Home » » யமாமா போர் ஒரு பார்வை

யமாமா போர் ஒரு பார்வை

Written By STR Rahasiyam on Friday, November 30, 2012 | 10:43 AM


மக்காவிலிருந்து யமனுக்குச் செல்லும் வழியில் தாயிஃபுக்கு அருகில் உள்ள ஊர் தான் யமாமா! அரபியப் பாலைவனத்தில் யமாமா ஒரு சோலை வனமாகும். மக்காவுக்கு உணவு தானியங்கள் வழங்குகின்ற ஓர் உணவுக் களஞ்சியம் என்று சொல்லும் அளவுக்கு விவசாயம்,வேளாண்மை என இயற்கை வளம் நிறைந்த எழில் கொஞ்சும் நகரமாகும். இவ்வூர் மக்கள் பனூ ஹனீஃபா (ஹனீஃபா கிளையார்) என்று அழைக்கப்படுவர்.
இஸ்லாத்தின் மடியில் எழில்மிகு யமாமா
ஹனீஃபா கிளையினரின் தலைவர் இஸ்லாத்தை ஏற்றதைத் தொடர்ந்து யமாமா இஸ்லாத்தின் மடியில் அமர்ந்து தன்னை அழகுபடுத்திக் கொள்கின்றது. இது குறித்து புகாரியில் இடம் பெறும் ஹதீஸைப் பார்ப்போம்.
நபி (ஸல்) அவர்கள் நஜ்த் பகுதியை நோக்கி குதிரைப் படையொன்றை அனுப்பினார்கள். அந்தப் படையினர் பனூ ஹனீஃபா குலத்தைச் சேர்ந்த சுமாமா பின் உஸால் என்றழைக்கப்படும் மனிதர் ஒருவரைக் (கைது செய்து) கொண்டு வந்தார்கள். பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் அவரைக் கட்டிப் போட்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள்அவரிடம் வந்து, "நீ என்ன கருதுகின்றாய்சுமாமாவே!'' என்று கேட்டார்கள். அதற்கு அவர், "நான் நல்லதையே கருதுகின்றேன். முஹம்மதே! நீங்கள் என்னைக் கொன்றால் இரத்தப் பழி வாங்க வேண்டிய ஒருவனையே கொன்றீர்கள். (என்னை மன்னித்து) நீங்கள் உபகாரம் செய்தால் நன்றி செய்யக் கூடிய ஒருவனுக்கே உபகாரம் செய்கின்றீர்கள். நீங்கள் செல்வத்தை விரும்பினால் அதில் நீங்கள் விரும்புவதைக் கேளுங்கள்'' என்று பதிலளித்தார். எனவே அவர் விடப்பட்டார். மறுநாள் வந்த போது,அவரிடம், "சுமாமாவே! நீ என்ன கருதுகின்றாய்?'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், "நான் ஏற்கனவே தங்களிடம் சொன்னதைத் தான் கருதுகின்றேன்'' என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், "சுமாமாவை அவிழ்த்து விடுங்கள்'' என்று கூறினார்கள்.
உடனே சுமாமாபள்ளிவாசலுக்கு அருகிலிருந்த பேரீச்சந் தோட்டத்திற்குச் சென்று குளித்து விட்டு,பள்ளிவாசலுக்கு வந்து, "வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு எவருமில்லை என்று நான் உறுதி கூறுகின்றேன். மேலும்முஹம்மது அல்லாஹ்வின் தூதர் என்றும் நான் உறுதி கூறுகின்றேன்''என்று மொழிந்தார்.
