Home » » விடுபட்ட நோன்புகளை வைத்துவிட்டீர்களா?

விடுபட்ட நோன்புகளை வைத்துவிட்டீர்களா?

Written By STR Rahasiyam on Monday, July 2, 2012 | 5:37 AM


நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. அல்குர்ஆன் 
2:184


என்கிற இறைவசனத்திற்கு ஏற்ப முஃமின்களின் மீது ரமலான் மாதம் நோன்பு வைப்பது கடமை என்பதை அறிவோம்.
ரமலான் மாதம் நோன்பை தற்காலிகமாகவும்,நிரந்தரமாகவும் விடுவதற்கு அல்லாஹ் சிலருக்கு சலுகை அளித்துள்ளான்.
1. தள்ளாத வயதினர்
இவர்கள் நிரந்தரமான விதிவிலக்குப் பெற்றவர்கள். முதுமையின் காரணமாக நோன்பு நோற்க இயலாத நிலையில் உள்ளதால் எதிர் காலத்தில் நோன்பைக் களாச் செய்ய இவர்களால் இயலாது. ஏனெனில் எதிர் காலத்தில் மேலும் அதிக முதுமையில் இவர்கள் இருப்பார்கள்.
இவர்கள் நோன்பை விட்டு விடலாம். அதற்குரிய பரிகாரத்தைச் செய்ய வேண்டும்.
நோன்பு நோற்கச் சக்தி பெற்றவர்கள் ஒரு ஏழைக்கு உணவளிப்பது அவசியம் என்ற (2:184) வசனம் பற்றி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறும் போது, இது முழுமையாக மாற்றப்படவில்லை. நோன்பு நோற்கச் சக்தியற்ற கிழவர்கள், கிழவிகள் ஒரு நாள் நோன்புக்குப் பதிலாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்று விளக்கம் அளித்துள்ளனர். நூல்: புகாரி 4505
2. நோயாளிகள்
நோயாளிகளிலும் இரண்டு வகையினர் உள்ளனர். கேன்சர் போன்ற தீராத நோய் உடையவர்களும் இருப்பார்கள். நிவாரணம் பெறக் கூடிய நோய்களுக்கு ஆளானவர்களும் இருப்பார்கள்.
தீரக் கூடிய நோய்களுக்கு ஆளானவர்கள் நோன்பை விட்டு விட்டு, நோய் தீர்ந்தவுடன் வேறு நாட்களில் அந்த நோன்புகளை நோற்று விட வேண்டும்.
நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம்.
அல்குர்ஆன் 2:184
பயணம் செய்வோர் வேறு மாதங்களிலும் நோற்கலாம் என்று கூறியது போல் நோயாளிகள் விஷயத்தில் அல்லாஹ்வும், அவனது தூதரும் கூறவில்லை.
தீராத நோய்களுக்கு ஆளானவர்கள் இன்னொரு நாளில் நோற்க இயலாது. ஏனெனில் தீராத நோய் மேலும் அதிகப்பட்டிருக்கும். இவர்கள் விட்ட நோன்பிற்காக ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்று நேரடியான ஆதாரம் ஏதுமில்லை.
ஆயினும் முதியவர்களின் நிலையுடன் இவர்களது நிலை ஒத்திருப்பதால் இவர்களும் ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர். நேரடியான ஆதாரம் இல்லாத நிலையில் இதைக் கட்டாயப்படுத்த முடியாது என்றாலும் பேணுதலுக்காக இதை ஏற்றுச் செயல்படலாம்.
3. பயணிகள்
பயணிகளுக்கு அல்லாஹ் சலுகை வழங்கியுள்ளான்.
நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம்.
அல்குர்ஆன் 2:184
இந்தச் சலுகை தற்காலிகமானது தான். ரமலானுக்குப் பிறகு நோன்பை வைக்கவேண்டும்.
4. மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள்
மாதவிடாய்க் காலத்தில் பெண்கள் நோன்பை விட்டு விடச் சலுகை பெற்றுள்ளனர். சலுகை மட்டுமின்றி மாதவிடாய் நேரத்தில் நோன்பைக் கண்டிப்பாக விட்டு விட வேண்டும் என்றும், விடுபடும் நோன்பை வேறு நாட்களில் நோற்று விட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இருந்த காலத்தில் மாதவிடாய் ஏற்பட்டுத் தூய்மையடைவோம். அப்போது விடுபட்ட நோன்பை களாச் செய்யுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிடுவார்கள். விடுபட்ட தொழுகைகளை களாச் செய்யுமாறு கட்டளையிட மாட்டார்கள்.
அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் 508
மாதவிடாய்க் காலம் என்பதைப் பற்றிப் பெரும்பாலான பெண்கள் தவறாகவே விளங்கி வைத்துள்ளனர். மாதவிடாய் என்பது உடற்கூறு, வாழ்கின்ற பிரதேசம், உணவுப் பழக்கம், வயது ஆகியவற்றைப் பொறுத்து வித்தியாசப்படும். எல்லோருக்கும் ஒரே மாதிரியான கணக்கில் மாதவிடாய் வெளிப்படாது.
சில பெண்களுக்கு ஓரிரு நாட்களிலேயே மாதவிடாய் ஏற்பட்டு நின்று விடும். இவர்கள் மாதவிடாய் நின்றவுடன் நோன்பு நோற்க வேண்டும். இன்னும் ஒரு வாரம் ஆகவில்லையே என்றெல்லாம் நினைக்கக் கூடாது.
அது போல் சில பெண்களுக்குப் பதினைந்து நாட்கள் கூட மாதவிடாய் நீடிக்கலாம். அவர்கள் பதினைந்து நாட்களும் நோன்பை விட்டு விட வேண்டும். இந்த விஷயத்தில் பல பெண்கள் அறியாமையிலேயே உள்ளனர்.
மேலும் பெண்களிடம் இன்னொரு அறியாமையும் உள்ளது.
புனிதமிக்க ரமளான் மாதத்தில் நோன்பை விடக் கூடிய நிலைமை ஏற்படுகிறது என்று எண்ணி மாதவிடாயைத் தள்ளிப் போடச் செய்யும் மாத்திரைகளை சில பெண்கள் உட்கொள்கிறார்கள். ஹஜ்ஜின் போதும் இது போன்று நடந்து கொள்கிறார்கள்.
அல்லாஹ் பெண்களுக்கு இயற்கையாக வழங்கியுள்ள தன்மையை மாற்றுவது அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றுத் தராது என்பதை இவர்கள் உணர வேண்டும்.
5. கர்ப்பிணிப் பெண்களுக்கும்பாலூட்டும் அன்னையருக்கும் சலுகை உண்டு
குழந்தைகளுக்குப் பாலூட்டும் தாய்மார்களும், கர்ப்பமாக இருக்கும் பெண்களும் தற்காலிகமாக நோன்பை விட்டு விடுவதற்குச் சலுகை பெற்றுள்ளனர்.
கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் அன்னையருக்கும் நோன்பிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சலுகையளித்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: நஸயீ 2276
இவர்கள் ரமளானில் நோன்பை விட்டு விட்டு வேறு நாட்களில் நோற்று விட வேண்டும்.
விடுபட்ட நோன்பை களாச் செய்வது எப்போது?
மேற்கண்ட சலுகைகளைப் பெற்றவர்கள் விடுபட்ட நோன்பை எவ்வளவு நாட்களுக்குள் களாச் செய்ய வேண்டும்?
இதற்கு மார்க்கத்தில் எந்தக் காலக் கெடுவும் விதிக்கப்படவில்லை. வேறு நாட்களில் நோற்று விட வேண்டும் என்று மட்டுமே திருக்குர்ஆன் கூறுகிறது.
ரமளான் மாதத்தில் சில நோன்புகள் தவறி விடும். அதை ஷஅபான் மாதத்தில் தான் என்னால் நோற்க முடியும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகளே இதற்குக் காரணம் என்று அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.
நூல்: புகாரி 1950
ஷஅபான் மாதம் என்பது ரமளானுக்கு முந்தைய மாதமாகும். ஒரு ரமளானில் விடுபட்ட நோன்பை மறு ரமளானுக்கு முந்தைய மாதம் வரை தாமதப்படுத்தி ஆயிஷா (ரலி) களாச் செய்துள்ளார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலேயே இது நடந்துள்ளதால் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கீகரித்துள்ளார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.
விடுபட்ட நோன்பைக் களாச் செய்வதற்கு குறிப்பிட்ட காலக் கெடு எதுவும் இல்லை என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
ஆயினும் மரணத்தை எதிர் நோக்கியவனாக மனிதன் இருக்கிறான். எந்த நேரத்திலும் மரணம் அவனை அடைந்து விடலாம். நோன்பை விட்டவர்களாக நாம் மரணித்தால் என்னவாகும் என்பதற்கு அஞ்சி, எவ்வளவு சீக்கிரம் நிறைவேற்ற முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நிறைவேற்றி விடுவது சிறந்ததாகும்.
விடுபட்ட நோன்பை வைத்துவிட்டீர்களா?
இவ்வாறு நோன்பு நோற்க விதிவிலக்கு பெற்றவர்கள் ரமலான் முடிந்தவுடன் நோன்பை களாச் செய்ய வேண்டும் என்பதை அல்லாஹ்வும்,அல்லாஹ்வுடைய தூதரும் கட்டளையிட்டுள்ளார்கள் என்பதை அறிந்தோம்.
இதை நம் இஸ்லாமிய மக்கள் பொடுபோக்குத் தனமாக விட்டுவிடுகிறார்கள். குறிப்பாக மாதவிடாய் ஏற்பட்ட சில பெண்கள் இந்த சட்டத்தை கூட விளங்காமல் உள்ளனர். கடமையான நோன்பை நாம் வைக்காமல் மரணித்தால் அல்லாஹ்விடம் குற்றவாளியாகிவிடுவோம் என்பதை அறிந்து விடுபட்ட நோன்பை நாம் அனைவரும் வைத்து நன்மை பெறுவோமாக!
இந்த செய்தியை இங்கே Facebook , Twitter மூலம் பகிர்ந் மார்க்க பணிக்கு உதவுங்கள்.
Share this article :

0 comments:

Post a Comment


உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை இலவசமக உங்கள் கைத்தொலைபேசி மூலம் பெற்றுக் கொள்ளுங்கள். Follow <இடைவெளி> strfn என டைப் செய்து 40404க்கு SMS அனுப்புங்கள்

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. www.strfn.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger