வீட்டுப் பணிப்பெண்ணாக சவூதி அரேபியாவுக்குச் சென்றிருந்த மட்டக்களப்பு, வாகரைப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் வலது கால் உடைந்த நிலையில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை நாடு திரும்பியுள்ளார்.
வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பனிச்சங்கேணி கிராமத்தைச் சேர்ந்த வேலுப்பிள்ளை சின்னக்கண்டு (வயது 44) என்பவரே இவ்வாறு நாடு திரும்பியுள்ளார். பணிப்பெண்ணாக கடந்த 2011ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி இவர் சவூதி அரேபியாவுக்குச் சென்றிருந்தார்.
இது தொடர்பாக அப்பெண் தெரிவிக்கையில்,
'வீட்டு எஜமானியால் நான் துன்புறுத்தப்பட்டேன். எனக்கு உணவு ஒழுங்காக வழங்கப்படுவதில்லையென்பதுடன், 7 மாதங்களாக எனக்கான சம்பளமும் வழங்கப்படவில்லை.
012.04.25ஆம் திகதி நான் வேலை செய்த வீட்டின் இரண்டாவது மாடி ஜன்னல் கண்ணாடியை துடைத்துக்கொண்டிருந்தபோது, வீட்டு எஜமானி எனது தலையைப் பிடித்து ஜன்னலில் அடித்ததார். இதன்போது ஜன்னல் வழியாக மாடியிலிருந்து நான் கீழே விழுந்தேன். இதனைத் தொடர்ந்து நான் வாடகை வாகனத்தில் இலங்கைத் தூதரகத்திற்குச் சென்று 2 மாதங்கள் அங்கிருந்து சிகிச்சை பெற்று தூதரகத்தின் உதவியுடன் இலங்கை வந்தேன்' என்றார்.
சிகிச்சை பெறுவதற்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இப்பெண், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
0 comments:
Post a Comment