மூதூர் 64 ஆம் கட்டை மலையில் புத்தர் சிலை அமைக்கப்படுவது உறுதியாகியுள்ளது. தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களம் சேருவில தேரருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில் பின்வரும் விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மூதூர் 64 ஆம் கட்டை மலையில் குடிநீர் வசதி ஏற்படுத்துதல், மலையில் படிக்கட்டு நிறுவுதல், மலையில் தங்குமிட வசதி ஏற்படுத்துதல், அத்துடன் மூதூர் முஸ்லிம் பிரதேசம் என்ற வகையில் கண்ணாடி பெட்டிக்குள் இரண்டரை அடி புத்தர் சிலையை (பைபர் உலோகத்தில்) அமைத்தல், உள்ளிட்ட விடயங்களுக்கும் தொல்பொருள் ஆராய்ச்சி நிலையை அனுமதியளித்துள்ளதாக யாழ் முஸ்லிம் இணையத்திற்கு அறியவருகிறது.
இதேவேளை மூதூரில் புத்தர் சிலையை நிறுவ மேற்கொள்ளப்படும் நடவடிக்கையை சட்டரீதியாக எதிர்கொள்ள தாம் முயன்று வருவதாக மூதூர் பிரதேச சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் அஷ்ஷெஹ் ஜவாப்தின் ஜெஸ்ரி குறிப்பிட்டார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
அண்மையில் மூதூர் பிரதேச சபையில் நடைபெற்ற கலந்துரையாடலொன்றிலேயே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. பிரதேசத்தில் பௌத்த ஆதிக்கம் நிலவுவதை இங்குள்ள முஸ்லிம்கள் விரும்பவில்லை. இதனை முஸ்லிம் சமூகம் நிதானமான முறையிலேயே எதிர்கொள்ளவேண்டும். உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வாழும் முஸ்லிம்கள் தமது இருப்புக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யவேண்டுமென்றும் அவர் மேலும் கூறினார்.
மேலும் அண்மையில் சேருவில பௌத்த தேரரை சந்தித்தபோது குறித்த மலையில் நாங்கள் புத்தர் சிலையை அமைப்பதால் முஸ்லிம்களுக்கு என்ன வந்திடப்போகிறது என அவர் கேள்வியெழுப்பியதாகவும் ஜெஸ்ரி யாழ் மஸ்லிம் இணையத்திற்கு சுட்டிக்காட்டினார்.
0 comments:
Post a Comment