அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதியாக தெரிவாகுவதற்கான முயற்சியில் தீவிரமாக உள்ள நிலையில் அவரின் சகோதரரான ஜோர்ஜ் ஒபாமா, கென்யாவின் சேரிபுறக் குடியிருப்பொன்றில் வசித்து வருகிறார்.
ஒபாமாவின் தந்தையின் பெயரும் பராக் ஒபாமா என்பது குறிப்பிடத்தக்கது. கென்யாவைச் சேர்ந்த பராக் ஒபாமா சீனியருக்கும் அமெரிக்கப் பெண்ணான ஆன் டன்ஹாமுக்கும் பிறந்தவர்தான் தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஹுஸைன் ஒபாமா.
ஓபாமா சீனியர் பின்னர் தாயகம் திரும்பி, கென்ய பெண்களை திருமணம் செய்து வாழ்ந்தார். ஒபாமா சீனியரின் நான்காவது மனைவியின் மகன்தான் ஜோர்ஜ் ஒபாமா.
30 வயதான ஜோர்ஜ் ஒபாமா முன்னர் போதைப் பொருட்களுக்கு அடிமையாக இருந்தவர்.
அயலவர்கள் அவரை ஜனாதிபதி, ஜனாதிபதி என அழைக்கின்றனராம். சேரிகளிலுள்ள மக்களுக்கு குறிப்பாக சிறார்களுக்கு உதவுவதற்காக அவர் இச்சேரியில் வசிக்கத் தீர்மானித்தாராம்.
தன்னை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுமாறு பலர் வலியுறுத்துவதாகவும் ஆனால் தனக்கு அரசியலில் ஆர்வமில்லை எனவும் ஜோர்ஜ் ஒபாமா தெரிவித்துள்ளார்.
தனது சகோதரர் உலகின் மிக சக்திவாய்ந்த நாட்டின் தலைவான போதிலும் தனது இலக்கு சேரிகளிலுள்ள வறியமக்களின் தலைவாக விளங்குவதே எனவும் தனக்கு அரசியலில் ஆர்வமில்லை எனவும் ஜோர்ஜ் ஒபாமா கூறியுள்ளார்.
தனது பெயரில் ஒபாமா ஒட்டிக்கொண்டிருப்பது தனக்கு சுமையாகவே உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பராக் ஒபாமா சீனியர் கார் விபத்தொன்றில் இறந்தபின், அமெரிக்க செனட்டராக விளங்கிய ஒபாமா ஜுனியர் கென்யாவுக்கு விஜயம் செய்தபோது தனது தந்தையின் குடும்பத்தினரையும் சந்தித்தார்.
தனது வறுமை நிலையானது பராக் ஒபாமாவுடன் நெருங்கிய உறவை பேணுவதற்கு தடையாக உள்ளது என அவர்கூறுகிறார்.
"பராக் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்து, நானும் கென்ய ஜனாதிபதியாக இருந்தால் இருவரும் சந்திப்பது இலகுவாக இருக்கும். அவருக்கு பொறுப்புகள் உள்ளன. அவர் எனக்கு பணம் அனுப்ப வேண்டியதில்லை நான் வளர்ந்தவன். அவர் எனக்கு பணம் அனுப்புவதாக அனைவரும் கருதுகின்றனர். ஆனால் நான் பிச்சைக்காரன் இல்லை" என ஜோர்ஜ் ஒபாமா தெரிவித்துள்ளார். அதேவேளை, பராக் ஒபாமா பணம் அனுப்பினால் தான் ஏற்றுக்கொள்வார் எனவும் கூறியுள்ளார்.
thanks to tamilmirror
0 comments:
Post a Comment