அம்பாறை மாவட்டம் சம்மாந்துறையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும், சம்மாந்துறை பிரதேச சபையின் உறுப்பினரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான எஸ்.எம்.எம்.முஸ்தபாவின் வீடு மீது நள்ளிரவில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமானது ஓர் அச்சுறுத்தலாக இருக்கலாமென நம்பப்படுகிறது.
நேற்று சனிக்கிழமை இரவு முஸ்லிம் காங்கிரஸ் பிரசாரக் கூட்டத்தில் முஸ்தபா இருந்து கலந்து கொண்டிருந்த போது இரவு 12 மணியளவில் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக அவருக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக வீட்டுக்கு வந்தபோது அங்கு வீட்டிற்கு முன்னால் உள்ள வீதியில் வெற்று ரவையும் இரத்தக் கறையும் காணப்பட்டது.
உடனே சம்மாந்துறைப் பொலிஸாரிடம் அவர் முறையிட்டார் அவர்கள் நள்ளிரவு ஒரு மணியளவில் விரைந்து வந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை அம்பாறையிலிருந்து விசேட புலனாய்வுப் பிரிவினர் வந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
சம்மாந்துறைப் பொலிஸ் பொறுப்பதிகாரி தஹநாயக மற்றும் விசேட பிரிவுப் பொறுப்பதிகாரி அமரசேகர உள்ளிட்ட குழுவினர் புலன் விசாரணைகளை மேற்கொண்டதோடு தடயப்பொருட்களையும் கொண்டு சென்றனர்.
சட்டத்தரணி முஸ்தபா எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சம்மாந்துறை சார்பாக முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment