. 
எனவே தான் ஐந்து விரலால் மஸஹ் செய்ய வேண்டும்; மூன்று விரல்களால் மஸஹ் செய்ய வேண்டும்;காலுறையின் அதிகமான பகுதிகள் மீது மஸஹ் செய்ய வேண்டும் என்றெல்லாம் பலவிதமாக அறிஞர்கள் கருத்துக் கூறியுள்ளனர். ஆயினும் நபி (ஸல்) வழியாக குறிப்பிட்ட அளவு எதுவும் கூறப்படாததால் மஸஹ்’ என்று சொல்லப்படும் அளவுக்கு காலுறையின் மீது தடவ வேண்டும் என்று மக்களிடமே அந்த உரிமையை விட்டு விட வேண்டும். இப்படித் தான் செய்ய வேண்டும் என்று ஒரு குறிப்பிட்ட முறையைத் திணிக்கக் கூடாது.
இது தவிர காலுறைகள் தோல் தான் இருக்க வேண்டும் என்றெல்லாம் இன்னும் பல விதிகளைச் சில அறிஞர்கள் கூறியுள்ளனர். இவற்றுக்கு ஆதாரம் ஏதும் இல்லை.
தலைப்பாகையின் மேல் மஸஹ் செய்தல். 
காலுறையின் மேல் மஸஹ் செய்யும் சலுகை போலவே தலைப்பாகை அணிந்தவர்களும், தலையை மறைக்கும் துணியை தலையின் மேல் போட்டிருக்கும் ஆண்களும் பெண்களும் தலைக்கு மஸஹ் செய்வதற்குப் பதிலாக தலைப்பாகையின் மீதும் தலைத் துணியின் மீதும் மஸஹ் செய்யலாம். 
நபி (ஸல்) அவர்கள் தமது தலைப்பாகையின் மீதும் காலுறைகள் மீதும் மஸஹ் செய்ததை நான் பார்த்துள்ளேன்.  
அறிவிப்பவர்: அம்ரு பின் உமய்யா (ரலி), நூல்: புகாரீ 205 
தலைப்பாகையின் மேல் மஸஹ் செய்வது போல் தலை முக்காட்டின் மீதும் தலையின் மேல் போட்டிருக்கும் துணியின் மீதும் மஸஹ் செய்யலாம் என்பதற்குப் பின்வரும் ஹதீஸ் ஆதாரமாக அமைந்துள்ளது. 
நபி (ஸல்) அவர்கள் காலுறைகள் மீதும் தலை முக்காட்டின் மீதும் மஸஹ் செய்தனர். 
அறிவிப்பவர்: பிலால் (ரலி), நூல்: முஸ்லிம் 413 
முக்காடு என்று நாம் தமிழாக்கம் செய்த இடத்தில், கிமார்’ என்ற சொல் அரபு மூலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இச்சொல் ஆண்கள் அணியும் தலைத் துணியையும், பெண்கள் அணியும் தலைத் துணி – அதாவது முக்காட்டையும் குறிக்கும். 
பெண்களின் முக்காட்டைக் குறிக்க இச்சொல் திருக்குர்ஆனில் 24:31 வசனத்தில் பயன்படுத்தப் பட்டுள்ளது. 
இதில் இடம் பெற்றுள்ள ’குமுரிஹின்ன’ என்பது கிமார்’ என்பதன் பன்மையாகும்.  
புகாரீ 5825, 6568, 3321, 3578, 5381, 6688 ஆகிய ஹதீஸ்களிலும் கிமார்’ என்பது பெண்களின் முக்காட்டைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. 
இதை விரிவாக நாம் குறிப்பிடுவதற்குக் காரணம் தலைப்பாகை மற்றும் தலைத் துணியின் மேல் மஸஹ் செய்வது ஆண்களுக்கு மட்டுமே உரியது போல் பலரும் எழுதியுள்ளனர். பெண்களுக்கும் இந்தச் சலுகை உள்ளது என்று எவரும் கூறியதாகத் தெரியவில்லை. 
காலுறைகள் மீது மஸஹ் செய்வது எவ்வாறு ஆண்களுக்கும், பெண்களுக்கும் உரிய சலுகையோ அது போலவே தலையில் போட்டிருக்கும் முக்காட்டின் மேல் மஸஹ் செய்வதும் இருவருக்கும் பொதுவானது தான். 
மேலும் தலைப்பாகையை ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது கழற்ற வேண்டும் என்பதற்கும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் இல்லை. தப்ரானியில் இவ்வாறு ஹதீஸ் உள்ளது. அதை அபூஸலமா என்ற மர்வான் அறிவிக்கின்றார். இவர் ஏற்கத்தக்கவர் அல்ல என்று புகாரீ, அஹ்மத் பின் ஹம்பல், இப்னு அபீஹாத்தம் மற்றும் பலர் கூறுகின்றனர். 
எனவே காலுறைகளுக்குரிய நிபந்தனைகள் ஏதும் தலைப்பாகை மற்றும் முக்காடுகளுக்குக் கிடையாது. 
உளூச் செய்ய ஆரம்பிக்கும் போது பிஸ்மில்லாஹ் எனக் கூற வேண்டும் என்பதை முன்னர் குறிப்பிட்டுள்ளோம். 
உளூச் செய்து முடித்த பின்னர் கீழ்க்காணும் துஆவை ஓதுவது நபிவழியாகும்.
அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹுவஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸூலுஹு 
பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையில்லை என்று உறுதி கூறுகின்றேன். முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று நான் உறுதி கூறுகின்றேன். 
அல்லது 
அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹுவரஸூலுஹு. 
பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று உறுதி கூறுகின்றேன். முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று நான் உறுதி கூறுகின்றேன். 
உளூச் செய்த பின் மேற்கண்டவாறு யாரேனும் கூறினால் அவருக்காக சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் திறக்கப்படும். அவற்றில் அவர் விரும்புகின்ற வாசல் வழியாக நுழையலாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். 
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி), நூல்: முஸ்லிம் 345 
ஒவ்வொரு உறுப்பைக் கழுவும் போதும் தனித்தனி துஆக்கள் இல்லை. 
ஷாபி, ஹனபி மத்ஹப் கிதாபுகளிலும், தப்லீக் ஜமாஅத்தினரின் வெளியீடுகளிலும் ஒவ்வொரு உறுப்பைக் கழுவும் போதும் ஓத வேண்டிய துஆக்கள் என்று சில வாசகங்களை எழுதி வைத்துள்ளனர். சிலர் இதைக் கடைப்பிடித்தும் வருகின்றனர்.
இத்தகைய துஆக்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை. நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு உறுப்பையும் கழுவும் போது எந்த துஆவையும் ஓதியதில்லை. 
எவ்வித ஆதாரமும் இல்லாத கற்பனையின் அடிப்படையிலேயே மேற்கண்ட துஆக்களை ஓதுகின்றனர். இதை அறவே தவிர்க்க வேண்டும். நபி (ஸல்) கற்றுத் தராததை நாமாக ஓதுவது பித்அத் ஆகும். பித்அத்கள் நரகில் சேர்க்கும் என்பதை அஞ்சிக் கொள்ள வேண்டும். 
Share this article :

0 comments:

Post a Comment


உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை இலவசமக உங்கள் கைத்தொலைபேசி மூலம் பெற்றுக் கொள்ளுங்கள். Follow <இடைவெளி> strfn என டைப் செய்து 40404க்கு SMS அனுப்புங்கள்

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. www.strfn.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger