இறைவன் அருளிய இயற்கை மார்க்கமாம் இஸ்லாமிய மார்க்கம் அல்லாஹ்வின் மாபெரும் அருளால் உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் மாபெரும் வளர்ச்சி கண்டு வருகின்றது.
இஸ்லாத்திற்கு எதிராகப் பரப்பப்படும் அவதூறுகளுக்கு அளவே இல்லை. அதுமட்டுமல்லாமல் உலகத்திலேயே அதிகமான மக்களால் எதிர்க்கப்படும் ஒரே சித்தாந்தம் இஸ்லாம்தான். இப்படி அனைவரும் இஸ்லாத்தின் மீது அவதூறுகளையும், குற்றச்சாட்டு களையும், விமர்சனங்களையும், எதிர்ப்புகளையும் தொடுத்துவரும் இவ்வேளையில், அதிகமான எதிர்ப்புகளைச் சந்தித்து வரும் இந்த மார்க்கம் மனித அறிவு போடக்கூடிய கணக்கின் பிரகாரம் பார்த்தால் வீழ்ச்சியடைந்து அழிவை நோக்கித்தான் சென்றிருக்க வேண்டும். ஆனால் நிலைமை அப்படி உள்ளதா? இல்லவே இல்லை.
மாறாக இந்த அளவிற்கு அவதூறுகளையும், குற்றச்சாட்டுகளையும், விமர்சனங் களையும், எதிர்ப்பு களையும் சந்தித்து வரும் இந்த மார்க்கம் இவ்வளவு எதிர்ப்புகளையும் மீறி மகத்தான வளர்ச்சி கண்டு வருகின்றது.
இஸ்லாத்தை எதிர்ப்பவர்கள் இஸ்லாம் குறித்து கூறும் சாட்சி:
இஸ்லாம் அபரிமிதமான வளர்ச்சியைப் பெற்று வருகின்றது என்று முஸ்லிம்களாகிய நாம் சொன்னால் பிறர் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். இஸ்லாமியர்கள் என்பதால் நமது மார்க்கத்திற்கு ஆதரவாக, “இஸ்லாம் அபரிமிதமான வளர்ச்சி பெற்று வருகின்றது”என்று நாம் இட்டுக்கட்டி பொய் சொல்கின்றோம் என்று சொல்லி விடுவார்கள்.
நம்மை எதிர்க்கும் எதிரிகள் இந்தக்கருத்தைச் சொல்கின்றார்கள் என்று சொன்னால் அதை உங்களால் நம்ப முடிகின்றதா?
ஆம்! கத்தோலிக்க மதத்தலைவராக உள்ள போப் ஆண்டவர், “உலகத்தில் அதிகம் பரவும் மார்க்கம் இஸ்லாம்” என்ற கருத்தைத் தெரிவித்துள்ளார்.
உலகில் அதிகம் பரவும் மார்க்கம் இஸ்லாம் என போப் விடுத்த அறிக்கையை மேற்கோள் காட்டி வாடிகன் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. அதிகம் பரவிவரும் மார்க்கங்களில் இஸ்லாம் முன்னிலை வகிப்பதாகவும், கிறித்தவ மத நம்பிக்கையாளர்களைவிட மூன்று மில்லியன் அதிக எண்ணிக்கையுடையோராக முஸ்லிம்கள் உள்ளனர் என்றும், உலக மக்கள் தொகையில் நூற்றில் 17.5 சதவிகிதத்தினர் கிறித்தவர்களென்றால் அதில் 19 சதவிகிதத்தினர் முஸ்லிம்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வருடந்தோறும் 40 ஆயிரம் பேர் இஸ்லாத்தில் இணைவதாகவும், கிறித்தவ, யூத மற்றும் பிற மதத்தினர் இவ்வாண்டின் இறுதிப் பகுதியாகும்போது அதிகமாக இஸ்லாத்தில் இணையும் வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
கிறித்தவ மதத்தின் கத்தோலிக்க பிரிவாகவும், பெரும்பான்மையான கிறித்தவர்கள் ஏற்றுக் கொண்ட தலைவராகவும் உள்ள போப் ஆண்டவர் தனது அறிக்கையில், இஸ்லாம் குறித்து இவ்வாறு சொல்லியுள்ளார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன், எந்த அளவிற்கு இந்த மார்க்கம் எழுச்சியும், வளர்ச்சியும் கண்டு வருகின்றது என்று.
அதுமட்டுமல்ல, கிறித்தவ நாடு என்ற அந்தஸ்த்துடைய நாடுகள் எல்லாம் அங்கு ஏற்பட்டுவரும் இஸ்லாமிய எழுச்சி காரணமாக, அலை அலையாய், மக்கள் இஸ்லாத்தை நோக்கி படையெடுப்பதன் காரணமாக அரண்டு போய் உள்ளது. எப்படி என்று கேட்கின்றீர்களா?
இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தக் கோரி நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் :
இஸ்லாத்தின் வளர்ச்சி அபரிமிதமாக இருப்பதாகவும், அலை அலையாய் இஸ்லாத்தை நோக்கி மக்கள் சென்று கொண்டிருப்பதாகவும் இதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் டென்மார்க் நாட்டில் இஸ்லாமிய எதிரிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளார்கள். எந்த அளவிற்கு இஸ்லாம் அபரிமிதமான வளர்ச்சி பெற்று வருகின்றது என்பதை இந்த நிகழ்வுகள் நம் கண் முன்னால் படம் பிடித்துக்காட்டுகின்றன.
இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தச் சொல்லி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகின்றார்களா என்று ஆச்சர்யமாகக் கேட்கின்றீர்களா?
ஆம்! அது குறித்து பத்திரிகைகளில் வெளியான செய்தி இதோ:
இஸ்லாமியர்களுக்கு எதிராக டென்மார்க்கில் போராட்டம்
ஐரோப்பாவில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தடுத்து நிறுத்தக் கோரி, டென்மார்க்கில் போராட்டம் நடந்தது.
ஐரோப்பிய நாடுகளில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, இங்கிலாந்து விரைவில் கிறிஸ்தவ நாடு என்ற நிலையில் இருந்து மாறிவிடும் சூழ்நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது என மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
டென்மார்க்கின் ஆரஸ் நகரில் நூற்றுக்கணக்கானோர் திடீரென திரண்டு இஸ்லாத்திற்கு எதிராகக் கோஷமிட்டபடி ஊர்வலம் சென்றனர். அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு குழுவினர் போராட்டம் நடத்தினர்.
அப்போது இருதரப்புக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. கற்கள் மற்றும் பாட்டில்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். அவர்களைக் காவல்துறையினர் தடியடி நடத்தி விரட்டினர்.
இது தொடர்பாக 80க்கும் அதிகமானோரை காவல்துறையினர் கைது செய்தனர். இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், “டென்மார்க், இங்கிலாந்து, ஜெர்மனி, சுவீடன், போலந்து உள்பட பல ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 300க்கும் அதிகமானோர் இஸ்லாத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
பேரணி சென்றவர்களைத் தடுத்து நிறுத்த 2,500க்கும் அதிகமானோர் திரண்டனர். இதனால் மோதல் ஏற்பட்டது. நிலைமை இப்போது கட்டுக்குள் உள்ளது” என்றார்.
மேற்குறிப்பிட்ட செய்தியிலிருந்து நாம் அறியவரும் உண்மை என்னவென்றால், இஸ்லாத்தின் வளர்ச்சி அதன் எதிரிகளை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் டென்மார்க் நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமில்லையாம். “டென்மார்க், இங்கிலாந்து, ஜெர்மனி, சுவீடன், போலந்து உள்பட பல ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்” இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டதாக டென்மார்க் காவல்துறை கூறியுள்ளதைப் பார்க்கும் போது, “டென்மார்க், இங்கிலாந்து, ஜெர்மனி, சுவீடன், போலந்து உள்பட பல ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமிய எதிரிகள் மேற்கூறப்பட்ட தங்களது நாடுகளில் இஸ்லாத்தின் வளர்ச்சியைக் கண்டு கதிகலங்கியுள்ளனர் என்பதும் தெரியவருகின்றது. அதுமட்டுமல்லாமல், “டென்மார்க்,இங்கிலாந்து, ஜெர்மனி, சுவீடன், போலந்து உள்பட பல ஐரோப்பிய நாடுகளில் இஸ்லாம் அபரிமிதமான வளர்ச்சியை அடைந்து வருகின்றது என்ற உண்மையும் இதன் வாயிலாக வெளிப்படுகின்றது.
மேலும், இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு எதிராகப் போராட்டம் நடத்திய போராட்டக்காரர்கள் வைத்த முக்கியமான குற்றச்சாட்டு, கிறித்தவர்கள் மிகுதியாக வாழும் தங்களது நாடுகள் இஸ்லாத்தின் வளர்ச்சியின் காரணமாக கிறித்தவ நாடு என்ற அந்தஸ்தை இழந்து அது முஸ்லிம் நாடாக மாறிவிடுமோ என்ற பீதியின் காரணமாகத்தான் இந்தப் போராட்டம் என்றும் கருத்துக் கூறியிருப்பது, வல்ல இறைவனின் இம்மார்க்கம் எந்த அளவிற்கு வளர்ச்சியடைந்து கொண்டு செல்கின்றது என்பதற்கு மிகப்பெரும் சான்றாக அமைந்துள்ளது.
இஸ்லாத்தின் வளர்ச்சியை உண்மைப்படுத்தும் புள்ளி விபரங்கள்:
இஸ்லாத்தின் வளர்ச்சியின் காரணமாக கிறித்தவ நாடு என்ற அந்தஸ்த்தை இழந்து அது முஸ்லிம் நாடாக மாறிவிடுமோ என்ற பீதி இவர்களுக்கு வந்தது எப்படி என்று கேட்கின்றீர்களா?
இதோ அது குறித்து சமீபத்தில் வெளியான ஆய்வு முடிவுகளை உங்கள் பார்வைக்குத் தருகின்றோம்.
கீழ்க்கண்ட இந்த ஆய்வினை ஏதோ சவூதி அரேபிய அரசாங்கமோ, அல்லது இஸ்லாமிய வளைகுடா நாடுகளோ செய்தது என்று யாரும் நினைத்துக் கொள்ளக்கூடாது. அமெரிக்காவிலுள்ள ஒரு நிறுவனம்தான் இந்த ஆய்வை நடத்தியுள்ளது.
அமெரிக்காவிலுள்ள வாஷிங்டனைச் சேர்ந்த மத மற்றும் பொதுவாழ்க்கை குறித்த ஆராய்ச்சி மையம் ஒன்று இஸ்லாத்தின் வளர்ச்சி குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியது. இவர்கள் நடத்திய ஆய்வில், அடுத்த இருபது ஆண்டுகளில் இஸ்லாமியர் அல்லாதவர்களின் எண்ணிக்கையைவிட இரு மடங்கு அதிகமாக இஸ்லாமியர்களின் எண்ணிக்கை இருக்கும் என்று தெரியவந்துள்ளது.
இது குறித்து அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
“அதிகரிக்கும் இஸ்லாமிய மக்கள் தொகை”
உலகம் முழுவதும் இஸ்லாமிய மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், வருகிற 2030 ஆம் ஆண்டு வாக்கில் உலக மொத்த மக்கள் தொகையில் 25 விழுக்காட்டிற்கும் அதிகமானவர்களாக இஸ்லாமியர்கள் இருப்பார்கள் என்றும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதேபோல 2030-ம் ஆண்டில் இந்தியாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 23.6 கோடியைத் தாண்டும் என்றும் அது கூறுகிறது. மேலும், அடுத்த 20 ஆண்டுகளில் உலக முஸ்லிம் மக்கள் தொகை, முஸ்லிம் அல்லாத மக்கள் தொகையின் வளர்ச்சி விகிதத்தை விட இரண்டு மடங்கு வேகத்தில் அதிகரிக்கும் என்றும் அது தெரிவிக்கிறது.
கடந்த 2010ல் இருந்த 6.9 பில்லியன் மக்கள் தொகையில் 23.4சதவிகிதம் பேர் முஸ்லிம்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது. அதாவது அடுத்த இருபதாண்டுகளில் 3.5 சதவிகிதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அவ்வாறு 3.5 சதவிகிதம் அதிகரித்தால் 2010ல் 1.6 பில்லியனாக இருந்த இஸ்லாமியர்களின் எண்ணிக்கை, 2030ல் 2.2 பில்லியனாக அதிகரித்து காணப்படும்.
உலகம் முழுவதும் அதிகரித்து வரும் இஸ்லாமிய மக்கள் தொகையின் இந்த அதிகரிப்பு, இதே வேகத்தில் தொடர்ந்தால், 2030ம் ஆண்டில் இருக்கும் 8.3 பில்லியன் மக்கள் தொகையில் கால்வாசிக்கும் அதிகமானோர், அதாவது 26.4 விழுக்காட்டினர் இஸ்லாமியர்களாக இருப்பர். அதாவது 2030ல் உலக மொத்த மக்கள் தொகை, 2010ல் காணப்பட்ட 6.9 பில்லியனிலிருந்து 8.3பில்லியனாக அதிகரித்துவிடும் என்றும், இதில் 26.4விழுக்காட்டினர் இஸ்லாமியர்களாக இருப்பர் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளதாக அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
கடந்த கால சமூகப் பொருளாதார போக்கின் அடிப்படையிலும்,தற்போது அதிகரித்து வரும் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அடிப்படையிலும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் அந்த ஆய்வறிக்கை, இதே போக்கு நீடித்தால் 2030 ஆம் ஆண்டுவாக்கில் உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் வசிக்கும் நாடுகளின் எண்ணிக்கை தற்போதுள்ள 72 லிருந்து 79 ஆக அதிகரித்துவிடும் என்றும், அந்த 79 நாடுகளிலும் ஒரு மில்லியன் அல்லது அதற்கும் அதிகமான இஸ்லாமியர்கள் இருப்பார்கள் என்றும் கூறுகிறது.
மேலும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் இஸ்லாமியர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்றாலும், 2030 வாக்கில் வேறு எந்த ஐரோப்பிய நாடுகளைக் காட்டிலும் அமெரிக்காவில் அதிக இஸ்லாமியர்கள் இருப்பார்கள் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இடம்பெயர்தல் மற்றும் சராசரி விகிதத்தைவிட அதிக பிறப்புவிகிதம் ஆகியவையே அடுத்த இருபதாண்டுகளில், இஸ்லாமிய மக்கள் தொகை அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக அமையும் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
1990லிருந்து 2010வரை உலக இஸ்லாமிய மக்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு சராசரியாக 2.2 விழுக்காடு அதிகரித்து வந்துள்ளதும் தெரியவந்துள்ளதாக அந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் கூறுகின்றனர்.
இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு சொல்லப்பட்ட பொருந்தாத காரணம் :
மேற்கண்ட ஆய்வில் வேறு வழியின்றி இஸ்லாத்தின் வளர்ச்சியை அவர்களே ஒப்புக் கொண்டுவிட்டு அதற்குக் காரணம், “இடம்பெயர்தல் மற்றும் சராசரி விகிதத்தைவிட அதிக பிறப்புவிகிதம்” ஆகியவையே அடுத்த இருபதாண்டுகளில்,இஸ்லாமிய மக்கள் தொகை அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக அமையும் என்று கூறியுள்ளனர்.
இஸ்லாத்தின் அபரிமிதமான வளர்ச்சிக்கு இடம்பெயர்தல் மற்றும் சராசரி விகிதத்தைவிட அதிக பிறப்புவிகிதம் ஆகியனதான் காரணம் என்று இவர்கள் கூறியுள்ள காரணத்தை ஏற்றுக் கொள்ள இயலாது. காரணம் என்னவென்றால், முஸ்லிம்களை விட பெரும்பான்மையாக வாழும் சமுதாய மக்களும் அதிக அளவு இடம்பெயரத்தான் செய்கின்றனர். அப்படி இடம்பெயர்வதால் ஒரு பகுதியிலுள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைந்து மறுபகுதியில் உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை கூடுமே தவிர, ஒட்டுமொத்த உலகத்தில் உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை இதனால் அதிகரிக்காது.
உதாரணத்திற்கு இந்தியாவிலுள்ள ஒரு லட்சம் முஸ்லிம்கள் வேறு ஒரு நாட்டிற்கு குடிபெயர்கின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம்.அந்த நாட்டில் ஒரு லட்சம் முஸ்லிம்களின் எண்ணிக்கை கூடக்கூடிய அதே நேரத்தில், இந்தியாவில் ஒரு லட்சம் முஸ்லிம்கள் குறைந்து விடுவார்களா? இல்லையா?
இந்த ஒரு அடிப்படைகூட விளங்காமல், இஸ்லாத்தின் வளர்ச்சியைப் பொறுக்க முடியாமல் தவறான காரணத்தைக் கூறியுள்ளனர்.
இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு அளவுக்கதிகமான மக்கள் அலை அலையாய் இஸ்லாத்தில் இணைவதால்தான் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. அதன்மூலம்தான் உலகநாடுகளில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற உண்மையை ஊடகங்கள் மறைக்கப்பார்க்கின்றன.
இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு அதிக பிறப்பு விகிதம் காரணமா?
இஸ்லாமியர்களின் பிறப்பு விகிதம் அதிகமாக இருப்பதாலும் இந்த நிலை ஏற்படலாம் என்று காரணம் கூறியுள்ளனர். இதுவும் பொருந்தாத காரணமாகும்.
சிறுபான்மையாக உள்ள முஸ்லிம்களின் பிறப்பு விகிதத்தை விட பெரும்பான்மையாக உள்ள கிறித்தவர்களின் பிறப்பு விகிதம்தான் அதிகமாக இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு முஸ்லிம்கள் மட்டும் குழந்தைகளை அதிகமாக பெற்றுக்கொண்டு போகின்றார்கள் என்பது போன்ற ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர்.இதுவும் பொருந்தாத பொய்யான காரணமாகும்.
அளவுக்கதிகமான மக்கள் இஸ்லாத்தைத் தழுவி வருகின்றார்கள் என்று சொன்னால் அது அவர்களுக்கு பின்னடைவு என்பதால் இந்தப் பொருந்தாத காரணங்களைக் கூறி சப்பைகட்டு கட்டுகின்றனர் என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.
இப்படியெல்லாம் இஸ்லாத்தின் வளர்ச்சி குறித்து புள்ளி விபரங்கள் வந்தால் இஸ்லாமிய எதிரிகள் சும்மா இருப்பார்களா? அல்லது கதிகலங்கிப்போய் போராட்டத்தில் குதிப்பார்களா? அதனுடைய பிரதிபலிப்புதான் இந்தப் போராட்டங்கள்.
ஆனால், இவர்கள் இத்தகைய போராட்டங்களை நடத்தி இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுத்து விடலாம் என்று பகல் கனவு காண்கின்றார்கள். அது நடக்குமா? அவர்களது இந்த அல்ப ஆசை நிறைவேறுமா? நிறைவேறவே நிறைவேறாது என்று நாம் அடித்துச் சொல்லலாம். ஏன் தெரியுமா?
இது படைத்த இறைவனின் மார்க்கம். இஸ்லாத்தை நமக்களித்த வல்ல நாயன் தனது திருமறையில் சொல்லிக்காட்டுகின்றான் :
இஸ்லாத்திற்கு அழைக்கப்படும் நிலையில் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டுபவனை விட மிகப் பெரிய அநீதி இழைப்பவன் யார்? அநீதி இழைக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.
அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துபவன்.
இணை கற்பிப்போர் வெறுத்த போதிலும் அனைத்து மார்க்கங்களை விட மேலோங்கச் செய்வதற்காக அவனே தனது தூதரை நேர் வழியுடனும், உண்மை மார்க்கத்துடனும் அனுப்பினான்.
அல்குர்-ஆன் 61 : 7,8,9
இஸ்லாத்தினுடைய வளர்ச்சியைக் கண்டித்து இவர்கள் போராட்டம் நடத்துகின்றார்கள். ஆனால், இவர்கள் நடத்தக்கூடிய போராட்டங்கள் வாயிலாகக்கூட இந்த சத்திய மார்க்கத்தை நோக்கி அல்லாஹ் மக்களை திரும்பிப்பார்க்க வைப்பான் என்று அவர்களுக்குத் தெரியவில்லை போலும். அவர்கள் எவ்வளவுதான் முயற்சித்தாலும் தன்னுடைய ஒளியை அல்லாஹ் முழுமைப்படுத்தியே தீருவான் என்ற இறைவசனம் இத்தகைய நிகழ்வுகளின் வாயிலாக உண்மையாகி வருகின்றது.
அல்ஹம்துலில்லாஹ்..
தகவல் : டிஎன்டிஜெடாட்நெட்
0 comments:
Post a Comment