எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள அமெரிக்க தூதரம் மீது இன்று சனிக்கிழமை 2-வது நாளாக மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டது.
அப்போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. கல்வீச்சு, தடியடி, கண்ணீர் புகைக் குண்டு என அமெரிக்க தூதரகப் பகுதியே பெரும் போர்க்களமாக மாறியது.
இந்நிலையில் எகிப்தில் சனிக்கிழமையும் அமெரிக்காவுக்கு எதிரான போராட்டம் தொடர்ந்தது. தலைநகர் கெய்ரோவில் உள்ள அமெரிக்க தூதரகத்தைக் குறிவைத்து அங்குள்ள இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அப்பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடினர். இதனையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாருக்கும், வன்முறையாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
தூதரகத்தை நோக்கி கற்கள் வீசப்பட்டன. தூதரக சுற்றுச்சுவரின் ஒருபகுதியை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்த கும்பல் அங்கு ஏற்றப்பட்டிருந்த அமெரிக்க கொடியை இறக்கியது. போலீஸார் தடியடி மேற்கொண்டும், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் வன்முறையாளர்களை சிதறி ஓடச் செய்தனர்.
முன்னதாக இதே பகுதியில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த வன்முறையில் 224 பேர் காயமடைந்தனர். இவர்களில் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அமைதியாக போராட அதிபர் அழைப்பு: இதனிடையே மக்கள் தங்கள் எதிர்ப்பை அமைதியாகத் தெரிவிக்க வேண்டுமென எகிப்து அதிபர் முகமது மோர்ஸி கேட்டுக் கொண்டுள்ளார். தொழுகையை முடித்துக் கொண்ட பின்பு, மசூதிக்கு வெளியே வந்து மக்கள் அமைதி வழியில் போராட வேண்டுமென்று அவர் கூறியுள்ளார்.
பெங்ஹாசியில் விமானங்கள் பறக்கத் தடை: இதனிடையே லிபியாவின் பெங்ஹாசி நகரில் விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்களைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment