Home » » உம்ரா செய்யும் முறை

உம்ரா செய்யும் முறை

Written By STR Rahasiyam on Saturday, September 8, 2012 | 9:07 AM


1. இஹ்ராம் அணிதல்
 இஹ்ராமுக்கு முன் குளித்தல்
மாதவிடாய் ஏற்பட்ட பெண்களும், பிரசவத் தீட்டு ஏற்பட்ட பெண்களும் இஹ்ராமுக்கு முன் குளிப்பது நபிவழியாகும்.
நாங்கள் (இஹ்ராம் கட்டும் எல்லையான) துல்ஹுலைஃபாவை அடைந்த போது (அபூபக்ர் (ரலி) அவர்களின் மனைவியான) அஸ்மா பின்த் உமைஸ் அவர்கள், முஹம்மது பின் அபூபக்ர் என்ற குழந்தையைப் பெற்றார்கள்.
"நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அஸ்மா பின்த் உமைஸ்) கேட்டனுப்பினார்கள்.  "நீ குளித்து விட்டு, இரத்தத்தை உறிஞ்சுகின்ற துணியை இடுப்பில் கட்டிக் கொண்டு இஹ்ராம் கட்டிக் கொள்'' என்று நபி (ஸல்) அவர்கள் அவருக்குப் பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 2137
இஹ்ராம் பற்றிய விளக்கம்
"இஹ்ராம்' என்பது குறிப்பிட்ட சில வார்த்தைகளைக் கூறுவதாகும். அப்போது குறிப்பிட்ட வகையில் உடையணிந்திருக்க வேண்டும். 
ஒருவர் ஒரு இஹ்ராமில் ஹஜ்ஜையும் உம்ராவையும் செய்ய நாடினால் "லப்பைக்க ஹஜ்ஜன் வஉம்ரதன்'' (ஹஜ்ஜையும் உம்ராவையும் நாடி இறைவா உன்னிடம் வந்து விட்டேன்) என்று கூற வேண்டும்.
ஹஜ்ஜை மட்டும் செய்ய நாடினால் "லப்பைக்க ஹஜ்ஜன்'' என்று கூற வேண்டும்.
உம்ராவை மட்டும் செய்ய நாடினால் "லப்பைக்க உம்ரதன்'' என்று கூற வேண்டும்.
இவ்வாறு கூறுவதே இஹ்ராம் ஆகும். இதைத் தொடர்ந்து தல்பியா எனும் முழக்கத்தைச் சொல்ல வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "லப்பைக்க ஹஜ்ஜன் வஉம்ரதன்'' என்று கூறி ஹஜ், உம்ராவுக்காக தல்பியா கூறியதை நான் செவியுற்றுள்ளேன்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 2194, 2195
 இஹ்ராமிற்குப் பின் தடுக்கப்பட்ட காரியங்கள்
ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான தடைகள்
1. தலை மற்றும் உடலில் உள்ள முடிகளைக் களையக் கூடாது.
அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும், உம்ராவையும் முழுமைப்படுத்துங்கள்! நீங்கள் தடுக்கப்பட்டால் இயன்ற பலிப்பிராணியை (அறுங்கள்.) பலிப்பிராணி அதற்குரிய இடத்தை அடைவதற்கு முன் உங்கள் தலைகளை மழிக்காதீர்கள்! உங்களில் நோயாளியாகவோ, தலையில் ஏதேனும் தொந்தரவோ இருப்பவர் (தலையை முன்னரே மழிக்கலாம்.) அதற்குப் பரிகாரமாக நோன்பு அல்லது தர்மம் அல்லது பலியிடுதல் உண்டு.  (அல்குர்ஆன் 2:196)
பேன், பொடுகு, புண் போன்ற தொந்தரவுகளால் தலைமுடியை மழிக்க நேர்ந்தால் மேற்கண்ட வசனத்தின் அடிப்படையில் அதற்குப் பரிகாரம் செய்ய வேண்டும்.
ஹுதைபிய்யா சமயத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து "உன் தலையில் உள்ள பேன்கள் உனக்குத் தொல்லை தருகின்றனவா?'' என்று கேட்டார்கள். நான் "ஆம்'' என்றேன். "அப்படியானால் தலையை மழித்து விட்டு ஒரு ஆட்டை அறுப்பீராக! அல்லது மூன்று நாட்கள் நோன்பு நோற்பீராக! அல்லது மூன்று "ஸாவு' பேரிச்சம்பழங்களை ஆறு ஏழைகளுக்குப் பங்கிட்டுக் கொடுப்பீராக!'' என்றார்கள்.
அறிவிப்பவர்: கஃப் பின் உஜ்ரா (ரலி)
நூல்: புகாரி 1814, 1815, 1816, 1818, 4159, 4190, 4191, 4517, 5703
2. நகங்களை வெட்டக் கூடாது.
"உங்களில் ஒருவர் துல்ஹஜ் பிறையைக் கண்டு, அவர் குர்பானி கொடுக்க எண்ணினால் தனது முடியையும், நகங்களையும் வெட்டக் கூடாது'' என்பது நபிமொழி.
அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)
நூல்: முஸ்லிம் 3653, 3654
"குர்பானி கொடுப்பவர் முடியையும், நகங்களையும் வெட்டக் கூடாது'' என்ற இந்தத் தடை இஹ்ராம் கட்டியவருக்கும் பொருந்தக் கூடியது தான்.
3. நறுமணம் பூசக் கூடாது
ஒரு மனிதர் இஹ்ராம் கட்டியிருக்கும் போது அவரது வாகனம் அவரைக் கீழே தள்ளியது. உடனே அவர் இறந்து விட்டார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "தண்ணீராலும் இலந்தை இலையாலும் அவரைக் குளிப்பாட்டுங்கள்! அவரது இரு ஆடைகளில் அவரைக் கபனிடுங்கள். அவரது உடலுக்கு நறுமணம் பூச வேண்டாம். அவரது முகத்தையோ, தலை முடியையோ மூட வேண்டாம். ஏனெனில் அவர் கியாமத் நாளில் "தல்பியா' கூறியவராக எழுப்பப் படுவார்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 1265, 1266, 1267, 1268, 1839, 1849, 1850, 1851
"அவருக்கு நறுமணம் பூசாதீர்கள். ஏனெனில், அவர் மறுமை நாளில் தல்பியா கூறியவராக எழுப்பப் படுவார்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதிலிருந்து இஹ்ராம் அணிந்தவர் நறுமணம் பூசக் கூடாது என்பதை நாம் அறியலாம்.
4. திருமண ஒப்பந்தம் செய்யக் கூடாது.
"இஹ்ராம் கட்டியவர் திருமணம் செய்யக் கூடாது. பிறருக்குத் திருமணம் செய்து வைக்கவும் கூடாது. பெண் பேசவும் கூடாது'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உஸ்மான் பின் அஃப்பான்(ரலி)
நூல்: முஸ்லிம் 2522, 2524
5. உடலுறவு கொள்ளக் கூடாது.
ஹஜ்(ஜுக்குரிய காலம்) தெரிந்த மாதங்களாகும். அம்மாதங்களில் ஹஜ்ஜை (தன் மீது) விதியாக்கிக் கொண்டவர் ஹஜ்ஜின் போது உடலுறவு கொள்வதோ, குற்றம் செய்வதோ, விதண்டா வாதம் புரிவதோ கூடாது. நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அதை அல்லாஹ் அறிகிறான். (ஹஜ்ஜுக்குத்) தேவையானவற்றைத் திரட்டிக் கொள்ளுங்கள்! திரட்டிக் கொள்ள வேண்டியவற்றில் (இறை) அச்சமே மிகச் சிறந்தது. அறிவுடையோரே! என்னை அஞ்சுங்கள்! (அல்குர்ஆன் 2:197)
6. ஆசையுடன் தொடுதல், கட்டியணைத்தல், முத்தமிடுதல் போன்றவை கூடாது.
மேற்கண்ட வசனத்தில் உடலுறவு கூடாது என்பதைக் குறிக்க 'ரஃபத்' என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. இதில் ஆசையுடன் தொடுதல், கட்டியணைத்தல், முத்தமிடுதல் போன்ற அனைத்தும் அடங்கும்.
உடலுறவு தான் கூடாது; மற்றவை கூடும் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காக இதை இங்கு குறிப்பிடுகின்றோம்.
7. வேட்டையாடுதல் கூடாது
நம்பிக்கை கொண்டோரே! "தனிமையில் (தன்னை) அஞ்சுபவர் யார்?' என்பதை அல்லாஹ் அடையாளம் காட்ட (நீங்கள் இஹ்ராமுடன் இருக்கும் போது) உங்கள் கைகளுக்கும், உங்கள் ஈட்டிகளுக்கும் எட்டும் வகையில் சில வேட்டைப் பிராணிகளைக் காட்டி உங்களைச் சோதித்துப் பார்ப்பான். இதன் பின்னர் வரம்பு மீறுபவருக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு. (அல்குர்ஆன் 5:94)
நம்பிக்கை கொண்டோரே! இஹ்ராமுடன் இருக்கும் போது வேட்டைப் பிராணிகளைக் கொல்லாதீர்கள்! உங்களில் எவரேனும் வேண்டுமென்றே அதைக் கொன்றால் அவர் கொன்ற பிராணியுடன் ஒத்துப் போகும் கால்நடை (ஆடு, மாடு ஒட்டகம் ஆகியவை) பரிகாரமாகும். அது கஅபாவைச் சென்றடைய வேண்டிய காணிக்கை(ப் பிராணி). அல்லது பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். அல்லது அதற்கு ஈடான அளவு நோன்பு நோற்க வேண்டும். உங்களில் நீதியுடைய இருவர் இது பற்றித் தீர்ப்பளிக்க வேண்டும். தனது வினையின் விளைவை அவர் அனுபவிப்பதற்காக (இது அவசியம்). இதற்கு முன் நடந்தவற்றை அல்லாஹ் மன்னித்தான். மீண்டும் செய்பவரை அல்லாஹ் தண்டிப்பான். அல்லாஹ் மிகைத்தவன்; தண்டிப்பவன். (அல்குர்ஆன் 5:95)
உங்களுக்கும், ஏனைய பயணி களுக்கும் பயன்படும் பொருட்டு கடலில் வேட்டையாடுவதும், அதன் உணவும் உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. இஹ்ராமுடன் இருக்கும் போது நீங்கள் தரையில் வேட்டையாடுதல் தடுக்கப் பட்டுள்ளது. அல்லாஹ்வை அஞ்சுங் கள்! அவனிடமே ஒன்று சேர்க்கப் படுவீர்கள். (அல்குர்ஆன்5:96)
இஹ்ராமின் போது தடுக்கப்பட்ட செயல்களில் இந்த ஏழு காரியங்கள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானவை ஆகும்.
இஹ்ராமில் ஆண்களுக்கு மட்டும் தடுக்கப்பட்டவை
1. தலையை மறைக்கக் கூடாது
ஒரு மனிதர் இஹ்ராம் கட்டியிருக்கும் போது அவரது வாகனம் அவரைக் கீழே தள்ளியது. உடனே அவர் இறந்து விட்டார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "தண்ணீராலும் இலந்தை இலையாலும் அவரைக் குளிப்பாட்டுங்கள்! அவரது இரு ஆடைகளில் அவரைக் கபனிடுங்கள். அவரது உடலுக்கு நறுமணம் பூச வேண்டாம். அவரது முகத்தையோ, தலை முடியையோ மூட வேண்டாம். ஏனெனில் அவர் கியாமத் நாளில் "தல்பியா' கூறியவராக எழுப்பப்படுவார்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 1265, 1266, 1267, 1268, 1839
"மறுமையில் தல்பியா கூறியவராக எழுப்பப்படுவதற்காக அவரது தலையை மறைக்க வேண்டாம்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதிலிருந்து இஹ்ராம் கட்டியவர் தலையை மறைக்கக் கூடாது என்று அறியலாம்.
2. தையல் ஆடை அணியக் கூடாது.
"இஹ்ராம் கட்டியவர் எதை அணியலாம்?'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் "இஹ்ராம் கட்டியவர் சட்டையையோ, தலைப் பாகையையோ, தொப்பியையோ, கால் சட்டையையோ அணிய வேண்டாம். குங்குமச்சாயம், வர்ஸ் (எனும் மஞ்சள்) சாயம் தோய்க்கப்பட்ட ஆடைகளையும் அணிய வேண்டாம். செருப்பு கிடைக்காவிட்டால் தவிர காலுறைகளையும் அணிய வேண்டாம். அவ்வாறு காலுறைகளை அணியும் போது கரண்டைக்குக் கீழே இருக்குமாறு மேற்பகுதியை வெட்டி விடுங்கள்'' என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 134, 366, 1542, 1842, 5794
பெண்களுக்கு மட்டும் தடையானவை
"இஹ்ராம் கட்டிய பெண் தனது முகத்தை மறைக்க வேண்டாம். கையுறைகளையும் அவள் பயன்படுத்த வேண்டாம்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1838
இவ்விரண்டும் பெண்களுக்கு மட்டும் தடுக்கப்பட்டவையாகும்.
இஹ்ராமுக்குப் பின்னால் தடுக்கப் பட்ட காரியங்களில் ஆண்களும் பெண்களும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக தாம்பத்யம் போன்ற காரியங்களில் ஈடுபட்டு ஹஜ், உம்ரா போன்ற வணக்கத்தைப் பாழாக்கி விடக் கூடாது.
தலைமுடி மற்றும் நகங்களைக் களைவது இஹ்ராமுக்குப் பின் தடுக்கப்பட்டு உள்ளதால் அவற்றை இஹ்ராமுக்கு முந்தியே முடித்து விட வேண்டும்.
இஹ்ராமின் எல்லையை அடைந்ததும், "லப்பைக்க உம்ரத்தன் ஃபீஹஜ்ஜத்தின்'' அல்லது "லப்பைக்க உம்ரத்தன்'' என்று கூற வேண்டும். 
இந்த இடத்தில் சிலர், ''நான் அல்லாஹ்வுக்காக உம்ரா செய்கிறேன், இந்த உம்ராவை இலேசாக்கி வை'' என்பது போன்ற வார்த்தைகளைக் கூறுகின்றனர். இதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
அதன் பின்னர் தல்பியா கூற வேண்டும்.
தல்பியா கூறுதல்
"லப்பைக், அல்லாஹும்ம லப்பைக், லப்பைக் லாஷரீக லக லப்பைக், இன்னல் ஹம்த வன்னிஃமத லக வல்முல்க, லாஷரீக லக'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1549, 5915
இவ்வாறு மக்காவில் ஹரமை அடைகின்ற வரை தல்பியா சொல்ல வேண்டும். ஹரமை அடைந்த பின் தல்பியாவை நிறுத்தி விட்டு, தவாஃபுல் குதூம் என்ற உம்ராவுக்கான தவாஃப் செய்ய வேண்டும்.
தவாஃபுல் குதூம்
"குதூம்' என்றால் வருகை தருவது என்று பொருள். மக்காவுக்கு வருகை தந்தவுடன் செய்யப்படுவதால் இதற்கு "தவாஃப் அல்குதூம்' என்று கூறப்படுகிறது.
இந்த நாளில் தான் "தவாஃப் அல்குதூம்' செய்ய வேண்டும் என்று வரையறை ஏதும் கிடையாது. ஒருவர் இஹ்ராம் கட்டி எப்போது மக்காவில் பிரவேசிக்கிறாரோ அப்போது இதைச் செய்ய வேண்டும்.
ஹஜ்ஜுக்குரிய மாதங்களான ஷவ்வாலில் அல்லது துல்கஃதாவில் இஹ்ராம் கட்டி மக்காவுக்குள் அவர் பிரவேசித்தால் அப்போதே இந்த தவாஃபைச் செய்து விட வேண்டும்.
கஃபா ஆலயத்தை ஏழு தடவை சுற்றுவது ஒரு தவாஃப் ஆகும்.
தவாஃபுக்காக ஹரமுக்குள் சென்றதும் ஹஜ்ருல் அஸ்வதை முத்தமிட வேண்டும். ஹஜ்ருல் அஸ்வத் அமைந்துள்ள அந்த மூலையிலிருந்து தவாஃபைத் துவக்க வேண்டும்.
கஅபாவைச் சுற்றும் போது ஹிஜ்ர் என்ற பகுதியையும் சேர்த்தே சுற்ற வேண்டும். ஒவ்வொரு சுற்று முடியும் போதும் ஹஜ்ருல் அஸ்வதை முத்தமிட வேண்டும். முடிந்தால் முத்தமிட வேண்டும்; முடியாவிட்டால் கையால் தொட்டு முத்தமிட வேண்டும்; அதற்கும் இயலாவிட்டால் சைகையால் முத்தமிட வேண்டும்.
முதல் மூன்று சுற்றுக்களின் போது விரைந்து செல்ல வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜருல் அஸ்வதைத் தொட்டு முத்தமிட்டதை நான் பார்த்துள்ளேன்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1611
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீது அமர்ந்து தவாஃப் செய்தார்கள். (ஹஜருல் அஸ்வத் அமைந்த) மூலையை அடைந்தவுடன் அதை நோக்கி சைகை செய்தார்கள். தக்பீரும் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 1612, 1613, 1632, 5293
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "தவாஃப் அல்குதூம்' செய்யும் போது மட்டும் முதல் மூன்று சுற்றுக்கள் ஓடியும் நான்கு சுற்றுக்கள் நடந்தும் தவாஃப் செய்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1644, 1617
ருக்னுல் யமானி
கஅபாவின் இரண்டு மூலைகளில் ஒரு மூலையில் ஹஜருல் அஸ்வத் பதிக்கப்பட்டுள்ளது. மற்றொரு மூலை ருக்னுல் யமானி என்று கூறப் படுகின்றது. இந்த ருக்னுல் யமானி என்ற மூலையையும் தொடுவது நபி வழியாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நான்கு மூலைகளில் "யமானி' எனப்படும் இரண்டு மூலைகளைத் தவிர மற்ற இரண்டு மூலைகளைத் தொட்டு நான் பார்த்ததில்லை. 
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 166, 1609
ருக்னுல் யமானிக்கும், ஹஜருல் அஸ்வதுக்கும் இடையே "ரப்பனா ஆதினா ஃபித்துன்யா ஹஸனதன் வஃபில் ஆகிரதி ஹஸனதன் வகினா அதாபன்னார்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதை நான் செவியுற்றுள்ளேன்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸாயிப்(ரலி)
நூல்கள்: அஹ்மத் 14851, அபூதாவூத் 1616
மகாமு இப்ராஹீமில் தொழுதல்
இவ்வாறு ஏழு சுற்றுக்கள் முடிந்த பின் மகாமு இப்ராஹீம் அமைந்திருக்கும் இடத்தில் இரண்டு ரக்அத்துக்கள் தொழ வேண்டும். (முஸ்லிம் 2137)
ஸஃபா, மர்வாவில் ஸஃயீ செய்தல்
"தவாஃபுல் குதூம்' எனும் இந்த தவாஃபை நிறைவேற்றி, இரண்டு ரத்அத்கள் தொழுது விட்டு ஸஃபா, மர்வா எனும் மலைகளுக்கிடையே ஓட வேண்டும். இதற்கு ஸஃயீ என்று பெயர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தவாஃபை முடித்து இரண்டு ரக்அத்கள் தொழுத பிறகு "ஸஃபா' "மர்வா'வுக்கு இடையே ஓடினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1616, 1624, 1646, 1647, 1767, 1794, 4188 
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸஃபாவை அடைந்ததும் "ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்களாகும்'' என்ற (2:125) வசனத்தை ஓதினார்கள். "அல்லாஹ் எதை முதலில் கூறியுள்ளானோ அங்கிருந்தே ஆரம்பிப்பீராக'' என்று கூறிவிட்டு ஸஃபாவிலிருந்து அவர்கள் ஆரம்பித்தார்கள். அதன் மேல் ஏறி கஃபாவைப் பார்த்தார்கள். கிப்லாவை முன்னோக்கி "லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீகலஹு, லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலாகுல்லி ஷையின் கதீர். லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தா, அன்ஜஸ வஃதா, வநஸர அப்தா, லஹஸமல் அஹ்ஸாப வஹ்தா'' என்று கூறி இறைவனை பெருமைப்படுத்தினார்கள். இது போல் மூன்று தடவை கூறினார்கள். அவற்றுக்கிடையே துஆ செய்தார்கள். பின்னர் மர்வாவை நோக்கி இறங்கினார்கள். அவர்களின் பாதங்கள் நேரானதும் (சம தரைக்கு வந்ததும்) "பதனுல் வாதீ' என்ற இடத்தில் ஓடினார்கள். (அங்கிருந்து) மர்வாவுக்கு வரும் வரை நடந்தார்கள். ஸஃபாவில் செய்தது போலவே மர்வாவிலும் செய்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்கள்: முஸ்லிம் 2137
ஸஃபாவில் செய்தது போலவே மர்வாவிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்துள்ளதால் அங்கேயும் மேற்கண்ட திக்ருகள் மற்றும் துஆக்களைச் செய்ய வேண்டும்.
ஸஃபாவிலிருந்து மர்வாவுக்கு வருவது ஒன்று, மர்வாவிலிருந்து ஸஃபாவுக்கு வருவது மற்றொன்று என்ற கணக்கில் ஏழு தடவை சுற்ற வேண்டும்.
"நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏழு தடவை ஸஃயு செய்தார்கள். ஸஃபாவில் துவக்கி மர்வாவில் முடித்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 2137
நபி (ஸல்) அவர்கள் மர்வாவில் முடித்ததிலிருந்து "ஸஃபாவிலிருந்து மர்வா வந்தால் ஒரு தடவை என்றும், மர்வாவிலிருந்து ஸஃபாவுக்கு வந்தால் இரண்டு தடவை'' என்றும் விளங்கலாம்.
முடியைக் கத்தரித்தல்
"தலையை மழித்துக் கொள்வது பெண்களுக்குக் கிடையாது. (சிறிதளவு மயிரைக்) குறைத்துக் கொள்வதே அவர்களுக்கு உண்டு'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: அபூதாவூத் 1694
இத்துடன் உம்ரா நிறைவேறி விடுகின்றது. ஆண்களாக இருந்தால் தலையை மழித்தல், பெண்களாக இருந்தால் தலை முடியைக் கத்தரித்தல் மூலம் உம்ரா முடிவுக்கு வருகின்றது.
இப்போது உம்ராவின் வணக்க வழிபாடுகளை ஒருமுறை பார்ப்போம்.
1. குளித்தல்.
2. அனுமதிக்கப்பட்ட ஆடையை அணிந்து கொள்ளுதல்.
3. தவாஃபை துவங்கும் வரை தல்பியா கூறுதல்.
4. ஹிஜ்ர் உட்பட ஏழு முறை கஅபாவில் தவாஃப் செய்தல்.
5. மகாமு இப்ராஹீமில் இரு ரக்அத்துக்கள் தொழுதல்.
6. ஸஃபா, மர்வாவுக்கு இடையில் ஸஃயீ செய்தல்
7. தலை முடியைக் கத்தரித்துக் கொள்ளுதல்.
மேற்கண்ட வணக்கங்களைச் செய்து விட்டால் உம்ரா முடிந்து விடுகின்றது.
உம்ராவில் இடம்பெற்ற இந்த வணக்கங்களில் 1. இஹ்ராம், 2. கஅபாவை தவாஃப் செய்தல், 3. ஸஃபா, மர்வாவுக்கிடையில் ஸஃயீ செய்தல் ஆகியவை இல்லையெனில் உம்ரா இல்லை என்றாகிவிடும்.
தாய் தந்தையருக்காக நாம் ஹஜ் - உம்ரா செய்தல் 
அடுத்து தாய் தந்தையினர் உயிருடன் இருந்தால் அவர்களுக்காக ஹஜ் உம்ரா செய்யலாமா என்று கேட்டுள்ளீர்கள். உங்கள் பெற்றோர்கள் ஹஜ் கடமையான நிலையில் ஹஜ்ஜை நிறைவேற்றாமல் மரணித்துவிட்டாலோ அல்லது வயோதிகத்தின் காரணமாக அவர்களால் ஹஜ் செய்ய முடியாமல் போனாலோ அவர்களுடைய ஹஜ் கடமையை நிறைவேற்றுவது உங்கள் பொறுப்பாகும். பின்வரும் ஹதீஸ்கள் இதற்கு ஆதாரமாக உள்ளன. 
1513 حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ كَانَ الْفَضْلُ رَدِيفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَاءَتْ امْرَأَةٌ مِنْ خَشْعَمَ فَجَعَلَ الْفَضْلُ يَنْظُرُ إِلَيْهَا وَتَنْظُرُ إِلَيْهِ وَجَعَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْرِفُ وَجْهَ الْفَضْلِ إِلَى الشِّقِّ الْآخَرِ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ فَرِيضَةَ اللَّهِ عَلَى عِبَادِهِ فِي الْحَجِّ أَدْرَكَتْ أَبِي شَيْخًا كَبِيرًا لَا يَثْبُتُ عَلَى الرَّاحِلَةِ أَفَأَحُجُّ عَنْهُ قَالَ نَعَمْ وَذَلِكَ فِي حَجَّةِ الْوَدَاعِ رواه البخاري
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
ஃபள்ல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின் (ஒட்டகத்தில்) அமர்ந்துகொண்டிருந்த போது  "கஸ்அம்' எனும் கோத்திரத்தை சேர்ந்த ஒரு பெண் வந்தார். உடனே ஃபள்ல் அப்பெண்ணைப் பார்க்க அப்பெண்ணும் இவரைப் பார்த்தார். (இதைக் கவனித்த நபி (ஸல்) அவர்கள்) ஃபள்லின் முகத்தை வேறு திசையில் திருப்பினார்கள். பிறகு அப்பெண் நபி(ஸல்) அவர்களை நோக்கி, "அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களின் மீது ஹஜ்ஜைக் கடமையாக்கியுள்ளான். ஆனால் எனது வயது முதிர்ந்த தந்தையால் பயணிக்க முடியாது. எனவே நான் அவருக்குப் பகரமாக ஹஜ் செய்யலாமா?' எனக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "ஆம்!' என்றார்கள். இது "விடைபெறும்' ஹஜ்ஜின்போது நிகழ்ந்தது.
புகாரி (1513)
1939 و حَدَّثَنِي عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ أَبُو الْحَسَنِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَطَاءٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ بَيْنَا أَنَا جَالِسٌ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ أَتَتْهُ امْرَأَةٌ فَقَالَتْ إِنِّي تَصَدَّقْتُ عَلَى أُمِّي بِجَارِيَةٍ وَإِنَّهَا مَاتَتْ قَالَ فَقَالَ وَجَبَ أَجْرُكِ وَرَدَّهَا عَلَيْكِ الْمِيرَاثُ قَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّهُ كَانَ عَلَيْهَا صَوْمُ شَهْرٍ أَفَأَصُومُ عَنْهَا قَالَ صُومِي عَنْهَا قَالَتْ إِنَّهَا لَمْ تَحُجَّ قَطُّ أَفَأَحُجُّ عَنْهَا قَالَ حُجِّي عَنْهَا رواه مسلم
புரைதா (ரலி) அவர்கள் கூறினார்கள் :
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந்தேன். அப்போது அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து, "நான் என் தாயாருக்கு ஓர் அடிமைப் பெண்ணைத் தானமாக வழங்கியிருந்தேன். என் தாயார் இறந்துவிட்டார். (இப்போது அந்த அடிமைப் பெண் எனக்கே கிடைத்துவிட்டார். இந்நிலையில் தானத்திற்குரிய நற்பலன் எனக்கு உண்டா?)'' என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(தானம் செய்ததற்குரிய) நற்பலன் உனக்கு உறுதியாகிவிட்டது. வாரிசுரிமை, அவ்வடிமைப் பெண்ணை உனக்கே மீட்டுத் தந்துவிட்டது'' என்று சொன்னார்கள். அப்பெண்மணி, "என் தாயார்மீது ஒரு மாத நோன்பு (கடமையாகி) இருந்தது. அவர் சார்பாக நான் நோன்பு நோற்கலாமா?'' என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர் சார்பாக நீ நோன்பு நோற்றுக் கொள்'' என்றார்கள். அப்பெண்மணி, "என் தாயார் (இதுவரை) அறவே ஹஜ் செய்யவில்லை. அவர் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா?'' என்று கேட்டதற்கு, "அவருக்காக நீ ஹஜ் செய்'' என்று அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
பெற்றோர்கள் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்திருந்தால் ஹஜ் செய்வது அவர்களின் மீது கடமையாகிவிடும். இந்நிலையில் அவர்களால் ஹஜ்ஜை நிறைவேற்றாமல் போனால் அவர்களது சார்பில் அவர்களுடைய பொறுப்பாளர்கள் அதாவது உறவினர்கள் அதை நிûறேவேற்ற வேண்டும்.
1852 حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ أَبِي بِشْرٍ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ امْرَأَةً مِنْ جُهَيْنَةَ جَاءَتْ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ إِنَّ أُمِّي نَذَرَتْ أَنْ تَحُجَّ فَلَمْ تَحُجَّ حَتَّى مَاتَتْ أَفَأَحُجُّ عَنْهَا قَالَ نَعَمْ حُجِّي عَنْهَا أَرَأَيْتِ لَوْ كَانَ عَلَى أُمِّكِ دَيْنٌ أَكُنْتِ قَاضِيَةً اقْضُوا اللَّهَ فَاللَّهُ أَحَقُّ بِالْوَفَاءِ رواه البخاري
இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள் :
ஜுஹைனா கூட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "என் தாய் ஹஜ் செய்வதாக நேர்ந்து அதை நிறைவேற்றாமல் இறந்துவிட்டார். அவர் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா?' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "ஆம்! அவர் சார்பாக நீ ஹஜ் செய். உன் தாய்க்குக் கடன் இருந்தால் நீதானே அதை நிறைவேற்றுவாய். எனவே அல்லாஹ்வின் கடன்களை நிறைவேற்றுங்கள், கடன்கள் நிறைவேற்றப்படுவதற்கு அல்லாஹ் அதிகம் உரிமை படைத்தவன்'' என்றார்கள்.
புகாரி (1852)
6699 حَدَّثَنَا آدَمُ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ أَبِي بِشْرٍ قَالَ سَمِعْتُ سَعِيدَ بْنَ جُبَيْرٍ عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ أَتَى رَجُلٌ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لَهُ إِنَّ أُخْتِي قَدْ نَذَرَتْ أَنْ تَحُجَّ وَإِنَّهَا مَاتَتْ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَوْ كَانَ عَلَيْهَا دَيْنٌ أَكُنْتَ قَاضِيَهُ قَالَ نَعَمْ قَالَ فَاقْضِ اللَّهَ فَهُوَ أَحَقُّ بِالْقَضَاءِ رواه البخاري
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
(உக்பா பின் ஆமிர் என்றழைக்கப்பட்ட) ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, "(அல்லாஹ்வின் தூதரே!) என் சகோதரி ஹஜ் செய்வதாக நேர்ந்துகொண்டு (அதை நிறை வேற்றாமல்) இறந்துவிட்டார்'' என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "உன் சகோதரிக்குக் கடன் இருந்தால் நீதானே அதை நிறைவேற்றுவாய்?'' என்று கேட்டார்கள். அவர், "ஆம் (நான்தான் நிறைவேற்றுவேன்)'' என்றார். நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வின் கடனை நிறைவேற்று! கடன்கள் நிறைவேற்றப்பட அவனே அதிக உரிமை படைத்தவன்'' என்றார்கள்.
புகாரி (6699)
பெற்றோர்களுக்காக பிள்ளைகள் உம்ரா செய்வதற்கும் ஆதாரம் உள்ளது. எனவே பெற்றோர்களின் சார்பில் பிள்ளைகள் உம்ரா செய்யலாம். 
852 حَدَّثَنَا يُوسُفُ بْنُ عِيسَى حَدَّثَنَا وَكِيعٌ عَنْ شُعْبَةَ عَنْ النُّعْمَانِ بْنِ سَالِمٍ عَنْ عَمْرِو بْنِ أَوْسٍ عَنْ أَبِي رَزِينٍ الْعُقَيْلِيِّ أَنَّهُ أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَبِي شَيْخٌ كَبِيرٌ لَا يَسْتَطِيعُ الْحَجَّ وَلَا الْعُمْرَةَ وَلَا الظَّعْنَ قَالَ حُجَّ عَنْ أَبِيكَ وَاعْتَمِرْ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ رواه الترمذي
அபூ ரஸீன் (ரலி) அவர்கள் கூறினார்கள் : 
நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று அல்லாஹ்வின் தூதரே! எனது தந்தை வயது முதிர்ந்த பெரியவராக இருக்கின்றார். அவரால் ஹஜ் செய்யவோ உம்ரா செய்யவோ பயணிப்பதற்கோ முடியாது என்றேன். உனது தந்தைக்காக நீ ஹஜ் செய்துகொள். உம்ராவும் செய்துகொள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : திர்மிதி (852)
ஹஜ் உம்ரா செய்வதற்கு பெற்றோர்களால் முடியாமல் போனாலே அவர்கள் சார்பில் பொறுப்பாளர்கள் நிறைவேற்ற முடியும். பெற்றோர்களுக்கு சக்தி இருந்தால் இவ்வணக்கத்தை அவர்களே நிறைவேற்ற வேண்டும். உறவினர்கள் நிறைவேற்றக் கூடாது.
ஹஜ் என்பது ஒருவர் மீது கடைமையான நிலையில் அவர் ஹஜ்ஜை மேற்கொள்ளும் போது அனுமதிக்கப்பட்ட மூன்று வகையான ஹஜ்ஜில், தமத்தூ மற்றும் கிரான் ஆகிய இருவகையான ஹஜ்ஜுகளில் உம்ராவையும் இணைத்து செய்யும் போது  செய்யக்கூடிய உம்ராவை பற்றித்தான் இந்த நபித்தோழர் கேள்வி கேட்கின்றார். அப்போது செய்யும் உம்ராவை பற்றித்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் குறிப்பிடுகின்றார்கள்.
எனவே, இந்த ஹதீஸை தவறுதலாக புரிந்து கொண்டு, ஒருவர் தனது தாய் தந்தையருக்காக, உம்ராவைமட்டும் தனித்து செய்வதற்கு இந்த நபிமொழியை ஆதாரமாகக் காட்டக்கூடாது. மேலும், ஒருவர் தனது தாய் தந்தையருக்காக, உம்ராவைமட்டும் தனித்து செய்வதற்கு எந்த ஆதாரத்தையும் காணமுடியவில்லை. தனித்து உம்ரா செய்யவேண்டும் என்பது நம்மீத்து கட்டாய கடமையும் இல்லை
சக்தி பெறாதவர் மீது ஹஜ் கடமையா?
ஹஜ் செய்வதை பற்றி, அல்லாஹ் தனது திருமறையில் கூறும் போது,
அதில் தெளிவான சான்றுகளும் மகாமே இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை
அல்குர்-ஆன் 3:97
வயது முதிர்ந்து. உடல் பலவீனமடைந்த நிலையில் இருக்கக்கூடிய ஒருவர் ஹஜ் செய்யவேண்டும் என்றால், அதற்குரிய சக்தி அவரிடத்தில் இல்லை. அப்போது இவருக்குத்தான் ஹஜ் செய்ய சக்தியில்லையே, இவர் மீது ஹஜ் கடமையாகுமா? என்றால், இவர் மீது ஹஜ் கடமையில்லை. அதே நேரத்தில் அவர் உடல் வலிமையும், பொருளாதாரத்தையும் பெற்று திடகாத்திரமாக இருந்த நிலையில் அவர் மீது ஹஜ் கடமையாகி, அவர் அப்போது ஹஜ் செய்யாமலிருந்து இருப்பாரேயானால், அவர் சக்தி பெற்றிருந்த நிலையில் ஹஜ் செய்யாமல் விட்டதை, அவர்களுடைய வாரிசுகள் நிறைவேற்ற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிடுகின்றார்கள்.
கடன் வாங்கிய ஒருவர் அந்த கடனை நிறைவேற்றுவது கட்டாயம் என்பது போல, அவர் திடகாத்திரமாக இருந்த போது கடமையாகிய ஹஜ்ஜைத்தான் அவர் நிறைவேற்றியாக வேண்டுமே ஒழிய, ஒருவர் வாங்காத கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் என்று சொல்லுவது எப்படி நீதியாகாதோ, அதைப்போல கடைமையாகத ஹஜ்ஜை அவர் செய்யவேண்டும் என்று சொல்லுவதும் நீதியாகாது. 
மேற்கண்ட அடிப்படையில் இந்த சட்டத்தை விளங்கிக்கொண்டால் தான் சக்திபெற்றவர் மீது ஹஜ் கடமை என்ற வசனத்திற்கும், வயது முதிர்ந்த நிலையில் உள்ளவர்களுக்காக அவரது பொறுப்பாளர்கள் ஹஜ் செய்ய வேண்டும் என்ற நபிமொழிக்கும் எந்த முரணும் இல்லாமல் விளங்க முடியும் 
onlinepj
Share this article :

0 comments:

Post a Comment


உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை இலவசமக உங்கள் கைத்தொலைபேசி மூலம் பெற்றுக் கொள்ளுங்கள். Follow <இடைவெளி> strfn என டைப் செய்து 40404க்கு SMS அனுப்புங்கள்

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. www.strfn.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger