2011 க.பொ.த.உயர்தரப் பரீட்சையின் திருத்தியமைக்கப்பட்ட புதிய இசற் புள்ளிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதில் திருப்தியில்லாது எதிர்வரும் உயர்தரப்பரீட்சைக்கு தோற்ற விரும்பும் மாணவர்களிடமிருந்து பரீட்சைகள் திணைக்களம் விண்ணப்பங்களை கோரியுள்ளது.
இதன்படி இன்று 23 ஆம் திகதி முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் தொலைநகல் (பெக்ஸ்) மூலம் தமது விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கேட்டுள்ளது.
பழைய மற்றும் புதிய பாட விதானங்களுக்கு அமைவாக பரீட்சைக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க முடியுமெனவும் அவர்கள் பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தில் அதற்கான விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட பரீட்சார்த்திகள் விண்ணப்பத்தை உரியவாறு நிரப்பி, பரீட்சைக் கட்டணத்தை அஞ்சலகத்தில் செலுத்திய பின் கிடைக்கும் காசுக்கட்டளை பற்றுச் சீட்டை விண்ணப்பத்தில் அதற்காக விடப்பட்டுள்ள இடத்தில் ஒட்டியும், பாடசாலை பரீட்சார்த்திகள் அதிபரின் ஊடாக பாடசாலை விண்ணப்பத்தின் மூலமும் 0112785220,0112785779,0112784422,0112785013,0112177411 என்ற தொலைநகல் இலக்கங்களில் ஒன்றிற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இதேவேளை மூலப் பிரதிகளை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், பாடசாலைப் பரீட்சைகள் ஒழுங்கமைப்பு கிளை, இலங்கை பரீட்சைகள் திணைக்களம், த.பெ.எண் 1503, கொழும்பு என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பரீட்சை பிரவேசப் பத்திரங்களை தொலைநகல் மூலம் பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பங்களின் தொலைநகல் எண்களை தெளிவாகக் குறிப்பிட்டு அனுப்புமாறு பரீட்சைகள் திணைக்களம் பரீட்சார்த்திகளிடம் கேட்டுக்கொள்கின்றது.
இது தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள 1911, 0112784208, 0112784537 ஆகிய தொலைபேசி எண்களுடன் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment