(எஸ். அப்பாஸ் அலீ MISc)
நம்முடைய இஸ்லாமிய சமுதாயத்தில் பலரிடம் இஸ்லாம் குறித்து தவறான நம்பிக்கைகள் நிறைந்துள்ளன. குறிப்பாக இஸ்லாத்தின் அடிப்படை விஷயத்திலும் இவர்கள் தவறான நம்பிக்கையைக் கொண்டுள்ளனர்.
இலங்கை மற்றும் தமிழகத்தில் ஏகத்துவப் பிரச்சாரம் வருவதற்கு முன் குர்ஆன், ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என்ற சரியான நிலைபாட்டை மக்கள் அறியாது இருந்தனர். இன்றைக்கும் பலருடைய நிலை அவ்வாறே உள்ளது.
முன்னோர்கள், பெரியார்கள், இமாம்கள் எதைக் கூறினாலும் அக்கூற்றுக்கு ஆதாரம் இருக்கின்றதா? இல்லையா? என்று சிந்திக்கும் மனநிலை அன்றைக்கு மக்களிடம் இல்லை.
இமாம்கள் கூறுவதையே ஆதாரமாக எடுத்துக் கொண்டு அவர்களைக் கண்மூடி பின்பற்றி வந்தனர். மத்ஹபு மாயவலையில் சிக்கி இருந்தனர்.
குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டு மட்டும் தான் இஸ்லாத்தின் அடிப்படை. இவ்விரண்டிலும் கூறப்பட்டவை மட்டுமே இஸ்லாம். இவ்விரண்டிலும் இல்லாத விஷயங்கள் ஒருக்காலும் மார்க்கமாக முடியாது என்று குர்ஆனும் ஹதீஸ்களும் கூறுகின்றன.
மத்ஹபைப் பின்பற்றிக் கொண்டிருந்த மக்களிடம் இந்த ஆதாரங்களை எடுத்துச் சொல்லி குர்ஆன், ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என்ற சரியான நிலைபாட்டின் பால் அவர்களை அழைத்தோம். அல்லாஹ்வின் கிருபையால் பலர் மத்ஹபிலிருந்து விடுபட்டார்கள்.
இவ்வாறு மத்ஹபிலிருந்து விடுபட்ட பலர், நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்று கூறி இன்றைக்கு வேறொரு மத்ஹபில் சிக்கியுள்ளனர். இமாம்களையும் பெரியார்களையும் பின்பற்றுவது மத்ஹபு என்றால் நபித்தோழர்களைப் பின்பற்றுவதும் மத்ஹபு தான்.
இவர்கள் எந்த வசனங்களையும் ஹதீஸ்களையும் கூறி மத்ஹபுகள் கூடாது எனக் கூறினார்களோ அதே வசனங்களும் ஹதீஸ்களும் நபித்தோழர்களைப் பின்பற்றுவது என இவர்கள் எடுத்துள்ள நிலைபாட்டிற்கும் எதிராகவே உள்ளன.
தவ்ஹீத்வாதிகள் யார்?
இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையில் தடம் புரண்டுவிட்ட இவர்கள் ஏகத்துவவாதிகள் தான் என சிலர் நினைத்துக் கொண்டு இருக்கின்றனர். ஏகத்துவத்தை சரியாகப் புரியாதவர்களே இவ்வாறு நினைக்க முடியும்.
ஏகத்துவம் என்றால் இறைவனுக்கு மட்டும் உரிய பண்புகளும் அதிகாரங்களும் அவன் ஒருவனுக்கு மட்டுமே உள்ளன. அவன் அல்லாத வேறு யாரிடமும் இவை இல்லை என்று நம்புவதாகும். இறைவனுக்கு மட்டும் உரிய பல அதிகாரங்களில் ஏதேனும் ஒன்றை, பிறருக்கு இருப்பதாக நம்பினாலும் அது ஏகத்துவத்திற்கு எதிரான நம்பிக்கையாகும்.
அனைத்தையும் இறைவனே செய்கிறான் என்று நம்பும் ஒருவன் குழந்தை பாக்கியம் கொடுக்கும் ஆற்றல் மட்டும் இறந்து போன இன்னாருக்கும் உள்ளது எனக் கூறிவிட்டால் அவன் ஏகத்துவத்தை விட்டு வெளியேறி விடுகிறான்.
தர்ஹா வழிபாட்டையும் பித்அத் அனாச்சாரங்களையும் ஒரு பக்கம் எதிர்த்துக் கொண்டு மறுபக்கம் நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் எனக் கூறுபவர்கள் இந்த நிலையில் தான் இருக்கின்றார்கள்.
மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய சட்ட திட்டங்களை இயற்றும் அதிகாரம் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உள்ளது. இறைத்தூதர்கள் உட்பட யாருக்கும் இதில் எள்ளளவு கூட அதிகாரம் இல்லை.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மார்க்க அடிப்படையில் மக்களுக்கு செய்த போதனைகள் அவர்கள் சுயமாகக் கூறியவை அல்ல. மாறாக அவையும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து நபியவர்களுக்கு அருளப்பட்டவை. எனவே தான் அவற்றை நாம் மார்க்கமாக ஏற்றுக் கொள்கிறோம்.
பின்வரும் வசனங்கள் மார்க்கத்தின் சட்டங்களை இயற்றும் அதிகாரம் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உள்ளது எனக் கூறுகின்றது.
கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது.
அல்குர்ஆன் (39:3)
இந்த மார்க்கத்தை அல்லாஹ்வுக்கே மட்டுமே கலப்பற்றதாக்கி வணங்குமாறும், உறுதியாக நிற்குமாறும், தொழுகையை நிலை நாட்டு மாறும், ஸகாத்தைக் கொடுக்குமாறும் தவிர அவர்களுக்கு வேறு கட்டளை பிறப்பிக்கப் படவில்லை. இதுவே நேரான மார்க்கம்.
அல்குர்ஆன் (98:5)
இஸ்லாமிய மார்க்கத்தில் தொழுகை மட்டும் வணக்கமில்லை. இறைவன் இட்ட அனைத்து உத்தரவுகளுமே வணக்கம் தான். இறைவனுடைய கட்டளைகளுக்கு நாம் கீழ்ப்படிவதால் இதற்கு வணக்கம் என்று கூறப்படுகின்றது.
இறைவனுக்கு மட்டும் கொடுக்க வேண்டிய இந்த அந்தஸ்தை நபித்தோழர்களுக்கு வழங்கி நபித்தோழர்களின் உத்தரவுகளுக்கு நான் கீழ்ப்படிவேன் என்று யாராவது கூறினால் அவர் நபித்தோழர்களை வணங்கி விடுகிறார். தெளிவான இணைவைப்பில் விழுந்து விடுகிறார்.
கிறிஸ்தவர்கள் ஈஸா (அலை) அவர்களைக் கடவுளின் மகன் என்று கூறி அல்லாஹ்வுக்கு உரிய அதிகாரங்களையும் தன்மைகளையும் அவருக்கு இருப்பதாக நம்பினர். மற்ற எவருடைய விஷயத்திலும் இவர்கள் இவ்வாறு நம்பிக்கை வைக்கவில்லை.
இவர்கள் பாதிரிமார்களுக்கும் மத போதகர்களுக்கும் ஈஸா நபியைப் போன்று அனைத்து அதிகாரங்களும் இருப்பதாக நம்பவில்லை. மாறாக பாதிரிமார்கள் எதைக் கூறினாலும் அதை வேத வாக்காக ஏற்றுக் கொண்டனர்.
இந்த ஒரு காரணத்துக்காக இவர்கள் மதபோதகர்களைக் கடவுளாக்கினார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். கடவுளுக்கு உரிய சட்டமியற்றும் அதிகாரம் மதபோதகர்களுக்கு உண்டு என இவர்கள் நம்பியதே இதற்குக் காரணம்.
அவர்கள் அல்லாஹ்வையன்றி தமது மத போதகர்களையும், பாதிரிகளையும், மர்யமின் மகன் மஸீஹையும் கடவுள்களாக்கினர். ஒரே கடவுளை வணங்குமாறு தான் அவர்கள் கட்டளையிடப்பட்டனர். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவர்கள் இணை கற்பிப்பவற்றை விட்டும் அவன் தூயவன்.
அல்குர்ஆன் (9:31)
எனவே இறைச்செய்தி கொடுக்கப்படாத நபித்தோழர்களைப் பின்பற்றலாம் என்ற நம்பிக்கை முற்றிலும் இஸ்லாத்திற்கு முரணானதாகும்.
நபித்தோழர்களின் விளக்கம்
நபித்தோழர்களைப் பின்பற்றக் கூடியவர்களில், மார்க்க விஷயங்களில் நபித்தோழர்களைக் கட்டாயம் பின்பற்றியாக வேண்டும் என்று பச்சையாகக் கூறுபவர்களும் இருக்கின்றார்கள்.
இந்தக் கூற்று குர்ஆனுக்கும் நபிமொழிகளுக்கும் நேரடியாக முரணாக இருப்பதால் இவ்வாறு கூறாமல், இதே கருத்தை வேறு வார்த்தையில் கூறி மழுப்ப நினைப்பவர்களும் இந்தக் கூட்டத்தில் இருக்கின்றனர்.
அதாவது நாங்கள் நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்று கூறவில்லை. குர்ஆனுக்கு அவர்கள் அளிக்கும் விளக்கத்தை ஏற்க வேண்டும் என்றே கூறுகிறோம். பின்பற்றுவதும் விளக்கத்தை ஏற்பதும் வெவ்வேறானவை என்று சமாளிக்கின்றனர்.
நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்பதும் அவர்களின் விளக்கத்தை ஏற்க வேண்டும் என்பதும் ஒரே கருத்து தான். இதை விரிவாக அறிந்து கொள்வோம்.
குர்ஆனுடைய விளக்கம் இரண்டு வகைப்படும் என அல்லாஹ் பின்வரும் வசனத்தில் கூறுகிறான்.
மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.
அல்குர்ஆன் (16:44)
அவர்கள் முரண்பட்டதை அவர்களுக்கு (முஹம்மதே!) நீர் விளக்குவதற்காகவே உமக்கு இவ்வேதத்தை நாம் அருளியுள்ளோம். (இது) நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நேர் வழியாகவும், அருளாகவும் உள்ளது.
அல்குர்ஆன் (16:64)
நபி (ஸல்) அவர்கள் அளிக்கும் விளக்கம், நாமாகப் புரிந்து கொள்ளும் விளக்கம் என இரண்டு விளக்கங்கள் குர்ஆனுக்கு இருப்பதாக அல்லாஹ் இந்த வசனத்தில் குறிப்பிடுகிறான்.
குர்ஆனுக்கு நபி (ஸல்) அவர்கள் கொடுக்கும் விளக்கம் ஒரு வகை. இந்த விளக்கம் இல்லாமல் குர்ஆனை தெளிவாகப் புரிந்து கொள்ள முடியாது. இந்த வகையான விளக்கத்தை நபி (ஸல்) அவர்களைத் தவிர வேறு யாரும் கூற முடியாது. கூறினாலும் ஏற்றுக் கொள்ளக் கூடாது.
ஏனென்றால் நபி (ஸல்) அவர்களுக்கு குர்ஆன் இறைவனிடமிருந்து வந்ததைப் போன்று அதற்குரிய விளக்கமும் இறைவனிடமிருந்து அருளப்பட்டது. இதைப் பின்வரும் வசனம் தெளிவுபடுத்துகின்றது.
(முஹம்மதே!) இதற்காக (குர்ஆனை மனனம் செய்வதற்காக) அவசரப்பட்டு உமது நாவை அசைக்காதீர்! அதைத் திரட்டுவதும், ஓதச் செய்வதும் நம்மைச் சேர்ந்தது. எனவே நாம் அதை ஓதும் போது அந்த ஓதுதலைப் பின்பற்றுவீராக! பின்னர் அதைத் தெளிவுபடுத்துவது நம்மைச் சேர்ந்தது.
அல்குர்ஆன் (75:17)
உதாரணமாக, தொழ வேண்டும்; ஸகாத் கொடுக்க வேண்டும்; ஹஜ் செய்ய வேண்டும் என்ற கட்டளை மட்டுமே குர்ஆனில் உள்ளது. இந்த வணக்கங்களை எவ்வாறு செய்ய வேண்டும் என்ற விபரம் குர்ஆனில் இல்லை. நபி (ஸல்) அவர்களே இந்த விளக்கங்களை அளித்துள்ளார்கள். இந்த விளக்கங்கள் நபி (ஸல்) அவர்கள் சுயமாகக் கூறியவை அல்ல. அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு அருளப்பட்டவையாகும்.
நபி (ஸல்) அவர்களின் துணையில்லாமல் நமக்கு விளங்கக்கூடிய வசனங்களும் குர்ஆனில் உள்ளன. இந்த வசனங்களுக்குச் சிறந்த முறையில் நாமே விளக்கம் கொடுக்க முடியும். அந்த விளக்கம் மற்ற வசனங்களுக்கு முரணில்லாத வகையில் ஏற்புடையதாக இருக்க வேண்டும்.
இந்த வகை வசனங்களுக்கு நபித்தோழர்கள் உட்பட யார் விளக்கம் அளித்தாலும் அதை கண் மூடிக் கொண்டு ஏற்றுவிடக் கூடாது. அந்த விளக்கம் சரியாக இருக்கின்றதா? என்று சிந்தித்துப் பார்த்தே ஏற்க வேண்டும்.
நபித்தோழர்களின் விளக்கத்தை ஏற்க வேண்டும் என்று கூறுபவர்கள் இந்த வித்தியாசங்களையும் நுணுக்கங்களையும் கவனத்தில் கொள்வதில்லை. எந்த வரைமுறையும் இல்லாமல் அவர்களைப் பின்பற்றி வருகின்றனர்.
ஸகாத் எப்போது கொடுக்க வேண்டும்? எவ்வளவு கொடுக்க வேண்டும்? இந்த விஷயங்களை நாமாகத் தீர்மானிக்க முடியாது. நபி (ஸல்) அவர்களைத் தவிர வேறு யாரும் இதற்கு விளக்கம் கூறக் கூடாது.
ஆனால் நபித்தோழர்களைப் பின்பற்றுபவர்கள் இவ்விஷயத்தில் நபித்தோழர்களின் கூற்றுக்களை ஏற்றுக் கொள்கின்றனர். இங்கே இவர்கள் நபித்தோழர்களின் விளக்கங்களை ஏற்பதால் நபித்தோழர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இடத்தில் வைத்து விட்டனர். இறைச்செய்தி அல்லாத விஷயங்களைப் பின்பற்றி ஏகத்துவ வட்டத்திற்கு வெளியில் நிற்கின்றனர்.
நபித்தோழர்களைப் பின்பற்றுவதன் விபரீதம் பற்றி இதழ்கள் வாயிலாகவும் நூல்கள் வாயிலாகவும் போதுமான அளவு மக்களுக்குத் தெளிவு படுத்தியுள்ளோம்.
எனவே தலைவர்களின் தவறான வழிகாட்டுதலால் நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்ற கொள்கையில் இருப்பவர்கள், இதன் விபரீதத்தை உணர்ந்து மார்க்க விஷயங்களில் குர்ஆன் ஹதீஸ் அல்லாத வேறு எதையும் பின்பற்றக்கூடாது என்ற சரியான நிலைபாட்டிற்கு வர வேண்டும்.
எல்லாம் வல்ல இறைவன் நேர்வழிகாட்டுவானாக!
0 comments:
Post a Comment