பிறகு, "முஹம்மதே! அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் முகத்தை விட என்னிடம் வெறுப்புக்குரிய முகம் பூமியில் வேறெதுவும் இருக்கவில்லை. ஆனால் (இன்று) உங்களுடைய முகம் எல்லா முகங்களை விடவும் பிரியமானதாக ஆகி விட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் மார்க்கத்தை விட என் வெறுப்புக்குரிய மார்க்கம் வேறெதுவும் இருக்கவில்லை. ஆனால் இன்று மார்க்கங்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானதாக உங்கள் மார்க்கம் ஆகி விட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் ஊரை விட எனக்கு வெறுப்பான ஊர் வேறெதுவும் இருக்கவில்லை. ஆனால் இப்போது உங்கள் ஊரே எனக்கு மிகவும் பிரியமான ஊராகி விட்டது. உங்கள் குதிரைப் படையினர் என்னைப் பிடித்துக் கொண்டு விட்டனர்'' என்று கூறிவிட்டு, "நான் இப்போது (மக்காவிற்குச் சென்று) உம்ராச் செய்ய விரும்புகின்றேன். நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்?'' என்று கேட்டார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்கு நற்செய்தி கூறி உம்ராச் செய்ய அனுமதியளித்தார்கள். அவர் மக்காவிற்குச் சென்ற போதுஒருவர் அவரிடம், "நீ மதம் மாறி விட்டாயா?'' என்று கேட்டார். அதற்கு சுமாமா (ரலி), "அல்லாஹ்வின் மீதாணையாக! இல்லை. மாறாகஅல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுடன் இணைந்து இறைவனுக்குக் கீழ்ப்படியும் முஸ்லிமாக மாறி விட்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்கள் அனுமதி தரும் வரை (எனது நாடான) யமாமாவிலிருந்து ஒரு கோதுமை தானியம் கூட (மக்காவாசிகளான) உங்களுக்கு வராது'' என்று சொன்னார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: புகாரி 4372
இவ்வாறு நபி (ஸல்) அவர்களின் கட்டளையில்லாமல் மக்காவிற்கு குருணைகுருமணியளவுக்குக் கூட தானியங்களை வழங்க மாட்டோம் என்றொரு உறுதிப்பாட்டில் இருந்த யமாமாவில் கறையான் புற்றிலிருந்து கிளம்புகின்ற கருநாகம் போல் முஸைலமா கிளம்புகின்றான். எங்கும் இஸ்லாம்! எதிலும் இஸ்லாம் என்று இஸ்லாத்தின் ஒளிக்கதிர் வெளிச்சத்தில் அரபகத்தின் ஒவ்வொரு நாடும் மடமடவென்று விழ ஆரம்பித்தது. எதிர்கால ஆட்சியும் மாட்சியும் இஸ்லாத்திற்குத் தான் என்ற நிலை அரபகத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தலைமையில் நிறுவப்பட்டுநிரூபிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.
மக்கள் கூட்டம் கூட்டமாகக் கவரப்பட்டு இஸ்லாத்தை நோக்கி வந்த வண்ணமிருக்கின்றார்கள்ஆட்சியைக் கையில் எடுப்பதற்கு முஹம்மத் (ஸல்) அவர்களுக்குக் கை கொடுத்தது தூதுச் செய்தி தான் என்று எண்ணிய ஒரு சிலர் அரசியல் ஆதாயத்தைக் கணக்கில் கொண்டு தூதுத்துவ ஆயுதத்தைக் கையில் எடுத்தனர். அத்தகைய அற்ப ஆசாமிகளில் ஒருவன் தான் முஸைலமா! அவன் நபி (ஸல்) அவர்களின் காலத்திலேயே இவ்வாறு கூறிக் கொண்டு கிளம்பி விட்டான். அவ்வாறு கிளம்பியது மட்டுமில்லாமல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமே நேரடியாக வந்துதிமிருடன் அதிகாரப் பங்கீடு பற்றி பேசலானான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் முஸைலமா எனும் மகாப் பொய்யன் (யமாமாவிலிருந்து) வந்தான். அவன், "முஹம்மத் தமக்குப் பிறகு (தூதுத்துவம் மற்றும் ஆட்சித் தலைமையின்) பொறுப்பை எனக்கு அளித்தால் தான் நான் அவரைப் பின்பற்றுவேன்'' என்று கூறலானான். அவன் தன் சமுதாயத்து மக்கள் பல பேருடன் மதீனா வந்திருந்தான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (தமது பேச்சாளர்) ஸாபித் பின் கைஸ் (ரலி) தம்முடன் இருக்க அவனை நோக்கி வந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கையில் பேரீச்ச மட்டையின் துண்டு ஒன்று இருந்தது. முஸைலமா தன் தோழர்களுடன் இருந்தான்.
நபி (ஸல்) அவர்கள் அவனருகே சென்று நின்று கொண்டு, "இந்தத் துண்டை நீ கேட்டால் கூட நான் இதை உனக்குக் கொடுக்க மாட்டேன். அல்லாஹ் உனக்கு விதித்திருப்பதை மீறிச் செல்ல உன்னால் முடியாது. நீ (எனக்குக் கீழ்ப்படிய மறுத்து) முதுகைக் காட்டினால் அல்லாஹ் உன்னை அழித்து விடுவான். மேலும் எனக்குக் (கனவில்) காட்டப்பட்ட அதே ஆளாகத் தான் உன்னை நான் காண்கிறேன். இதோஇவர் தாம் ஸாபித். என் சார்பாக இவர் உனக்குப் பதிலளிப்பார்'' என்று சொல்லி விட்டு அவனிடமிருந்து திரும்பி விட்டார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)நூல்: 4373
இங்கே இரண்டு விஷயங்களை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
1. நபி (ஸல்) அவர்கள் முஸைலமாவை நோக்கிநீ எனக்கு மாறு செய்தால் அல்லாஹ் உன்னை அழித்து விடுவான் என்று முன்னறிவிப்பு செய்கின்றார்கள். இந்த முன்னறிவிப்பு எவ்வாறு நிகழ்கின்றது என்பதை யமாமா களத்தில் நாம் காண முடியும்.
2. நபி (ஸல்) அவர்களுடன் இருக்கும் அவர்களது பேச்சாளர் ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்களுக்கும் யமாமா போருக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உள்ளது. அந்தத் தொடர்பையும் யமாமா களத்தில் நாம் காணலாம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அவனுடைய அதிகாரப் பங்கீடு கோரிக்கை சுக்கு நூறாக நொறுங்கிப் போனதால் இனிமேல் இவரிடம் பேசிப் பயனில்லை என்று எண்ணி யமாமா திரும்பினான் முஸைலமா! யமாமா சென்றுதான் ஒரு இறைத் தூதர் என்ற பொய்ப் பிரச்சாரத்தை விடாது செய்து கொண்டிருந்தான்.
குறைஷிக் குலத்தில் ஓர் இறைத் தூதர் தோன்றும் போதுபனீ ஹனீஃபா குலத்தில் ஏன் ஓர் இறைத் தூதர் தோன்றக் கூடாது என்ற இன வாதத்தை முஸைலமா எழுப்பினான். இந்த ஆயுதம் நல்ல ஆதாயத்தை ஈட்டிக் கொடுத்தது. முஸைலமா ஒரு பொய்யன் என்பது பனூ ஹனீஃபா கிளையாருக்கு நன்றாகத் தெரிந்திருந்தும் அவனுக்குப் பின்னால் நிற்பதற்குரிய சரியான காரணம் அவர்களுடைய தலைகளில் ஏறிப் போயிருந்த இந்த இனவெறி தான்.
இந்தத் தருணத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மரணத்தைத் தழுவுகின்றார்கள். அபூபக்ர் (ரலி) ஆட்சிப் பொறுப்பேற்கின்றார்கள். சுற்றி சூழ உள்ள அரபக நாடுகள் மதம் மாறிக் கொண்டிருக்கின்றன. முஸைலமாவின் ஷைத்தான் அவனை மூர்க்கமாக்குகின்றான். யமாமாவில் மதமாற்றம் உச்சக்கட்டத்தை அடைகின்றது.
இந்நிலையில் "தாம் கொண்டு வந்த தூதுச் செய்தியில் முஸைலமாவுக்கும் பங்குண்டு'' என்று முஹம்மத் (ஸல்) அவர்களே சொன்னதாக நஹார் என்றழைக்கப்படும் ரஜ்ஜால் பின் அன்ஃபுவா என்பவன் பொய் சான்று பகர்ந்தான். இதுவும் முஸைலமாவுக்குக் கை கொடுத்தது.
15 பேர் கொண்ட பனூ ஹனீஃபா கிளையினர் குழு ஒன்று நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து இஸ்லாத்தைத் தழுவினர். இவர்களில் ரஜ்ஜால் பின் அன்ஃபுவாவும் ஒருவனாவான்.
நூல்: அல்ஜரஹ் வத்தஃதீல்அல்இஸாபா
இவனது பெயர் இந்நூல்களில் ரிஹால் பின் அன்ஃபுவா என்று பதியப்பட்டிருக்கின்றது.
இவனது பெயர் நஹார் என்பதாகும். நபி (ஸல்) அவர்களைச் சந்தித்த பனூ ஹனீஃபா குழுவினரில் இவனும் ஒருவன். இவன் குர்ஆனை நன்கு கற்றிருந்தான். முஸைலமா தன்னை நபியென்று வாதிட்டதும்முஹம்மத் (ஸல்) அவர்கள் தனது தூதுத்துவத்தில் முஸைலமாவைக் கூட்டாக்கிக் கொண்டார்கள் என்று சாட்சி கூறினான்.
நூல்: அல்இக்மால் லிபனி மாகூலா
இத்தகைய சூழலில் குட்டிக் குட்டி போலி நபிகளைப் புறங்காணச் செய்த அபூபக்ர் (ரலி) முஸைலமாவை எதிர் கொள்வதற்காக இக்ரிமா பின் அபீஜஹ்ல் தலைமையில் ஒரு படையை அனுப்புகின்றார்கள்.
முஸைலமாவிடம் தோற்ற முதல் படை
இவ்வாறு முஸைலமாவை எதிர் கொள்வதற்கு முதல் படை கிளம்புகின்றது. அந்தப் படை சென்று கொண்டிருக்கும் அதே வேளையில்முஸைலமாவை எதிர்க்க அந்தப் படையினரின் எண்ணிக்கை போதாது என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் முடிவெடுத்துஅதற்குப் பின்னால் ஷர்ஹபீல் பின் ஹஸனாவின் தலைமையில் இன்னொரு படையை அனுப்பி வைக்கின்றார்கள்.
இக்ரிமாவோ ஷர்ஷபீலின் படையை எதிர் பார்க்காமல் முஸைலமாவை எதிர் கொண்டு போர் தொடுத்து விடுகின்றார்கள். இக்ரிமாவின் படையால் முஸைலமாவின் படைக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. காரணம்முஸைலமாவின் படையில் இருந்தவர்கள் நாற்பதாயிரம் பேர் ஆவார்கள்.
இதனால் இக்ரிமாவின் படை தோல்வியைத் தழுவுவதற்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. சொற்ப நேரத்திலேயே அவரது படை முஸைலமாவின் படையால் முறியடிக்கப்படுகின்றது. இவருக்கு உதவுவதற்காகப் பின்னால் வந்து கொண்டிருந்த ஷர்ஷபீல் இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு மேலும் முன்னேறிச் செல்லவில்லை. அவ்வாறு அவர் முன்னேறினால் இக்ரிமாவுக்கு ஏற்பட்ட சோதனை தனக்கும் ஏற்படும் என்று கருதியே தன் படையை நிறுத்தி விடுகின்றார்.
காலித் பின் வலீத் யமாமா வருகை
காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் வருகைக்காக ஷர்ஷபீல் காத்திருக்கின்றார். அவர் எதிர்பார்த்தது போல் யமாமா போருக்காக நியமிக்கப்பட்ட காலித் தனது படையை யமாமா நோக்கி நடத்தி வருகின்றார்கள்.
நபி (ஸல்) அவர்களின் அதிகாரப்பூர்வ பேச்சாளர் என்று பட்டம் சூட்டப்பட்ட ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் (ரலி)யை அன்சாரிகளின் படைக்குத் தலைவராக காலித் பின் வலீத் நியமிக்கின்றார். வரும் வழியில் மதம் மாறியவர்களுக்கு மரண தண்டனை வழங்கிய வண்ணம் ஸாபித் பின் கைஸ் (ரலி) யமாமா நோக்கி வருகின்றார்.
இதற்கிடையே இக்ரிமாவைஹுதைஃபா (ரலி)அர்பஜா (ரலி) ஆகியோருடன் இணைந்து உம்மான்மஹரா வாசிகளை எதிர்த்துப் போரிடுமாறு அபூபக்ர் (ரலி) அவர்கள் கடிதத்தின் மூலம் கட்டளையிட்டு அந்தப் பணியை ஆற்றச் சொல்கின்றார்கள்.
குருட்டுத்தனமான குல வெறி
முஸைலமாவின் படை பலத்தைக் கவனத்தில் கொண்டு தான் அபூபக்ர் (ரலி) அவர்கள் காலித் படைக்குப் பின்னாலும் அதற்கு உதவியாக ஒரு சிறு படையை அனுப்பி வைக்கின்றார்கள். நாற்பதாயிரம் என்ற எண்ணிக்கை ஒரு சாதாரண எண்ணிக்கையல்ல. இவ்வளவு பெரிய எண்ணிக்கையை நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருந்த காலத்திலிருந்தே முஸைலமா திரட்டியிருக்கின்றான் என்றால் அதற்கு மூளையாகவும் மூலாதாரமாகவும் அமைந்தது குருட்டுத்தனம் நிறைந்த குல வெறி தான். இந்தக் குல வெறி அவர்களின் மூளையை வேலை செய்ய விடாமல் தடுக்கின்றது. உண்மையான நபி (ஸல்) அவர்களுடன் தான் உண்மை உள்ளதுபொய் தான் முஸைலமாவின் மூலதனமாக உள்ளது என்று தெரிந்தும் பனூ ஹனீஃபா கிளையினர் முஸைலமாவைப் பின்பற்றுகின்றனர்.
முஸைலமா பொய்யன் தான்! இருப்பினும் முளர் (குறைஷி) குலத்தில் உள்ள உண்மை நபியை விட ரபீஆ (பனூ ஹனீஃபா) குலத்தின் பொய் நபி மேலல்லவாஎன்று கூறிக் கொண்டனர். இப்படியொரு குல வெறி அவர்களுடைய மூளையில் ஏறி கூத்தாட ஆரம்பித்ததால் தான் சுமாமா (ரலி) போன்ற நபித்தோழர்களின் அறிவுரையைத் தூக்கி எறிந்தனர்.
சுமாமா (ரலி) அந்த மக்களிடம் கூறிய அறிவுரை இதோ:
ஒரே ஒரு செய்தியைக் கொண்டு இரு தூதர்கள் இணைந்து வர முடியாது. முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள். அவருக்குப் பின்னால் இனி ஒரு நபியே கிடையாது. எந்த ஒரு நபியும் இனி அவருடன் கூட்டாக முடியாது. "ஹா,மீம். இது மிகைத்தவனும்அறிந்தவனுமாகிய அல்லாஹ்விடமிருந்து அருளப்பட்ட வேதம். (அவன்) பாவத்தை மன்னிப்பவன்மன்னிப்புக் கோருவதை ஏற்பவன்கடுமையாகத் தண்டிப்பவன்அருளுடையவன். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. மீளுதல் அவனிடமே உள்ளது'' (அல்குர்ஆன் 40:1,2,3) இது அல்லாஹ்வின் வார்த்தைகள். எவ்வளவு அர்த்தமுள்ளதாகவும்ஆழமுள்ளதாகவும்அழகானதாகவும் அமைந்திருக்கின்றன.
ஆனால் அதே சமயம்தவளைக்குப் பிறந்த தவளையே! தண்ணீர் குடிப்பதை நீ தடுப்பதுமில்லை. தண்ணீரைக் களங்கடிப்பதுமில்லை. எங்களுக்குப் பாதி பூமி! குறைஷிகளுக்குப் பாதி பூமி! எனினும் குறைஷியர் வரம்பு மீறும் கூட்டத்தினரே! இவை முஸைலமா வஹீ என்ற பெயரில் வாந்தி எடுத்த நாற்றம் நிறைந்த வார்த்தைகளாகும். அவன் உளறிக் கொட்டியிருக்கும் இந்த உளறல்களையெல்லாம் வஹீ என்று நம்பப் போகின்றீர்களா?
நூல்: தபகாத்துல் குப்ரா
சுமாமா (ரலி)யின் இந்த அறிவுரை செவிடன் காதில் ஊதிய சங்கானது. இதையெல்லாம் மீறித் தான் நாற்பதாயிரம் பேர்கள் பொய்யனுக்காகப் படை திரண்டனர்.
அக்ரிபாவில் அணி திரண்ட முஸைலமா படை
முஸைலமா படையினர் அணி திரண்ட இடம் அக்ரிபா என்ற இடமாகும். இது யமாமாவின் ஓரத்தில் அமைந்திருந்தது. இந்த இடத்தை முஸைலமா தேர்வு செய்யக் காரணம்படை தோல்வி முகத்தை நோக்கிச் சென்றால் உடனே பின்னால் அமைந்திருக்கும் கோட்டை போன்றமைந்த தோட்டத்திற்குள் நுழைந்து கொள்ளலாம் என்பதற்காகத் தான். அதற்கு ஏதுவாக இந்தப் போர்க்களத்திற்குப் பின்னால் வேளாண் நிலங்களைத் தவிர வேறு எதுவுமில்லை.
கடந்த கால போர்க் கள யுக்தியின் படிமுஸைலமா தன்னைப் பின்பற்றிப் போரிடுவோரின் பொருட் செல்வங்களைபோர்க்களத்திற்குப் பின்னால் குவிக்கச் செய்கின்றான். அப்போது தான் அவர்கள் தங்களது செல்வத்தைப் பாதுகாப்பதற்காக மூர்க்கத்தனமாகப் போரிடுவார்கள் என்று நம்பி இந்த ஏற்பாட்டைச் செய்திருந்தான்.
இது போல் அவர்களும் தங்கள் பொருட் செல்வங்களை இந்தப் போலி நபியின் உத்தரவைக் கேட்டுகொண்டு வந்து குவித்திருந்தனர். காலிதின் தலைமையில் வரும் படையை எதிர் கொள்ளக் காத்திருந்தனர். காலித் வருகின்றார் என்பதைத் தெரிந்து தான் இப்படியொரு இடத்தைத் தேர்வு செய்தனர்.
தான் ஓர் இறைத்தூதர்அல்லாஹ்வின் உதவி தனக்குண்டு என்ற தன்னம்பிக்கைதளர்வில்லாத உறுதிப்பாடு அவனுக்கு இருந்திருக்குமானால் ஓடி ஒளிவதற்கும் பதுங்குவதற்கும் ஏதுவான இடத்தைத் தேர்வு செய்திருக்க மாட்டான். அவனது இந்த நடவடிக்கைதான் அல்லாஹ்வின் அழிவைச் சந்திக்கப் போகின்றோம் என்ற அவனது பதட்டத்தையும்கலக்கத்தையும் தான் காட்டுகின்றது.
இருப்பினும் மக்களிடத்தில் தனது தளர்ச்சியையும் தயக்கத்தையும் வெளிப்படுத்திக் காட்ட முடியாதல்லவா?அதனால் அவற்றையெல்லாம் அவன் மறைத்துக் கொண்டுபடையைத் தயார் படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான். தன்னுடைய படையில் இரு பக்க அணிகளில் ஒரு பக்க அணிக்கு முஷ்கம் பின் துபைலையும்மறு பக்க அணிக்கு ரஜ்ஜால் பின் அன்ஃபுவாவையும் தளபதிகளாக்கினான்.
வளரும் இன்ஷா அல்லாஹ்
Share this article :

0 comments:

Post a Comment


உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை இலவசமக உங்கள் கைத்தொலைபேசி மூலம் பெற்றுக் கொள்ளுங்கள். Follow <இடைவெளி> strfn என டைப் செய்து 40404க்கு SMS அனுப்புங்கள்

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. www.strfn.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger