காத்தான்குடியில் 3.8.1990ல் காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும் ஆ பள்ளிவாயல் மற்றும் ஹுஸைனிய்யா பள்ளிவாயல் ஆகிய இரண்டு பள்ளிவாயல்களில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 103 முஸ்லிம்கள் தமிழீழ விடுதலைப்புலிகளினால் படுகொலை செய்யப்பட்ட நாளே ஷுஹதாக்கள் தினமாகும்.
நாளை 22வது ஷுஹதாக்கள் தினம் காத்தான்குடியில் அனுஷ்டிக்கப்படவுள்ளது. நாளைய ஷுஹதாக்கள் தினத்தையொட்டி காத்தான்குடியில் பல் வேறு வைபவங்கள் நடைபெறவுள்ளன. நாளை காலை 9 மணிக்கு காத்தான்குடி முதலாம் குறிச்சி ஹுஸைனிய்யா பள்ளிவாயலில் குர் ஆண் ஓதும் நிகழ்வும் அத்தோடு ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஷுஹதாக்கள் குடும்பத்திற்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வும் நடைபெறவுள்ளது.
இதையடுத்து நாளை பிற்பகல் அஸர் தொழுகையின் பின்னர் காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும் ஆ பள்ளிவாயலில் குர் ஆண் ஓதும் நிகழ்வும் அத்தோடு துஆ பிராத்தனை மற்றும் விஷேட உரையும் இப்தார் நிகழ்வும் நடைபெறவுள்ளது.
NANRI-Kilakku muslim“(யாவரையும்) மிகைத்தவனும், புகழுடையோனுமாகிய அல்லாஹ்வின் மீது அவர்கள் ஈமான் கொண்டார்கள் என்பதற்காக அன்றி வேறெதற்கும் அவர்களைப் பழி வாங்கவில்லை. வானங்கள், பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது; எனவே அல்லாஹ் அனைத்துப் பொருள்கள் மீதும் சாட்சியாக இருக்கிறான்.”“நிச்சயமாக, எவர்கள் முஃமினான ஆண்களையும், முஃமினான பெண்களையும் துன்புறுத்திப் பின்னர், தவ்பா செய்யவில்லையோ அவர்களுக்கு நரக வேதனை உண்டு; மேலும், கரித்துப் பொசுக்கும் வேதனையும் அவர்களுக்கு உண்டு”. (85:8,9)“சாந்தியடைந்த ஆத்மாவே! நீ உன்னுடைய இறைவன்பால் திருப்தி அடைந்த நிலையிலும், (அவன்) உன்மீது திருப்தியடைந்த நிலையிலும் மீளுவாயாக. நீ என் நல்லடியார்களில் சேர்ந்து கொள்வாயாக. மேலும், நீ என் சுவர்க்கத்தில் பிரவேசிப்பாயாக” ( 89 – 27-30)எண்பதுகளின் பிற்பகுதிகளிலும் தொண்ணூறுகளிலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண முஸ்லிம்களின் மீது பாசிச தமிழீழ விடுதலைப் புலிப் பயங்கரவாதிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்ட இனச்சுத்திகரிப்பு மற்றும் இனப்படுகொலை நடவடிக்கைகளின் முக்கிய அங்கமாக 1990 ஆகஸ்ட் 03ம் திகதி காத்தான்குடியின் மீரா ஜும்மாஹ் பள்ளிவாயல் மற்றும் ஹுஸைனியா தைக்காப் பள்ளிவாயல் ஆகியவற்றில் இரவு நேரத் தொழுகையான இஷாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த மற்றும் தயாராகிக்கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது காட்டுமிராண்டித் தனமாக துப்பாக்கி, சிறிய ரக ஆயுதங்கள் மட்டும் கைக்குண்டுகளைப் பயன்படுத்தி நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களால் 103 முஸ்லிம்கள், LTTE பயங்கரவாதிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இத்தினம் ஷுஹதாக்களின் நினைவாக ஷுஹதாக்கள் தினமாக வருடாந்தம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.நூற்று மூன்று பேர் இவ்விரு பள்ளிவாயல்களிலும் ஷஹீதாக்கப்பட்டதோடு கிட்டத்தட்ட இதே எண்ணிக்கையானோர் காயங்களுக்கு இலக்கானார்கள். இன்றும் மீரா ஜும்மாஹ் பள்ளிவாயல் சுவர்களிலும் கொங்ரீட் தூண்களிலும் காணப்படும் அடையாளங்களைப் பார்வையிடும் எவரும் இந்தத் தாக்குதல்களின் கோரத்தன்மையை விளங்கிக்கொள்ள முடியும். மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த அந்த இரவில் மட்டக்களப்புக்கு பயணம் செய்ய ஏற்படுத்தப்பட்டிருந்த தடைகளாலும், இவ்வாறான பாரிய சேதங்களின் போதான சிகிச்சைகளை வழங்கும் வசதிகள் எம்மூரில் இல்லாததாலும் ஓரிரு காயங்களைக் கொண்டிருந்தோர் கூட இரத்தப்பெருக்கு காரணமாக மரணமடிய வேண்டிய நிலை ஏற்பட்டது. எல்லாம் இறைவனின் நாட்டம். தனது இல்லத்தில் தன்னை வணங்கிக் கொண்டிருந்த அடியார்களை உயர்தரமான ஷஹீதுகளாக அல்லாஹ் ஏற்றுக்கொண்டான்.இன்று இருபது வருடங்கள் கடந்து விட்ட போதும், காத்தான்குடி மக்களின் மனதுகளில் தெளிவாக நினைவில் இருக்கும் வழிகளையும் வேதனைகளையும் விட்டுச் சென்ற இந்நிகழ்வு வழமை போலவே நினைவு கூறப்படுகின்றது. அரசியல் நாடகங்களினதும் சந்தர்ப்பவாதக் கூட்டுகளினதும் கேவலமான விளைவுகளாக பாசிசப் புலிப் பயங்கரவாதிகளின் தாக்குதல் காலத்து கட்டளை மற்றும் பிராந்தியத் தளபதியாக விளங்கியவரை அதே பள்ளிவாயலுக்கு கூட்டிவந்து பொன்னாடை போர்த்தி கௌரவித்தமை மற்றும் இப்போது தான் எல்லாம் முடிந்து விட்டதே பள்ளிவாயலில் உள்ள தடங்களைத் திருத்தி விடலாம் என்பது போன்ற வரலாற்றை அதன் தடங்களை மறைத்து திரிபுபடுத்துவதற்கான காய்நகர்த்துதல்களுக்கு மத்தியில் இன்றைய ஷுஹதாக்கள் தின நிகழ்வுகள் அமைகின்றன என்றால் மிகையாகாது.எவ்வாறாயினும் எமது சமூகத்தால் எப்போதும் மறக்கப்பட முடியாததாகவே இந்நிகழ்வு பார்க்கப்படுகின்றது. புலிப் பயங்கரவாதிகளின் எச்சங்களாலும் அவர்தம் அடிவருடிகளான உயர் அரச அதிகாரிகளாலும் தொடர்ந்தும் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் இன ரீதியான நெருக்குதல்கள் மற்றும் ஒடுக்குதல்களில் எவ்வித குறைவும் இல்லாத நிலையில், முதுகெலும்பில்லாத எமது அரசியலாளர்கள் குண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டி கிராம சேவகர் பிரிவுகளில் மாற்றம் ஏற்படுத்துவதை சாதனையாகப் பிரஸ்தாபித்துக்கொண்டு திரிகின்றனர். மாவட்டத்தில் முஸ்லிம்கள் வசிக்கும் மிகச்சொற்பளவு நிலங்களிலும் கையாடல் செய்வதற்கான முயற்சிகள் உரிய ஆசீர்வாதங்களோடு வலுத்து வருகின்றன. உதாரணங்களைப் பட்டியலிட முடியுமாயினும், இக்கட்டுரையின் நோக்கம் இன்றைய காலகட்ட நிலைகளை ஷுஹதாக்கள் நினைவு தினத்தோடு தொடர்புபடுத்தி அலசுவதேயாகும் என்பதால் அவ்வாறு செய்யப்படவில்லை. அண்மைய நிலப்பிரச்சினை உண்ணாவிரத நாடகத்துக்கு இட்டுச் சென்ற முக்கிய காரணியான மாற்று அரசியல் குழுவின் தூர நோக்கற்ற செயற்பாடு, எமது அரசியல் அனைத்துத் தளங்களிலும் இருந்ததாகவும் எதிர் தரப்பை எவ்வாறாவது எதிர்ப்பதையும் நோக்காகக் கொண்டுள்ளதாகவே அமையவுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டுகின்றது. இவ்வாறான குரோத அரசியல் வங்குரோத்துத் தனம் மக்களுக்கு பெரிதாக எதையும் செய்துவிடப் போவதில்லை.ஆனாலும், தொடர்ந்து வரக்கூடிய இவ்வாறான திட்டமிடப்பட்ட பிரச்சனைகளை எதிர்கொள்ளவும், வரலாற்றை வருங்கால சந்ததிகளுக்கு சரியாக அறிவிக்கவும் கூடிய ஒழுங்குகள் அரசியல் வட்டங்களுக்கு வெளியே மேற்கொள்ளப்பட வேண்டயது அவசியமானதொன்றாகும். மன்னிப்போம் மறக்க மாட்டோம் என்ற ஒரு கோசம் கடந்த கால ஷுஹதாக்கள் தினங்களின் போது முன்வைக்கப்பட்டது. மன்னிப்பதற்கு அவ்வாறான கோரிக்கை எதுவும் தமிழ்த் தரப்பிடமிருந்து இவ்விடயம் தொடர்பிலோ அல்லது முஸ்லிம்களின் மீது இழைக்கப்பட்ட திட்டமிட்டு ஒழுங்குபடுத்தப்பட்ட அநீதிகளின் மீதோ வந்துவிடவில்லை என்பதை நாம் கவனக்க வேண்டும். ஆயினும், மறக்க மாட்டோம் எனும் விடயம் வரவேற்கத்தக்கது. எமது பள்ளிவாயல்களில் நிராயுதபாணிகளான, இறைவனை வணங்கிக்கொண்டிருந்த மக்களின் பின்புறமிருந்து துப்பாக்கிப் பிரயோகம் செய்து இனப்படுகொலையை மேற்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் வீர வரலாற்றையோ அல்லது இதையொத்த ஏனைய செயற்பாடுகளையோ நாம் யாரும் எப்போதும் மறக்கக் கூடாது. அத்துடன் முடியுமான வரையில் இது தொடர்பான விடயங்களை சாத்தியமான அனைத்து வகைகளிலும் பகிரங்கப்படுத்துவதோடு, எமது வருங்கால சந்ததிக்கு இது தொடர்பில் பூரண அறிவூட்டலை வழங்குவது அவசியமானதொன்றாகும்.20வது ஆண்டு ஷுஹதாக்கள் தினத்தையொட்டி இன்று காலை காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்மா பள்ளிவாயலில் குர்ஆன் ஓதுதல் மற்றும் பிராத்தனை என்பன இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதே நேரம் ஷுஹதாக்களின் நினைவாக அவர்களின் குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் மீரா பள்ளிவாயலினால் நேற்று மாலை வழங்கப்பட்டன.ஆண்டு தோறும் அமைதியான முறையிலும் யாருக்கும் பாதிப்பற்ற வகையிலும் இந்த ஷுஹதாக்கள் நினைவு தினத்தை நாம் அனுஷ்டிப்பதோடு மரணித்தவர்களுக்காக பிரார்த்தனைகளிலும் ஈடுபட்டு வருவதற்கான நிலைமைகளை அல்லாஹ் எமக்கு ஏற்படுத்தித் தருவானாக.
0 comments:
Post a Comment